
வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்திற்கு `அரசன்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் இப்படத்தின் டைட்டில் போஸ்டர் இன்று காலை வெளியாகியது.
`அரசன்’ படத்தின் ப்ரோமோ வீடியோ தொடங்கி, அடுத்தடுத்த அப்டேட்களுக்கும் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
சமீபத்தில், டிஜிட்டல் தளத்தில் இயங்கும் கலைஞர்களைக் கௌரவிக்கும் வகையில் விகடன் டிஜிட்டல் விருதுகள்’ விழாவை நடத்தியிருந்தது. இதில் `Most Celebrated Hero In Digital’ என்ற விருது நடிகர் சிலம்பரசனுக்கு அறிவிக்கப்பட்டது.
அவருக்குப் பதிலாக, விழாவுக்கு அவருடைய தந்தை டி. ராஜேந்தர் வருகை தந்து விருதைப் பெற்றுக்கொண்டார். இயக்குநர் வெற்றிமாறன் இந்த விருதை அவருக்கு வழங்கினார்.
இந்த விருது விழாவில் வெற்றிமாறன் பேசுகையில், “எங்களுக்கே பல எதிர்பார்ப்புகள் இருப்பதால், எங்களுடைய எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில் வேலை செய்து கொண்டிருக்கிறோம்.
டி. ராஜேந்தர் சார் ஒரு தலைமுறைக்கே இன்ஸ்பிரேஷன். நான் கதிர் சாருடன் வேலை செய்திருக்கிறேன். கதிர் சாருக்கு டி. ராஜேந்தர் சாருடைய படங்களால் இன்ஸ்பிரேஷன் கிடைத்தது.
எல்லோரும் ஒரு தளத்தில் பயணித்துக் கொண்டிருக்கும்போது, டி. ராஜேந்தர் சார் தனித்தன்மையோடு இயங்கியவர்.
நாங்கள் பீரியட் திரைப்படங்கள் எடுக்கும்போது, டி. ராஜேந்தர் சாருடைய பாடல்களையும், போஸ்டர்களையும் பயன்படுத்துகிறோம்.

அவருடைய தனித்தன்மைக்கு மரியாதையாக நாங்கள் அதைச் செய்கிறோம். நானும் சிம்புவும் இணைந்து வேலை செய்யப் போகிறோம். `பொல்லாதவன்’ திரைப்படத்தின் சமயத்திலிருந்து நானும் சிம்புவும் நிறைய டிஸ்கஸ் செய்திருக்கிறோம்.
அப்போது, நான் ஜி.வி. ஸ்டுடியோவுக்குப் போவேன். சிம்பு `காளை’ படத்தின் வேலைகளுக்காக அங்கு வருவார். அப்போதிருந்து இந்த வடசென்னை உலகத்தைப் பற்றி பேசி வந்திருக்கிறோம்.
இன்று தாமதமாகி, இப்போது நடக்கிறது. நாங்கள் இருவரும் தொடர்ந்து பேசி வந்தோம். இப்போது அந்தப் படம் நடக்கவிருக்கிறது” என்று பேசினார்.