
மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் இருமல் மருந்து குடித்த குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்து வருகின்றனர். இதுவரை இரண்டு மாநிலத்திலும் சேர்த்து 16 குழந்தைகள் இருமல் மருந்து குடித்து இறந்துள்ளனர்.
அவர்கள் அனைவருக்கும் சாதாரண இருமல், சளி, லேசான காய்ச்சலுக்குக் கொடுக்கும் மருந்துகளை உள்ளூர் டாக்டர்கள் கொடுத்துள்ளனர். அல்லது பரிந்துரை செய்துள்ளனர்.
ஆனால் அதில் இருமல் மருந்தைக் குடித்த குழந்தைகள் ஓரிரு நாளில் உடல்நலம் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு சிறுநீர் வெளியேறுவது குறைந்தது. இதனால் டாக்டர்களிடம் சென்றபோது சிறுநீரகம் பாதிக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது.
அவர்களுக்கு டயாலசிஸ் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் சிகிச்சைக்குச் சற்று தாமதமான 16 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துவிட்டனர்.
அவர்கள் அனைவரும் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் ஆவர். அவர்களுக்குப் பெரும்பாலும் Coldrif மற்றும் Nextro-DS சொட்டு மருந்துகள் கொடுக்கப்பட்டுள்ளன.
இறந்த குழந்தைகளின் சிறுநீரகத்தைச் சோதனை செய்து பார்த்ததில் Diethylene glycol எனப்படும் நச்சுத்தன்மை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குழந்தைகள் குடித்த இருமல் மருந்து மூலம் பரவி இருக்க வேண்டும் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து Coldrif மருந்துக்கு தமிழ்நாடு, மகாராஷ்டிரா போன்ற பல மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட 14 குழந்தைகள் அண்டை மாநிலமான மகாராஷ்டிராவின் நாக்பூர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மத்தியப் பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்டத்தில் ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில் முதன் முதலில் இப்பிரச்னை ஆரம்பித்தது.
செப்டம்பர் முதல் வாரத்தில் முதல் குழந்தை இறந்தது. அதனைத் தொடர்ந்து அடுத்த சில நாட்களில் அதேபோன்று சிறுநீரகம் பாதிக்கப்பட்டு இறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்தது. இதுவரை மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் மட்டும் 16 குழந்தைகள் இது போன்று இறந்துவிட்டனர்.
மத்தியப் பிரதேசத்தில் மொகமத் அமின் என்பவர் தனது 5 வயது குழந்தையை டாக்டர் பிரவீன் என்பவரிடம் கொண்டு சென்றார். அவர் கொடுத்த இருமல் மருந்தைக் குடித்த சிறுவனுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது.
இது குறித்து மொகமத் அமின் கூறுகையில், ”குழந்தைக்கு டாக்டர் இருமல் மருந்து கொடுத்த பிறகு வாந்தி ஏற்பட்டது. சிறுநீர் வருவது நின்றது. சிறுநீரகம் பாதிக்கப்பட்டு இருப்பதை உள்ளூர் டாக்டர் மூலம் தெரிந்து கொண்டோம். உடனே நாக்பூருக்குக் கொண்டு சென்றோம். ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இறந்துவிட்டான்” என்று தெரிவித்தார்.
இதே டாக்டர் பிரவீனிடம் விகாஷ் என்ற குழந்தையை அவனது பெற்றோர் காய்ச்சலுக்காகக் கொண்டு சென்றனர். இது குறித்து விகாஷ் பெற்றோர் கூறுகையில், “நாங்கள் டாக்டர் பரிந்துரைத்த மருந்துகளை குழந்தைக்குக் கொடுத்தோம். உடனே குழந்தைக்கு வாந்தி ஏற்பட்டது.
இதையடுத்து மீண்டும் டாக்டரிடம் சென்றதற்கு டாக்டர் ஊசி போட்டார். ஆனாலும் எங்களது மகன் சிறுநீர் கழிக்கவில்லை. நாங்கள் முதலில் அவரை சிந்த்வாராவிற்கும் பின்னர் நாக்பூருக்கும் அழைத்துச் சென்றோம்” என்று விகாஸின் பெற்றோர் கூறினர்.

தங்களது குழந்தையை இழந்த பெற்றோர்கள், டாக்டர் தங்களது குழந்தைகளுக்கு மருந்தை விஷமாகக் கொடுத்துவிட்டனர் என்று அழுதபடி கூறினர். இது குறித்து 7 வயதாகும் தேவேஷ் என்ற சிறுவனின் தாயார் கூறுகையில், ”எனது மகனுக்கு முதல் நாள் ஒன்றரை மணி நேரம் டயாலஸிஸ் செய்தார்கள். இரண்டாவது நாள் 3 மணி நேரம் டயாலஸிஸ் செய்தார்கள். அதன் பிறகு எனது மகன் மயக்க நிலைக்குச் சென்றுவிட்டான். டாக்டர்கள் எங்களால் முடிந்ததைச் செய்துவிட்டோம் என்று கூறிவிட்டனர்” என்று கூறி அழுதார்.
மத்தியப் பிரதேசம் மட்டுமல்லாது ராஜஸ்தானிலும் இதேபோன்ற பிரச்னையில் 4 குழந்தைகள் இறந்துள்ளனர். குழந்தைகளுக்குக் கொடுக்கப்பட்ட மருந்து மாதிரிகளைச் சோதனை செய்தபோது அதில் எந்தவித பிரச்னையும் இருந்ததாகத் தெரியவில்லை என்று மத்தியப் பிரதேச துணை முதல்வர் ராஜேந்திர சுக்லா தெரிவித்தார். ஆனால் நிலைமை விபரீதமானதால் சில மாதிரி மருந்து குறித்து மட்டுமே சொன்னதாக சுக்லா விளக்கம் அளித்தார்.
தமிழகத்தில் தயாரிக்கப்பட்ட மருந்து காரணமா?
ஆய்வின் மையத்தில், தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தில் உள்ள ஸ்ரேசன் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட கோல்ட்ரிஃப் (Coldrif) என்ற இருமல் சிரப் மருந்துதான் இதற்குக் காரணம் என்று தெரிய வந்துள்ளது. கடந்த அக்டோபர் 2-ம் தேதி தமிழக மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் சோதனை செய்த கோல்டிரிப் சிரப் மாதிரியில் கலப்படம் இருப்பதாக அறிவித்தனர்.
அந்த மாதிரியில், உடல் ஆரோக்கியத்திற்குத் தீங்கு விளைவிக்கும் ஒரு நச்சுப் பொருளான டைதிலீன் கிளைக்கால் (48.6% w/v) இருந்ததாக அறிக்கை கூறியது. அச்சு மை, பசை, பிரேக் திரவம் மற்றும் லூப்ரிகண்டுகள் தயாரிப்பில் டைதிலீன் கிளைகோல் பயன்படுத்தப்படுகிறது. அதனைச் சாப்பிடுவது மனிதர்களுக்குக் கடுமையான சிறுநீரகம், கல்லீரல் மற்றும் நரம்பு மண்டலத்தில் சேதத்தை ஏற்படுத்தும்.

உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ள செய்தியில், டைதிலீன் கிளைகோல் மற்றும் எத்திலீன் கிளைகோல் கலந்த இருமல் மருந்துகளால் 2022 ஆம் ஆண்டு முதல் உலகளவில் 300 குழந்தைகள் இறந்துள்ளனர். 2022 ஆம் ஆண்டில் காம்பியாவில் அசுத்தமான இருமல் சிரப்களை உட்கொண்டு குறைந்தது 70 குழந்தைகள் இறந்தனர். ஜம்மு காஷ்மீரில் 2020ம் ஆண்டு 17 குழந்தைகள் இறந்தனர்.