• October 8, 2025
  • NewsEditor
  • 0

வேலூர் மாவட்டத்தில் வள்ளிமலை மிகவும் பிரசித்திபெற்றது. அந்த மாவட்டத்திலேயே முருகப்பெருமானின் திருவடி பட்ட ஒரு மலை ஒன்று உண்டு என்பது பலரும் அறியாதது. சுற்றிலும் வெப்பாலை மரங்கள் உயர்ந்து நிற்க சிறிய மலையின் மீது கோயில் கொண்டுள்ளான் குமரக் கடவுள்.

ஒருமுறை அருணகிரிநாதர் இந்தத் தலத்துக்கு வந்தபோது அவருக்கு திருவண்ணாமலையின் நினைவு வந்தது. தன்னைக் காத்து அருளிய முருகப்பெருமானின் திருவடி தரிசனம் மனத்துள் தோன்ற சிலிர்த்துப்போனார்.

மீண்டும் அந்தத் தரிசனம் தா முருகா என்று அவர் மனம் உருகி வேண்ட முருகப்பெருமான் காட்சி தந்து அருளினார். இன்றும் முருகப்பெருமானின் திருப்பாதச் சுவடுகள் அந்த மலையில் தரிசிக்க முடியும். இப்படிப் பல்வேறு பெருமைகளை உடைய தலம்தான் ஞானமலை.

ஞானமலை தோரணவாயில்

‘எமைமனம் உருக்கி யோக அநுபூதி அளித்த பாத

உமைபாலா எழுதரிய பச்சைமேனி

இமையவர் துதிப்ப ஞானமலையுறை குறத்தி பாக

இலகிய சசிப்பெண் மேவு பெருமாளே’

என்று முருகப்பெருமான் தனக்குத் திருவடி தரிசனம் தந்த அருட்காட்சியை திருப்புகழில் பாடுகிறார் அருணகிரியார்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள காவேரிப்பாக்கம் அருகில், கோவிந்தச்சேரி கிராமத்தில் உள்ளது ஞானமலை.

வள்ளிமலையில் வள்ளியை மணந்து, தணிகைமலை செல்லும் வழியில் முருகன் முதலில் வள்ளியுடன் பொழுதுபோக்கிய பெருமையுடையது ஞானமலை. எனவே, இம்மலைக்கு வந்து தரிசிப்பவர்களுக்கு ஆனந்தமான வாழ்வையும், மன அமைதியையும் அளித்து மகிழ்விக்கிறான் அந்த வள்ளி மணாளன் என்கிறார்கள்.

வாருங்கள் அந்த அற்புத மலையை முதலில் தரிசிப்போம். மலை ஏறுவதற்கு முன்பாக அடிவாரத்தில் அருள்பாலிக்கும் ஞானசக்தி கணபதியைத் தரிசனம் செய்து 150 படிகள் ஏறினால், அருணகிரிநாதர் யோகாநுபூதி மண்டபம் வரும். இங்கே கல்லால மரத்தடியில் அருள்பாலிக்கும் ஞான தட்சிணாமூர்த்தியை வழிபட வேண்டும்.

அங்கிருந்து கோயிலை மேலும் சில படிகளைக் கடந்தால் கோயிலை அடையலாம். கருவறையில் ஞானகுஞ்சரி, ஞானவல்லி சமேத ஞானபண்டித சுவாமியாக தரிசனம் கொடுக்கிறார் முருகப்பெருமான்.

ஒருமுகம், நான்கு கரங்கள். பின் இருகரங்களில் கமண்டலம், ஜபமாலை ஏந்தியும், முன் வலக்கரம் அபய முத்திரையிலும், முன் இடக்கரம் இடுப்பிலும் கொண்டு நின்ற கோலத்தில் மிக அற்புதக் காட்சி. இந்த அற்புத வடிவை, ‘பிரம்மசாஸ்தா’ என்பார்கள்.

பிரணவத்துக்குப் பொருள் தெரியாத பிரமனைக் குட்டி, சிறையிட்டு, சிருஷ்டித் தொழிலைத் தாமே மேற்கொண்ட அருட்கோலமே இது என்கிறது ஆகமம்.

ஞானமலை முருகன்
ஞானமலை முருகன்

பல்லவர் காலம் மற்றும் முற்காலச் சோழர்கள் காலத்தில் தொண்டை மண்டலத்தில் அமைந்த பெரும்பாலான திருக்கோயில்களில் பிரம்ம சாஸ்தா வடிவமே காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

சிற்ப அமைப்பைக் கொண்டு ஞானமலை ஞான பண்டிதன் திருக்கோலம் 1300 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று தெரிய வருகிறது.

தெற்குச் சுற்றில் முருகப்பெருமான் அருணகிரிநாதருக்குக் காட்சியளித்த ‘குறமகள் தழுவிய குமரன்’ கோலத்தில் திருக்காட்சி தருகிறார். நீல மயிலில் அமர்ந்த கோலக்குமரன், இடதுபுறம் மடிமீது வள்ளியை அணைத்தவாறு இருக்கும் இன்ப வடிவம்.

அருகிலேயே, அருணகிரியார் கூப்பிய கரங்களுடன் இக் காட்சியைக் கண்டு இன்புறுவதையும் நாம் காணலாம். மலையின் மேற்புறம் ஏறிச் செல்லும் வழியில் முருகன் உண்டாக்கிய ‘வேற்சுனை’ உள்ளது.

மலையின் மேற்புறத்தில் ஞானப்பூங்கோதை சமேத ஞான கிரீஸ்வரர் சந்நிதி அமைந்துள்ளது. அருணகிரிநாதரை பரமகுருவாகக் கொண்டு இத்தலத்தில் தவமியற்றியவர் ஞான வெளிச் சித்தர் என்னும் பாலசித்தர். இந்த மகான் வாழும் காலத்தில் தன்னை நாடி வந்த மக்களின் நோய்களைத் தீர்த்து அருளினாராம். கார்த்திகை மாதம் மூல நட்சத்திர நாளன்று, இவர் ஸித்தி அடைந்தார். அவரின் ஜீவ சமாதி அங்கே உள்ளது.

இங்குள்ள அங்கப்பிரதட்சிண மண்டபத்தில் அமர்ந்து தியானம் செய்யும்போது அற்புதமான ஒலி அதிர்வுகளை நம்மால் உணரமுடியும். இங்கு அங்கப் பிரதட்சணம் செய்தால் நோய்கள் நீங்கும்; மகிழ்ச்சியான இல்லற வாழ்வு அமையும் என்கிறார்கள் பக்தர்கள்.

ஞானமலை முருகன்

ஞானமலையில் வெப்பாலை என்னும் அரிய வகை மூலிகை மரங்கள் நிறைந்துள்ளன. தோல் சம்பந்தமான நோய் (சொரியாசிஸ்) வெண்குஷ்டம், மூட்டுவலி முதலான உபாதைகளுக்கு இம்மரத்தின் இலை அரிய மூலிகை யாகும். இதன் மிகச் சிறிய விதை, பாதாம் பருப்பின் சுவையுடையது.

இம்மரத்தின் காற்று, தம்பதியருக்கு இல்லற இன்பத்தையும், குடும்ப ஒற்றுமையையும் அளிக்கிறது என்கிறது சித்த மருத்துவம். இங்குள்ள எலுமிச்சை மணம் கமழும் புல்லைக்கொண்டு முக வசீகரம் அளிக்கும் தைலம் தயாரிக்கலாம் என்கிறார்கள்.

திருப்புகழைப் பாடிப் பரப்பிய வள்ளிமலை ஸ்ரீசச்சிதானந்த சுவாமிகள் போன்ற அருளாளர்கள் பலர் வழிபட்டு அருள்பெற்ற ஞானமலை முருகனை நாமும் சென்று வழிபடுவோம். உடலும் உள்ளமும் இன்புற்று மகிழ, ஞானபண்டித சுவாமியின் திருவருளை வேண்டுவோம்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *