
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே பிற்பகலுக்குப் பிறகு மழை பெய்து வருகிறது. சில நேரங்களில் மாலை ஆரம்பிக்கும் மழை நள்ளிரவைத் தாண்டியும் பெய்து வருகிறது.
குறிப்பாக சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளிலும் மழை பெய்வதால் வெப்பம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.
இந்த நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கு மழை அறிவிப்பு கொடுத்திருக்கிறது. அதன்படி, “தென்மேற்கு வங்காள விரிகுடாவில் கடற்கரையில் வளிமண்டல குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவுகிறது.
அதனால் கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், நீலகிரி மற்றும் திருப்பத்தூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த வாரம் முழுவதும் தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்யும் என்றும், சில மாவட்டங்களில் அக்டோபர் 10 வரை பலத்த மழை பெய்யும் என்றும் குறிப்பிட்டிருக்கிறது.
திருச்சி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் போன்ற மாவட்டங்களில் நாளை காலை வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும், அக்டோபர் 8 முதல் தமிழ்நாட்டின் சில பகுதிகளில் பகல்நேர வெப்பநிலை படிப்படியாக 2°C–3°C குறையும் என்றும் வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
சென்னையில், வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும், சில பகுதிகளில் அவ்வப்போது லேசான மழை பெய்யும். அதிகபட்ச வெப்பநிலை 34°C ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 26°C ஆகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.