
(பொறுப்பு துறப்பு: இந்த கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் கருத்துக்கள் அனைத்தும் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடனின் கருத்துக்கள் அல்ல – ஆசிரியர்)
நிகழ்வுகளை விமர்சனக் கண்ணோட்டத்துடன் மக்கள் கவனத்திற்குக் கொண்டுவரும் ஊடகங்கள் மீது ஏதாவது ஒரு வடிவத்தில் அதிகாரக் கரங்கள் தாக்குதல் தொடுப்பது தொடர்கதைதான். தமிழ்நாட்டில் அப்படியில்லை என்று பெருமைப்பட நினைத்தால், `அப்படியெல்லாம் விட மாட்டோம்’ என்பதாக ஒரு கவலைக்குரிய தகவல் வந்திருக்கிறது.
தமிழ்நாடு கேபிள் டிவி (டிஏசிடிவி) நிறுவனத் தொகுப்பிலிருந்து முன்னணி ஊடகக் குழுமங்களில் ஒன்றான ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சி நீக்கப்பட்டிருக்கிறது. தங்கள் வீடுகளில் அரசு கேபிள் இணைப்பு வைத்துள்ளவர்கள் இந்த மாதம் 4ஆம் தேதியிலிருந்து இந்தத் தொலைக்காட்சி ஒளிபரப்பைக் காண இயலவில்லை.
இது குறித்து அந்தக் குழுமம் அதிகாரப்பூர்வ அறிக்கை எதையும் வெளியிடவில்லை என்றாலும், அரசியல் தலைவர்களும் பத்திரிகையாளர்களும் கண்டனத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
இரண்டு நாட்களுக்குப் பின் தற்போது சில மாவட்டங்களில் மட்டும் மறுபடி இணைப்பு மீண்டும் தரப்பட்டுள்ளது. ஆயினும் பெரும்பாலான மாவட்டங்களில் துண்டிப்பு தொடர்கிறது. குழுமத்தினர் அரசாங்கத்தை அணுக முயற்சி மேற்கொண்டிருப்பதாகத் தகவலறிந்தோர் தெரிவிக்கிறார்கள்.
இந்தத் திடீர் நடவடிக்கைக்கான காரணத்தை டிஏசிடிவி அறிவிக்கவில்லை. இவ்வாறு நீக்கப்பட உள்ளதாக முன்னறிவிப்பு எதுவும் வரவில்லை, இந்த நடவடிக்கைக்குக் குறிப்பிட்ட செய்தி ஒளிபரப்பு காரணமாக இருக்குமானால் அதற்கு விளக்கம் கோரும் ஆணையும் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
ஆனால் கரூர் உயிரிழப்புகள் தொடர்பான செய்திகளில் காவல்துறை குறித்தும், ஆட்சியாளர்களின் அணுகுமுறை தொடர்பாகவும் கடுமையான விமர்சனங்கள் வெளிப்படுத்தப்பட்டதன் பின்னணியிலேயே ‘புதிய தலைமுறை’ கேபிள் உருவப்பட்டிருக்கிறது என்ற பேச்சு ஊடகவியலாளர்களிடையே பகிரப்படுகிறது. தவெக–வினரும் மற்றும் பிற எதிர்க்கட்சிகளின் தலைவர்களும் அரசாங்கத்தைக் குற்றம் சாட்டிக் கூறிய கருத்துகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டதில் ஆளுங்கட்சியினருக்கு எற்பட்ட கோபமே இந்த நடவடிக்கையாக வெளிப்பட்டிருக்கிறது என்றும் ஊடகத்தினர் கூறுகின்றனர்.
“இது கரூர் துயரம் தொடர்பான விமர்சனச் செய்திகளுக்கான எதிர்வினை மட்டுமல்ல, கடந்த நாட்களில் அந்தத் தொலைக்காட்சியில் தவெக தலைவர் விஜய் நடத்திய நிகழ்ச்சிகளுக்கும், அவற்றில் நிகழ்த்திய உரைகளுக்கும் கொஞ்சம் மிகையாகவே முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக முதலமைச்சரை அவர் கடுமையாகத் தாக்கிப் பேசியது, அரசு பற்றிய கூர்மையான விமர்சனங்களை முன்வைத்தது இவையெல்லாம் கூடுதலாக மையப்படுத்தப்பட்டன. ஊடகம் என்ற முறையில் இதற்கான உரிமை இருக்கிறது என்றாலும், அது திமுக–வினருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தியிருக்கிறது. அந்தக் கோபமும், பாடம் கற்பிக்க வேண்டும் என்ற மனப்பான்மையுமே இந்த நடவடிக்கைக்கு இட்டுவந்திருக்கிறது,” என்று, பெயரை வெளியிட வேண்டாம் என்ற வேண்டுகோளுடன், ஊடகத்துறை மூத்த நண்பர் தன் கருத்தைப் பகிர்ந்துகொண்டார்.
இந்த நடவடிக்கையில் சிறு நியாயமும் இல்லை என்றாலும், இந்தக் கோபத்தில் சிறிதும் நியாயம் இல்லை என்று கூறிவிட முடியாதுதான். ஒரு மாநாட்டுக்கு வரும் விஜய், விமான நிலையத்தில் விமானத்திலிருந்து இறங்கும்போது தாவிக்குதித்து ரசிகர்களை/தொண்டர்களை ஆரவாரம் செய்ய வைத்தது, சாலையில் நின்றிருந்த மக்களைப் பார்த்துக் கையை ஆட்டியபடி சென்றது, மேடையில் வேகமாக ஏறியது என்று விலாவாரியாக ஒளிபரப்பியதைப் பலரும் பார்த்திருப்பார்கள். அதே கால கட்டத்தில், மக்களுக்காகவே போராட்டம் நடத்துகிற கட்சிகளின் மாநாடுகள், பேரணிகள், தலைவர்களின் பங்கேற்புகள் பற்றி இத்தகைய முக்கியத்துவத்துவத்துடன் செய்திகளைத் தந்ததில்லையே என்ற எண்ணம் இந்தக் கட்டுரையாளருக்கே கூட ஏற்பட்டிருக்கிறது.
இனி எதிர்காலத்திற்கான மாற்றுத் தலைமை இவர்தான் அல்லது அவர்தான் என்று திட்டமிட்ட பிம்பங்களை உருவாக்கி மக்கள் மனங்களில் புகுத்துகிற கைங்கரியத்தைக் கடந்த காலத்திலும் பல ஊடகங்கள் செய்து வந்திருக்கின்றன. அவ்வகையில் குறிப்பிட்ட ஊடக நிறுவனத்தின் செய்தி வெளிப்பாடுகளில் நடுநிலை இல்லை என்று கருதுவார்களானால், அதை விமர்சனத்திற்கு உட்படுத்தும் உரிமை எந்தக் கட்சிக்கும், எந்த அமைப்புக்கும் இருக்கிறது. எந்த ஊடகமும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதல்ல. குறிப்பிட்ட செய்தியில் தீய நோக்கம் இருப்பதாக கருதுவார்களானால், விமர்சன உரிமையை விசாரணை உரிமையாக மாற்றிக் கொள்ள சட்டம் இடமளிக்கிறது.
அந்த இடத்தைத் தவறாகப் பயன்படுத்தி, செய்தி வெளியீட்டையோ கருத்துப் பகிர்வையோ அதிகாரக் கரம் கொண்டு ஒடுக்க முயல்கிறபோதுதான், கொள்கை வேறுபாடுகளைக் கடந்து ஊடகவியலாளர்களும் ஒன்றுபட்டுத் தங்களுடைய எதிர்ப்பையும் ஒருமைப்பாட்டையும் வெளிப்படுத்துகிறார்கள். கருத்துச் சுதந்திரத்தை ஆதரிப்போர் மட்டுமல்லாமல், இப்படிப்பட்ட ஒடுக்குமுறை நிலையைத் தங்களது உடனடி அரசியல் நோக்கங்களுக்குப் பயன்படுத்திக்கொள்ளும் நோக்கத்துடன் சில அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவிக்கிறார்கள்.
சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் தலைவர் சுரேஷ் வேதநாயகம், பொதுச்செயலாளர் ஆசிஃப் இருவரும் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தனியார், அரசு கேபிள் நிறுவனங்கள் மற்றும் டிடிஎச் சேவை நிறுவனங்கள் மூலம் செய்தித் தொலைக்காட்சிகள் உட்பட அனைத்துத் தொலைக்காட்சிகளும் மக்களின் பார்வைக்குச் சென்றடைகின்றன. தகுதி இருந்தும் செய்தித் தொலைக்காட்சிகளுக்கு இந்த சேவையை வழங்க மறுப்பது அல்லது முன்னறிவிப்பின்றி ஒளிபரப்பை நிறுத்துவது கருத்துச் சுதந்திர ஒடுக்குமுறையாகும்,” என்று கூறியுள்ளனர்.
‘புதிய தலைமுறை‘ தொலைக்காட்சிக்கான ஒளிபரப்பு சேவை நிறுத்தப்பட்டது உண்மையானால், இந்த நடவடிக்கையை வன்மையாகக் கண்டிப்பதாகக் கூறுகிற அந்த அறிக்கை, நிறுத்தப்பட்ட ஒளிபரப்பை உடனே தொடங்கவும் வலியுறுத்துகிறது.
இத்தகைய ஒரு சூழல் உருவாகிறபோது எதிர்க்கட்சி விட்டுவைக்குமா? அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது ‘எக்ஸ்’ தளத்தில், “ஸ்டாலின் அரசு, ஊடகங்களில் தப்பித் தவறிக் கூட தங்களுக்கு எதிரான செய்திகள் வந்துவிடக் கூடாது என்பதில் குறியாக இருக்கிறது.
அரசின் தவறுகளைச் சுட்டிக்காட்டுவதில் மக்களாட்சியின் நான்காம் தூணான ஊடகங்களுக்கு முக்கியப் பங்குண்டு. அவற்றைத் திருத்துவதற்கான வாய்ப்பாக கருதாமல், பழி வாங்கும் நோக்கில் இருட்டடிப்பு செய்து முடக்க நினைப்பது கடும் கண்டனத்திற்குரியது,” என்றும், மறுபடியும் ஒளிபரப்பு தொடர்வதை அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறார். சில பகுதிகளில் மட்டும் மறுபடி ஒளிபரப்பு கிடைக்கச் செய்து மற்ற பகுதிகளில் முடக்கியிருப்பது விஞ்ஞான தகிடுதத்தம் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் எடப்பாடியாரின் இந்த எதிர்ப்பு வரவேற்கத்தக்கதுதான். ஆனால் இதில் ஒரு அரசியல் வேடிக்கையும் இருக்கிறது. இதே அதிமுக ஆளுங்கட்சியாக இருந்தபோது, இதே எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் இருக்கையில் அமர்ந்திருந்த நிலையில், இதே ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சிக்கு, இதே அரசு கேபிள் நிறுவனத்தில் என்ன செய்தார்கள்? 2017இல், சென்னை ஆர்.கே. நகர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலின்போது, ‘புதிய தலைமுறை’ ஒரு கருத்துக் கணிப்பை வெளியிட்டது. அது திமுக–வுக்கு சாதகமானது என்று டிஏசிடிவி–யில் தொலைக்காட்சியின் அலைவரிசை எண் மிகவும் பின்னால் தள்ளப்பட்டது. அதன் ஒளிபரப்புகளைத் தெளிவாகப் பார்க்க முடியாத நிலைமை ஏற்படுத்தப்பட்டது.

அப்போது, இதே மு.க. ஸடாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த நிலையில், இந்த நடவடிக்கையை வன்மையாகக் கண்டித்தார். “இந்த ஆட்சியில் கருத்துச் சுதந்திரம் நசுக்கப்படுகிறது. அரசு கேபிளில் இருந்து புதிய தலைமுறை தொலைக்காட்சி பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது. இதுவே இந்த ஆட்சியின் சர்வாதிகாரப் போக்கிற்குச் சாட்சி” என்று அவர் சாடினார்.
முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, மே 3 உலகப் பத்திரிகை சுதந்திர தினத்தின்போது (மே 3) “கேள்விகளுக்கு அஞ்சாத ஆட்சி தேவை. அச்சுறுத்தும் தணிக்கை இன்றி பத்திரிகையாளர்கள் அச்சமின்றி செயல்படுவதை உறுதிசெய்ய நாம் உறுதியளிக்க வேண்டும்,” என்று கருத்துத் தெரிவித்திருக்கிறார்.
“அச்சமற்ற இதழியல் இல்லாமல், இருளில் மக்களாட்சி மரித்துவிடும். எனவே, பத்திரிகைச் சுதந்திரத்தைக் காக்க வேண்டும். இது ஊடகங்களுக்காக மட்டுமல்ல, ஒவ்வொரு குடிமகனின் அறிந்துகொள்ள, கேள்வி கேட்க மற்றும் உண்மையைப் பேசுவதற்கான உரிமைக்காகவும் ஆகும்” என்று அவர் வலியுறுத்தியதும் கை தட்டி வரவேற்கப்பட்டது.
ஆனால் அரசு கேபிள் டிவி–யின் தற்போதைய நடவடிக்கை கைகளைக் கட்டிக்கொள்ள வைக்கிறதே? அத்துடன், இணையத்தின் வழியாகக் கைப்பேசிகளிலேயே செய்தி ஒளிபரப்புகளைக் காண முடியும் என்ற இன்றைய வளர்ச்சிக் கட்டத்தில் இது ஒரு காலாவதியான அணுகுமுறை இல்லையா?