
இந்திய அணி கடந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியா சென்று விளையாடிய பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் கடைசி போட்டியில் முதல் இன்னிங்ஸின்போது ஜஸ்பிரித் பும்ராவுக்கு முதுகில் காயம் ஏற்பட்டது.
காயம் காரணமாக இரண்டாவது இன்னிங்ஸில் பந்துவீசவே அவர் வரவில்லை. அப்போதே, அவரின் பவுலிங் ஆக்ஷனைக் குறிப்பிட்டு, “இன்னொருமுறை காயம் ஏற்பட்டால் பும்ராவின் கிரிக்கெட் கரியரே அவ்வளவுதான்” என ஷேன் பாண்ட் உள்ளிட்ட முன்னாள் வேகப்பந்துவீச்சாளர்கள் எச்சரித்தனர்.
அந்தக் காயத்தால் சாம்பியன்ஸ் டிராபி தொடரைத் தவறவிட்ட பும்ரா, ஐ.பி.எல்லில் சில போட்டிகளுக்குப் பிறகு மும்பை அணியுடன் இணைந்தார்.
அதையடுத்து, இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் பணிச்சுமை காரணமாக மூன்று டெஸ்ட் போட்டிகளில் மட்டும் அவர் ஆடவைக்கப்பட்டார்.
அத்தொடரில், கடைசி போட்டியில் இந்தியா வென்றால்தான் தொடரைச் சமனில் முடிக்க முடியும் என்றபோதிலும் பணிச்சுமை காரணமாக அப்போட்டியில் விளையாடவைக்கப்படவில்லை.
நடந்து முடிந்த ஆசிய கோப்பைத் தொடரில்கூட ஓரிரு போட்டிகளில் ஓய்வளிக்கப்பட்டது.
தற்போது, வெஸ்ட் இண்டீஸுக்கெதிரான நடப்பு டெஸ்ட் தொடரில் விளையாடிவந்தாலும், அடுத்ததாக ஆஸ்திரேலியாவில் தொடங்கும் சீரிஸில் ஒருநாள் தொடரில் ஓய்வளிக்கப்பட்டு, டி20 அணியில் மட்டும் சேர்க்கப்பட்டிருக்கிறார்.
பும்ரா மீதான பணிச்சுமையைக் குறைக்கவே இவ்வாறு செய்யப்படுகிறது என பி.சி.சி.ஐ காரணமும் கொடுக்கிறது.
இந்த நிலையில், பும்ராவின் சக பவுலரான முகமது சிராஜ், பும்ரா மீதான பணிச்சுமை குறித்து முதல்முறையாகப் பேசியிருக்கிறார்.
இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகத்துடனான நேர்காணலில் பேசிய சிராஜ், “வெளிப்புற கூச்சல்களைப் பற்றி அவர் கவலைப்படுவதில்லை.
அவருக்கு முதுகில் காயம். மிகப்பெரிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருக்கிறது.
அந்தப் போட்டியில் (இங்கிலாந்து தொடரில் கடைசி டெஸ்ட் போட்டி) அவர் பந்து வீசியிருந்தால், அதற்குப் பிறகு அவர் மீண்டும் பந்து வீசியிருப்பாரா, இல்லையா என்று யாரும் சொல்ல முடியாது.

அவரின் இருப்பு இந்திய அணிக்கு மிக முக்கியம். இப்போது ஆசிய கோப்பை முடிந்திருக்கிறது.
அடுத்தாண்டு டி20 உலகக் கோப்பை வருகிறது. அதற்கடுத்து 2027-ல் ஒருநாள் உலகக் கோப்பை.
அணிக்கு அவர் எவ்வளவு முக்கியம் என்பதை இந்திய ரசிகர்கள் புரிந்துகொள்ள வேண்டும். அவர்தான் அணியின் முதுகெலும்பு.
முடியும்போதெல்லாம் தனது நாட்டிற்காக விளையாட வேண்டும் என அவர் விரும்புகிறார். ஆனால், அவர் காயமடைந்தால் எப்படி விளையாடுவார்?

இதுவொரு இக்கட்டான சூழ்நிலை. அவருக்கு வேறு ஏதேனும் காயம் ஏற்பட்டால், ஒருவேளை அவர் அதிகமாக விளையாடலாம்.
ஆனால், முதுகு காயத்திலிருந்து மீள்வது மிகக் கடினம். ஏனெனில், அவரின் ரன்-அப் மற்றும் பவுலிங் ஆக்ஷன் மிகவும் கடினமானது.
எனவே, பும்ரா சரியான முடிவை எடுத்திருக்கிறார் என்றே நினைக்கிறேன்” என்று கூறினார்.