• October 8, 2025
  • NewsEditor
  • 0

Doctor Vikatan: நான் கடந்த சில மாதங்களாக தூக்கமின்மையால் பெரிதும் அவதிப்படுகிறேன்.  மருந்துக் கடையில் தூக்க மாத்திரை வாங்கிப் பயன்படுத்துகிறேன். என்னுடைய தோழி, தூக்க மாத்திரைக்கு பதில் மெலட்டோனின் சப்ளிமென்ட் எடுத்துக்கொள்ளும்படி சொல்கிறாள். அது அடிமைத் தனத்தை ஏற்படுத்தாது என்றும் சொல்கிறாள். அதென்ன மெலட்டோனின் சப்ளிமென்ட், அது உண்மையிலேயே தூக்க மாத்திரைக்கு மாற்றாகுமா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண் 

ஸ்பூர்த்தி அருண்

தூக்கத்தை வரவழைப்பதில் மெலட்டோனின் சப்ளிமென்ட்டுக்கு முக்கியப் பங்கு உண்டு. மெலட்டோனின் சப்ளிமென்ட்டுகள், மற்ற தூக்க மாத்திரைகளைப் போல அடிக் ஷனை ஏற்படுத்துவதில்லை.

தூக்கம் வரவில்லை என்றால் முதலில் அதற்கான காரணத்தைக் கண்டறிந்து, மருத்துவ ஆலோசனை பெறுவதுதான் சரியானது. நீங்களாக மருந்து, மாத்திரைகள் வாங்கிச் சாப்பிடக்கூடாது.

மெலட்டோனின் சப்ளிமென்ட் எடுப்பதானால், தினமும் தூங்கச் செல்வதற்கு 2 மணி நேரம் முன்னதாக  எடுத்துக்கொள்ள வேண்டும். அது சற்று தாமதமாகவே வேலைசெய்யத் தொடங்கும்.

மெலட்டோனின் சப்ளிமென்ட் என்பது பெரும்பாலும் நாடு விட்டு நாடு பயணம் செய்வோருக்கு பெரிய அளவில் உதவி செய்யும்.

நாட்டுக்கு நாடு வித்தியாசப்படுகிற நேரம், சூரிய உதயம் மற்றும் சூரியன் மறைவது போன்றவற்றில் வேறுபாடு காரணமாக ஏற்படுகிற உடல் குழப்பம், அதன்  விளைவாக ஏற்படும் தூக்கமின்மை பிரச்னைக்கு நன்றாக உதவும்.

மெலட்டோனின் என்பது நம் உடலில் உற்பத்தியாகும் ஹார்மோன்தான். இது நமது உறக்க-விழிப்பு சுழற்சியைக் (Sleep-Wake Cycle) கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. 

உடலில் சுரக்கும் அதே ஹார்மோன் போலவே வேலை செய்து, தூக்கத்தை வரவழைப்பவைதான் மெலட்டோனின் சப்ளிமென்ட்டுகள். இது மிக மென்மையாக வேலை செய்து, தூக்கத்தை வரவழைக்கும். 

தூக்கத்தை வரவழைக்கும் மெலட்டோனின் சப்ளிமென்ட்டுகள்.
தூக்கத்தை வரவழைக்கும் மெலட்டோனின் சப்ளிமென்ட்டுகள்.

தூங்குவதற்குச் சிரமப்படுவோர் அல்லது தூக்கத்தின் தரம் குறைவாக இருப்பவர்கள்,  ஜெட் லேக் (Jet Lag) உள்ளவர்கள்,  இரவில் வெகுநேரம் கழித்து தூங்கி, காலையில் தாமதமாக எழும் பழக்கம் உள்ளவர்கள்,  அறுவை சிகிச்சைக்கு முன் ஏற்படும் பதற்றத்தால் பாதிக்கப்படுவோர் போன்றோருக்கு மெலட்டோனின் சப்ளிமென்ட்டுகள் உதவும்.

ஏற்கெனவே குறிப்பிட்டபடி, உங்களுக்குத் தூக்கம் இல்லாததற்கான காரணத்தை முதலில் தெரிந்துகொள்ளுங்கள். ஸ்ட்ரெஸ், பதற்றம், மன அழுத்தம் போன்றவை காரணமா என்று பாருங்கள்.

வேறு ஏதேனும் உடல்நலக் கோளாறுகள் இருந்தால், மருத்துவ ஆலோசனையும் சிகிச்சையும் அவசியம். மெலட்டோனின் சப்ளிமென்ட் பயன்படுத்துவதாக இருந்தாலும், மருத்துவ ஆலோசனையோடு எடுத்துக்கொள்வதே பாதுகாப்பானது.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.  

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *