
மதுரை: திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு வெவ்வேறு விகிதங்களில் வரி விதிப்பதால் ஒவ்வொரு மாநிலத்திலும் அவற்றின் விலையில் மாற்றம் உள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை விலை என்பது கச்சா எண்ணெய் விலை, மத்திய அரசின் கலால் வரி, விற்பனையாளர் கமிஷன் மற்றும் மாநில அரசின் வரி உள்ளடங்கியதாகும்.
தமிழகத்தில் பெட்ரோல் விற்பனை விலையில் மாநில அரசின் மதிப்பு கூட்டு வரி லிட்டருக்கு 13 சதவீதமாகவும், டீசலுக்கு 11 சதவீதமாகவும் உள்ளது. பெட்ரோல், டீசல் மீது மத்திய அரசு எண்ணெய் தொழில் மேம்பாட்டு வாரிய வரி, தற்செயல் தேசிய பேரிடர் வரி, கலால் வரி, கூடுதல் கலால் வரி மற்றும் சிறப்பு கூடுதல் கலால் வரி போன்ற வரிகளை விதிக்கிறது.