• October 7, 2025
  • NewsEditor
  • 0

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்

இப்போது கார்கில் போர் நினைவிடம் அமைந்திருக்கும் பகுதியில் இருக்கும் டைகர் ஹில், கார்கில் போர் (மே 1999) சமயத்தில் பாகிஸ்தானின் வசம் இருந்தது. அம்மலையின் உச்சியிலிருந்து இந்திய ராணுவத்தின் போக்குவரத்தை அவர்களால் எளிதாகக் கண்காணிக்க முடிந்தது. லே, சியாச்சின் கேம்புகளுக்குச் செல்லும் உணவுப் பொருள்களை ராணுவத் தளவாடங்களை அவர்கள் தடுத்து நிறுத்தினர். தாக்கி அழித்தனர்.

டைகர் ஹில்லுக்கு தென் மேற்கே இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் மலையின் அடையாள எண் பாயிண்ட் 4875. இரண்டுமே அதிக உயரம் கொண்ட செங்குத்தான மலைச்சிகரங்கள். டோலோலிங் சிகரத்திலிருந்து லே தேசிய நெடுஞ்சாலையின் மொத்த நடவடிக்கைகளையும் பார்க்கலாம். இம்மூன்று சிகரங்களையும், அருகிலிருக்கும் மற்ற சில முக்கியமான இடங்களையும் எப்படியாவது இந்திய ராணுவம் வென்றாகவேண்டிய கட்டாயம்.

டைகர் ஹில்லை மீட்க எட்டாவது சீக்கிய ரெஜிமென்ட் படை முயன்றும் பயனில்லாமல் போனது. பின்னர் அந்த மலையை மீட்கும் பொறுப்பு 192 மலைப் படைப் பிரிவிடம் சென்றதும், அவர்கள் 18 கிரெனடியர்கள் படைப் பிரிவையும், கூடுதலாக இரண்டு நாகா படைகளையும் அனுப்பிவைத்தனர்.

மலைக்கு வலப்புறம் நாகா படையும், இடப்புறம் சீக்கிய ரெஜிமெண்டும் முன்னேறிச்செல்ல, கட்டக் பிளாட்டோன் படையினர் பின்புறத்திலிருந்து மலையின் கடினமான பகுதியில் நெட்டுக்குத்தலாக ஏறினர். இந்திய ராணுவத்தில் உள்ள ஒவ்வொரு காலாட்படை பிரிவிலும் செயல்படும் சிறப்பு கமாண்டோக்கள் இந்த கட்டக் படைப்பிரிவினர்.

மலைக்கு வலப்புறம் நாகா படையும், இடப்புறம் சீக்கிய ரெஜிமெண்டும் முன்னேறிச்செல்ல, கட்டக் பிளாட்டோன் படையினர் பின்புறத்திலிருந்து மலையின் கடினமான பகுதியில் நெட்டுக்குத்தலாக ஏறினர். இந்திய ராணுவத்தில் உள்ள ஒவ்வொரு காலாட்படை பிரிவிலும் செயல்படும் சிறப்பு கமாண்டோக்கள் இந்த கட்டக் படைப்பிரிவினர்.

ராணுவ வீரர்களுக்கு உற்ற நண்பனும், கொடிய பகைவனும் ஒன்றுதான். இருட்டு. ஆயிரம் அடி உயரமுள்ள சிகரத்தில் ஒவ்வொரு வீரரும் நாற்பது கிலோ அளவிற்கு ஆயுதங்களை ஏந்திக்கொண்டு, எந்தவிதச் சத்தமுமின்றி இரவில் மலையேறினர். கொஞ்சம் பிசகினாலும், எதிரிகள் அதை உணர்ந்துகொண்டு தாக்குதலைத் தொடங்கிவிடுவர். வீரர்கள் பாதித் தூரத்தைக் கடந்திருந்த நிலையில் அந்தச் சம்பவமும் நடந்தது.

மலைக்கு மேலிருந்து எதிரிகளின் தாக்குதலையும் சமாளித்துக்கொண்டு, தொடர்ந்து முன்னேறி அவர்களின் பங்கர்களை அழிக்க வேண்டும். நான்கைந்து தினங்கள் விடாது போரிட்டு, ஜூலை எட்டாம் தேதி, இந்திய வீரர்கள் டைகர் ஹில்லை கைப்பற்றினர். டைகர் ஹிஸ் வெற்றி கார்கில் போரில் பெரும் திருப்புமுனையாக அமைந்தது. அந்த டைகர் ஹில்லின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றியது, பாயிண்ட் 4875யின் வெற்றி.

இங்கே விடுதியில் இரவு பத்து மணியாகியும் அவர் பேசுவதை நிறுத்தவில்லை. ஒவ்வொரு கதையிலிருந்தும் கிளைக் கதைகள் முளைத்து அதைப்பற்றிய பேச்சுகள் நீண்டன. அடுத்த ஒரு மணி நேரத்திற்கு பிறகுதான் எங்கள் அணியினர் அவரவர் அறைகளுக்குச் சென்றனர்.

கடைசி நாள் பயணம். இனிமேல் இப்படி ஒவ்வொரு நாளும் ஒவ்வோர் இடத்தில் கண்விழிக்க முடியாது, வலிக்க வலிக்க பைக் பயணம் இருக்காது. ஆஃப் ரோடிங், வாட்டர் கிராஸ்ஸிங் என அனைத்தும் இன்றோடு முடிகிறது. மூன்று லேயர் ஆடைகள், ரைடிங் ஜாக்கெட், பாதுகாப்பு உபகரணங்கள் எனத் தயாராக வேண்டியதில்லை என்கிற நினைப்பே மனத்திற்குள் ஒரு வெறுமையை உண்டாகியது.

எப்போதும் கேலி பேசிக்கொண்டிருக்கும் அணியினரும் அன்று அமைதியாகவே இருந்தனர். காலை உணவு வேளையின்போது முதல் நாள் இரவு ஒன்றாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்த மற்ற குழுவினரைச் சந்தித்து விடைபெற்றோம். உடற்பயிற்சி முடிந்து, தலைக்கவசம் அணிந்து பைக்கின் அருகில் வந்தபோது மறுபடியும் அதே வெறுமை. இம்மாதிரியான உணர்ச்சிகளை எதிர்கொள்வதற்குப் பழகிவைத்திருந்தால் நன்றாக இருந்திருக்குமெனத் தோன்றியது.

அணியினர் ஒருவருக்கொருவர் ‘ பிஸ்ட் பம்ப்’ கொடுத்து உற்சாகப்படுத்திக்கொண்டு கிளம்பினோம். சஷாங்கின் நினைவு வராமல் இல்லை. அவர் இல்லாமலும் பயண அனுபவங்கள் குறைவில்லாமல் இருந்தன. அன்றைக்கு நாங்கள் ஆர்வமாக எதிர்பார்த்திருந்தது மூன்று விஷயங்களை. 

முதலாவது, விடிய விடியக் கதை கேட்ட கார்கில் போர் நினைவகம். அடுத்தது பிரம்மாண்டமான ஜோஜிலா கணவாய், மூன்றாவது, பயணத்தின் இறுதி புள்ளியான ஸ்ரீநகர் தால் ஏரி. ஒரே நாளில் அனைத்துமே காணக்கிடைக்கும்படி அன்று ஏற்பாடு செய்திருந்தனர். சொல்லப்போனால், மொத்தமாகக் கடைசி நாளில் எங்களை வைத்துச் செய்வதுதான் அவர்களது திட்டம்.

அன்றைய எங்களது முதல் நிறுத்தம் கார்கில் போர் நினைவகத்தில். வாயிலில் நின்றிருந்த காவல் வீரர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். முதலில் அவர்களிடம் பேச்சுக்கொடுக்கத் தயக்கமாக இருந்தாலும், அங்கேயே சில நொடிகள் காத்திருந்து அவர்களிடம் பேசினோம்.

அந்த இடத்திற்குப் பின்னணியில் இருப்பது டோலோலிங் மலைத்தொடர்கள் எனத் தெரிந்ததும், முந்தைய நாள் இரவு கேட்ட கதைகள் கண்முன் விரிந்தன. இந்த மலையில் எப்படி வீரர்கள் ஏறி, போரிட்டு வென்றனர் என்கிற பிரமிப்பு மட்டும் தீரவேயில்லை.

இடைவிடாது குண்டு சத்தம் கேட்டுக்கொண்டிருந்த இடத்தில் இப்போது வீரர்களது நினைவுத்தூண்கள் இருந்தன. அவை அமைதியாக அவ்விடத்தின் வரலாற்றைச் சுமந்திருந்தன. அங்கேயே அருங்காட்சியகமும் இருந்தது. போரின்போது பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள், போர்க் காலத்தில் வீரர்களது கடிதப் பரிமாற்றங்கள், புகைப்படங்கள் ஒவ்வொன்றும் அந்தச் சம்பவங்களை எங்களுக்கு உணர்வுப்பூர்வமாகக் கடத்தும் வகையில் அமைந்தன. அனைத்திலும் எனக்குப் பெரும் மகிழ்வைக் கொடுத்தது, டைகர் ஹில் வெற்றிக்குப் பிறகு வீரர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படம்தான்.

மலை உச்சியில், ஊசிமுனை பாறைகளுக்கிடையில், தங்கள் ஆயுதங்களை ஏந்திக்கொண்டு வெற்றிக்களிப்புடன் அவர்கள் நிற்கும் படம் அது. தாக்குதலின்போது கைப்பற்றப் பட்ட எதிரி நாட்டுக் கொடிகள் தலைகீழாகப் பொறிக்கப்படுவது வழக்கம். அவ்வகையில் பாகிஸ்தான் கொடியையும் அங்கு வைத்திருந்தனர். அங்கிருந்து நாங்கள் அடுத்துக் கிளம்பிய இடம் ஜோஜிலா.

ஜோஜிலா கணவாய், காஷ்மீர் பள்ளத்தாக்கையும் டிராஸ் பள்ளத்தாக்கையும் இணைக்கும் மலைப்பாதை. குளிர் காலத்தில் போக்குவரத்து முற்றிலும் தடைப்படும் சாலையென்பதால் அடல் சுரங்கப்பாதையைப் போல இங்கும் சுரங்கப்பாதையை அமைக்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. இருவழிப் பாதையாக அமையவிருக்கும் ஜோஜிலா டனல், அவசரக்காலத்தில் வெளியேறத் தனிவழி, கண்காணிப்பு கேமரா, காற்று சுத்திகரிப்பு கருவி எனப் பல நவீன வசதிகளுடன் அமையவுள்ளது. அப்பகுதியைக் கடப்பவர்களுக்குப் பயணத்தூரத்தையும் குறைக்கும் வகையில் இது இருக்கும். பாறைகள் அகற்றப்படுவதில் சிரமங்கள் ஏற்பட்டாலும், பணிகள் நிற்காமல் பார்த்துக்கொள்கின்றனர்.

அமர்நாத் யாத்திரை செல்வோர் இணையும் பாதை இந்தப் பகுதியில்தான் இருக்கிறது. மிகுந்த ஆபத்தான கணவாய் என்று கேள்விப்பட்டிருந்தோம். இருப்பினும் இத்தனை நாள்களில் நாம் பார்க்காத மலைப்பாதை வளைவுகளா என்று ஓர் அசட்டு நம்பிக்கை எங்கள் எல்லோரிடமும் இருந்தது. கார்கிலைக் கடந்து ஸ்ரீநகர் சாலையைத் தொடும்போதே வானுயர்ந்த பைன் மரங்கள் தென்படத் தொடங்கின. பத்து நாள்களுக்கு முன்பு மாணாலியில் பார்த்தது, அதன்பிறகு இப்போதுதான் கண்கள் கூசும் அளவிற்குப் பச்சை நிறம் தென்படுகிறது.

கணவாய்க்கு முன்பே சுரங்கப்பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த ஓரிடத்தில் சிறிய நீர்நிலை ஓடிக்கொண்டிருந்தது. கட்டக் கடைசியாக அந்த வாட்டர் கிராசிங்கையும் கடந்து, ஜோஜிலாவை அடைந்தோம். மதிய உணவுக்கு சோன்மார்க் சென்றுவிடலாம், ஆனால் கொஞ்சம் தாமதமாகும், என்பதால் அங்கிருந்த சாலையோரக் கடை ஒன்றில் நிறுத்தினோம். அருகருகே சில கடைகள் இருந்தன.

நம் உள்ளூர் தேநீர்க்கடை அளவே இருந்தாலும், சிறியதாகக் கூரையைப் போட்டு வருபவர்களை உள்ளே உட்கார வைத்தனர். நாங்கள் சொல்லியிருந்த உணவுகள் தயாராகும் வரை எங்கிருந்து வருகிறோம், எதுவரை செல்லவிருக்கிறோம் என்ற விசாரிப்புகள் இருந்தன. இதற்கு முன் இந்தப் பாதையில் வந்திருக்கிறீர்களா என்றெல்லாமும் கேட்டார்கள்.

அடுத்த இருபது நிமிடங்களில் அங்கிருந்து நாங்கள் கிளம்ப ஆயத்தமாகிக் கொண்டிருந்தோம். தலைக்கவசமெல்லாம் அணிந்து கொண்டு வண்டியில் ஏறும்போது சற்று தொலைவிலிருந்த கடைக்காரர் ஒருவர், உரத்த குரலில் ‘பார்த்து, பத்திரமாகப் போய்வாருங்கள். வண்டியை மெதுவாக ஓட்டுங்கள்’ என்றார். அதைக் கவனித்துக் கொண்டிருந்த மற்றவர்களும் ‘பயப்படமா போங்க’ ‘கவனமா போங்க’ என்று அறிவுரைகளை அள்ளி வீசி எங்களைப் பதறவைத்தனர். எச்சரிக்கும் அளவிற்கு ஏதோ பெரிய வில்லங்கம் காத்திருக்கிறது எனப் புரிந்தது.

அந்த ஊரின் பெயர் தெரியாத காவல் தெய்வதையும், பெயர் தெரிந்த மற்ற தெய்வங்களையும் ஒரு நொடி மனத்தில் நினைத்துக்கொண்டு கிளம்பினோம். இவர்கள் எதையும் சொல்லாமல் இருந்திருந்தாலே, நாங்கள் இயல்பாக இருந்திருப்போம். பயப்பட வேண்டாம் எனச் சொல்லி அனைவருக்கும் கிலி ஏற்படுத்திவிட்டிருந்தனர். மலை வளைவுகளை நெருங்கும்போதுதான் வெகுநேரமாக எங்களைக் கடந்து எண்ணற்ற லாரிகள் சென்றுகொண்டிருந்தது நினைவுக்கு வந்தது. அந்த லாரிகள் எங்களுக்கு முன்பு வரிசையாக நின்றிருந்தன. ஒரு லாரி செல்லும் அளவுதான் சாலையையே அமைத்திருந்தனர். அளவு எடுத்துச் செய்ததைப்போல.

மிகுந்த கவனத்தோடு நிதானமாகத்தான் சென்றுகொண்டிருந்தோம் என்றாலும், இடப்புறம் தெரிந்த பள்ளத்தாக்கு அச்சமூட்டக்கூடியதாக இருந்தது. அதிலும் எதிர்புறம் லாரி வரும் போது அதற்கு வழிவிட்டு, மேலும் இடது பக்கம், அதாவது, படுகுழிக்கு மேலும் அண்மையில் பைக்குகள் வந்தபோது, என்னையும் அறியாமல் பயத்தில் என்னுடல் வலப்புறம் நகர்ந்தது. அந்த அதிர்வில் வண்டி அசைந்தது. அது நிச்சயம் நவீனுக்கு பைக்கின் சமநிலையைக் காப்பதில் சிரமத்தைக் கொடுத்திருக்கும். அப்போதைக்கு அவர் ஒன்றும் சொல்லவில்லை. எதிர்புறம் வண்டிகள் கடந்ததும், என்னிடம் பேசினார்.

‘இடதுபுறம் பார்க்காதே, எதிரில் வரும் வண்டிகளைக் கவனமாகப் பார்த்து எனக்குச்சொல்’ என்றார்.

பள்ளத்தாக்கைப் பற்றிய பயம் சற்று குறையும் என்பதற்காக அவர் அப்படிச் செய்யச்சொன்னர். ஆனால் அடுத்த ஐந்து நிமிடங்களில் இரண்டு மூன்று முறை, சாலையின் விளிம்பு வரை பைக் சென்றது. எங்கேனும் சில கற்கள் தடுக்கினாலும், வண்டி சறுக்கிவிடும். பயத்தில் இதயத்துடிப்பு அதிகமாகியிருந்தது, ஜோஜிலாவின் அழகைப் பார்த்த உற்சாகமும் பலமடங்காகியிருந்தது. நொடிக்கொருமுறை மாறிகொண்டிருந்த சமிக்ஞைகளை கண்டு ஆபத்தில் இருக்கிறோமா, மகிழ்ச்சியில் இருக்கிறோமா என்று மூளையே அன்று குழம்பியிருக்கும்.

நல்ல வேளையாக ஒரு கட்டத்தில் அந்த மலைப்பாதை இரு வழிகளாகப் பிரிக்கப்பட்டு, சோனன்மார்கிலிருந்து லே செல்லும் வாகனங்கள் ஒரு வழியிலும், கார்கிலிருந்து செல்லும் வண்டிகள் இன்னொரு வழியிலும் மாற்றிவிடப்பட்டன. அந்தப் போக்குவரத்து மாற்றம் அதிகம் நேரம் பிடித்தது. அரைமணி நேரத்திற்கும் மேல் அங்கே காத்திருந்து மலையிறங்கினோம்.

ஸ்ரீநகர் ஊருக்குள் வந்ததும், சில நிமிடங்களில் தால் ஏரி வந்துவிடும் என்றே நினைத்திருந்தேன். ஆனால் அந்நகரின் சாலையில் இருந்த போக்குவரத்து நெரிசலைக் கடந்து எங்கள் இருப்பிடத்திற்கு வருவதற்கு ஒன்றரை மணி நேரம் பிடித்தது. உடலில் இருந்த மொத்தத் தெம்பும் கரைந்துபோய் சோர்ந்திருந்த எனக்கு, அன்று தால் ஏரி கண்ணில் பட்டதும், பாங்காங் ஏரியைப் பார்த்தபோது ஏற்பட்ட ஆனந்தத்தைவிட அதிகமாக இருந்தது.

ஏரியை முழுச் சுற்று சுற்றித்தான் எங்கள் இருப்பிடம் அடைந்தோம். நகருக்கு மத்தியில் பரந்து விரிந்திருந்தது தால் ஏரி.

ஏரிக்கு எதிர்ப்புறம் ஓரிடத்தில் எங்கள் பைக்குகளை நிறுத்தினோம். முழுப் பயணத்திலும் எங்களைப் பத்திரமாகக் கொண்டுவந்து சேர்த்த பைக்கை ஒரு முறை தொட்டுப் பார்த்து, நன்றி எனத் தட்டிக்கொடுத்தேன். அன்றைய தினம் பார்க்க வேண்டிய இடங்கள் இன்னும் மீதமிருந்தாலும், பைக்கில் எங்களுடைய பயணம் அத்துடன் முடிகிறது. அன்றைய எங்கள் தங்குமிடத்திற்குப் படகில் செல்வதாக ஏற்பாடு. தால் ஏரியில் உள்ள படகு இல்லத்தில் அன்று தங்கினோம். பெரிய மோட்டார் போட்டில் முதலில் எங்கள் பைக்குகளை ஏற்றிவிட்டுப் பின் ஒவ்வொருவராக நாங்கள் ஏறினோம்.

தலைக்கவசங்களை அணிந்துகொண்டு வரிசையாகச் சென்றுகொண்டிருந்தவர்கள், அப்போதுதான் முதன்முறையாக நேருக்கு நேராக முகங்காட்டியபடி பயணம் செய்தோம். பயணத்தை முடித்த பூரிப்பும், பெருமையும் அனைவரிடத்திலும் தெரிந்தது. அதைவிட அதிகமாக சோர்ந்தும்போயிருந்தோம். குழுவாகப் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு, அன்றைய மாலை கொண்டாட்டங்களுக்கான யோசனைகளைப் பகிர்ந்துகொண்டோம். கல்லும், மண்ணும், மலையுமாக ஆயிரம் மைல்கள் கடந்துவந்து தால் ஏரியில் ஓய்வெடுக்கக் கிடைத்தது, மீண்டும் அதேபோல இன்னொரு பயணத்தை மேற்கொள்வதற்கான புத்துணர்ச்சியைக் கொடுத்தது.

மறுநாள் அதிகாலையில் தால் ஏரியில் சிகாரா படகுசாவரி. பனி சூழ பறவைகளின் கீச்சொலியில் எங்கள் படகு நகர்ந்துகொண்டிருந்தது. பத்து நாள் சாகசக்கதைகளைப் திரும்பிப்பார்க்க இதைவிடச் சிறந்த இடம் இருக்கமுடியாது என்றே தோன்றியது. 

இமயமலைகள் மனிதக்குலத்தின் மகத்தான அத்தியாயங்களுக்கு மௌனச் சாட்சிகளாக இருந்திருக்கின்றன. அலெக்சாண்டரின் படைகள் ஒரு காலத்தில் இந்த சரிவுகளிடையேதான் வியப்புடனும், பயத்துடனும் இறங்கியிருக்கும். முகலாய மன்னர்கள் தங்கள் அகண்ட ராஜ்ஜியக் கனவுகளை அடைவதற்கு இந்த மலைகளின் மர்மங்களைப் புரிந்துகொள்ள வேண்டியிருந்தது. இதே மலைத்தொடர்கள்தாம் புத்தத் துறவிகளுக்கு ஞானத்தின் இருப்பிடமாகவும் அமைந்தது. பட்டுநூல் வியாபாரக் காலத்தில் எண்ணற்ற வணிகர்கள் இந்தப் பாதைகளில் அலைந்து திரிந்திருப்பார்கள். ஆனால் எங்களுக்கு விஸ்தரிப்பதற்குப் பேரரசுகள் இல்லை, சாதனைகளை முறியடிக்கும் நோக்கமும் இல்லை, உயர்ந்த ஆன்மிகத் தேடல்கள் நிச்சயமாக இல்லை. இயற்கையைச் சற்று அருகில் நெருங்கித் தெரிந்துகொள்ளும் ஆர்வம் ஒன்றைத்தவிர வேறெதுவுமில்லை.

இவ்விடம் பல நூற்றாண்டுகளாகத் தன்னிடம் வரும் அனைவருக்கும் பேதமின்றி இடமளித்திருக்கிறது. சக்ரவர்த்திகளும், சாமானியர்களும், புகழ் பெற்றவர்களும், மறக்கப்பட்டவர்களும் அங்கு ஒன்றுதான். அனைவருமே அதனொரு பகுதியாகிவிடுகிறோம்.

ராஜ்ஸ்ரீ செல்வராஜ் 


rajshriselvaraj02@gmail.com

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

my vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *