• October 8, 2025
  • NewsEditor
  • 0

கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பு மற்றும் வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர் சிலம்பரசன் நடிக்கும் திரைப்படத்தின் டைட்டில் நேற்று காலை வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.

அதன்படி கலைப்புலி எஸ்.தாணு தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் `ஆளப்பிறந்த அரசன், வெற்றியுடன் சிலம்பசரன்’ என்ற வாசகங்களுடன், ஒருவர் கையில் கத்தியுடன் நிற்கும் `அரசன்’ பட போஸ்டரையும் வெளியிட்டிருந்தார்.

வெற்றிமாறன் – சிம்பு இருவரும் கைகோர்க்கும் முதல் படம் என்பதால், இந்தப் படம் தமிழ் திரையுலகில் பல்வேறு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது.

அரசன்

படத்தின் டைட்டிலை கலைப்புலி தாணு காலை 8.09 மணிக்குத் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பகிர்வதற்கு, சுமார் அரை மணி நேரத்திற்கு முன்பு நடிகர் சிலம்பரசனின் கார் வடலூரில் வள்ளலார் தோற்றுவித்த சத்தியஞான சபைக்குள் நுழைந்தது.

அதிலிருந்து இறங்கிய சிலம்பரசன் தர்மசாலை, அணையா அடுப்பு போன்றவற்றைத் தரிசனம் செய்தார். அதையடுத்து சத்தியஞான சபை வளாகத்தில் அமர்ந்து, சுமார் 1 மணி நேரம் தியானம் செய்தார்.

அதையடுத்து அணையா விளக்கு, வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பத்தில் திருவறை, வள்ளலார் தண்ணீரைக் கொண்டு விளக்கெரியச் செய்த நற்கருங்குழி போன்ற இடங்களையும் தரிசனம் செய்தார்.

அப்போது வள்ளலாரின் பக்தர் ஒருவர், வள்ளலாரின் கொள்கைகளை சிம்புவிடம் எடுத்துக் கூறினார். அவரிடம் பேசிய நடிகர் சிம்பு, “நான் சைவம் இல்லையென்றால் இங்கு வருவேனா ? நானும் சைவம்தான்.

அனைத்து மக்களுக்கும், குழந்தைகளுக்கும் சாப்பாடு போட வேண்டும் என்பது என் ஆசை. நாம் ஆசைப்பட்டதைப் போலவே, இருநூறு ஆண்டுகளுக்கு முன்பே ஒருவர் ஆசைப்பட்டு, அதைச் செயல்படுத்திய வள்ளலார் குறித்து கேள்விப்பட்டேன்.

அதனடிப்படையில் அவரைப் பார்க்க இன்று வந்திருக்கிறேன். அவர் அழைக்கவில்லை என்றால் இவ்வளவு தூரம் வந்திருக்க முடியாது” என்றார் புன்னகையுடன்.

வள்ளலார் சத்தியகான சபையில் நடிகர் சிம்பு
வள்ளலார் சத்தியகான சபையில் நடிகர் சிம்பு

கடலூர் மாவட்டம், வடலூரில் வள்ளலார் தோற்றுவித்த சத்தியஞான சபையில், ஆண்டுதோறும் தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா விமரிசையாக நடக்கும்.

அன்றைய தினத்தில் நாடு முழுவதும் இருக்கும் வள்ளலாரின் லட்சக்கணக்கான பக்தர்கள், வடலூருக்கு வந்து 7 திரை நீக்கி காட்டப்படும் ஜோதியைத் தரிசித்துச் செல்வது வழக்கம். கடந்த அக்டோபர் 5-ம் தேதி வள்ளலாரின் பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *