
சென்னை: சொகுசு கார் வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக கேரளா மற்றும் தமிழ்நாடு முழுவதும் நடிகர்கள் துல்கர் சல்மான், பிருத்விராஜ் வீடுகள் உட்பட 17 இடங்களில் அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தின் (FEMA) கீழ் அமலாக்கத் துறை சோதனைகளை நடத்தி வருகிறது.
சொகுசு கார் வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக வருவாய் புலனாய்வு மற்றும் சுங்கத் துறை அதிகாரிகள் ‘ ஆபரேஷன் நும்கோர்' என்ற பெயரில் நாடு தழுவிய நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இதன் அடிப்படையில், திரைப்பட நடிகர்கள் துல்கர் சல்மான், பிருத்விராஜ் மற்றும் அமித் சக்கலக்கலின் வீடுகள் மற்றும் நிறுவனங்கள், எர்ணாகுளம், திருச்சூர், கோழிக்கோடு, மலப்புரம், கோட்டயம் மற்றும் கோயம்புத்தூரில் உள்ள சில வாகன உரிமையாளர்கள், ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் உட்பட 17 இடங்களில் அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தின் (FEMA) கீழ் கொச்சி மண்டல அமலாக்கத் துறை சோதனைகளை நடத்தி வருகிறது. கொச்சியில் பனம்பிள்ளி நகரில் உள்ள நடிகர் மம்மூட்டியின் பழைய இல்லமான மம்மூட்டி ஹவுஸில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.