
தமிழில் முன்னணி செய்தி சேனல்களில் ஒன்றான `புதிய தலைமுறை’ சேனல், அரசு கேபிளில் முடக்கம் செய்யப்பட்டிருப்பதாக சேனல் நிர்வாகம் குற்றச்சாட்டு முன்வைத்திருக்கிறது.
இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர்கள், `ஊடக சுதந்திரத்துக்கு எதிரான செயல்’ எனத் தி.மு.க அரசுக்கெதிராக கண்டனங்கள் தெரிவித்து வருகின்றன.
ஊடக மற்றும் பத்திரிகையாளர் சங்கங்களும் இதுகுறித்து அறிக்கை வெளியிட்டு வருகின்றன.
இருப்பினும், அரசுத் தரப்பிலிருந்து எந்தவொரு விளக்கமும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.
இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தி.மு.க அரசுக்குக் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
தனது எக்ஸ் தளப் பதிவில் சீமான், “தமிழக அரசின் கேபிள் சேவையிலிருந்து புதிய தலைமுறை தொலைக்காட்சியை நீக்கியிருக்கும் தி.மு.க அரசின் செயல் கடும் கண்டனத்திற்குரியது.
அரசுக்கு எதிரான செய்திகளை வெளியிட்டதற்காக ஒரு தொலைக்காட்சியையே இருட்டடிப்பு செய்யும் இப்போக்கு கருத்துரிமைக்கு எதிரான அச்சுறுத்தல்; ஊடகங்களுக்கு விடுக்கப்பட்டிருக்கும் நேரடி மிரட்டல்!

சனநாயகம், கருத்துச் சுதந்திரம் என்றெல்லாம் வாய்கிழியப் பேசிவிட்டு, ஊடகங்கள் மீது ஆதிக்கம் செய்வதும், அடக்குமுறைகளைச் செலுத்துவதும் வெட்கக்கேடானது.
ஊடகத்தின் மீதான ஒடுக்குமுறையைக் கைவிட்டு உடனடியாக தமிழ்நாடு முழுவதும் புதிய தலைமுறை தொலைக்காட்சி தெரியும்படி அரசு கேபிளில் மீண்டும் இணைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்” என்று திமுக அரசை வலியுறுத்தியிருக்கிறார்.