• October 7, 2025
  • NewsEditor
  • 0

விஜய் டிவியில் பிக்பாஸ் 9வது சீசன் தொடங்கி விட்டது. ‘ஆரம்பத்துலயே ஆரம்பிச்சிட்டாய்ங்கப்பா’ என்கிற ரீதியில் முதல் நாளே ‘வாட்டர்மெலன்’ திவாகர் சக போட்டியாளர்களுடன் மல்லுக்குட்டுகிற மாதிரியான புரோமோக்கள் வெளியாகியுள்ளன.

இந்தச் சூழலில் இந்தச் சீசனில் சின்னத்திரை நட்சத்திரங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு பெரும்பாலான போட்டியாளர்கள் சமூக ஊடகங்களில் பிரபலமானவர்களாகப் பார்த்து அழைத்து வந்திருக்கின்றனர்.

தவிர, மியூசிக் கோட்டாவில் வழக்கமாகக் களமிறங்கும் கானா ஏரியாவில் இருந்து வினோத் வந்திருக்கிறார். வடசென்னையின் சர்மா நகர் பகுதியில் வசித்து வரும் வினோத் குறித்து அவரது நட்பு வட்டத்தில் தொடர்பு கொண்டு பேசினோம்.

மன்னர் முத்து

‘சர்பட்டா’, ‘பாரிஸ் ஜெயராஜ்’ முதலான சில படங்களில் பாடியிருக்கும் பின்னணிப் பாடகர் மன்னர் முத்து வினோத்தின் தம்பிகளில் ஒருவர்.

‘அண்ணனுக்குப் பூர்வீகம் ராயபுரம். கானாதான் முழு நேர வேலை. எனக்கு இருபது வருஷத்துக்கு மேல தெரியும். எனக்கு அவர்கிட்ட ரொம்ப பிடிச்சது ரெண்டு விஷயம்தான். முதலாவது காசு கொட்டிக் கொடுத்தாலும் கஞ்சா, ரௌடியிசம் போன்ற விஷயங்களை ஆதரிச்சுப் பாடவே மாட்டார். இப்ப கானாவுல சிலர் இதையெல்லம் என்கரேஜ் செய்றாங்கங்கிறதை இந்த இடத்துல குறிப்பிட்டுச் சொல்ல விரும்புறேன்.

ஆனா அண்ணன் அதைப் பண்ணவே மாட்டார். அதை ஒரு பாலிசியாவே வச்சிருக்கார். ரெண்டாவது பிடிச்ச விஷயம், தன் சம்பாத்தியத்துக்குள்ளேயே உதவினு கேட்டு வர்ற ஏரியா மக்களுக்கு முடிஞ்சதைச் செய்வார்.

கானாவுல அஞ்சு நிமிஷத்துல கூட பாட்டை உருவாக்கிடுவார். அதேபோல சமூக விழிப்புணர்வை கானாவுல கொண்டு வர்றதுக்கும் முக்கியத்துவம் தருவார்.

Bigg Boss 9 - விஜய் சேதுபதி
Bigg Boss 9 – விஜய் சேதுபதி

‘வாலிபர் கானா’ இவருடைய ஆல்பங்கள்ல முக்கியமான ஒண்ணு. சினிமாவுலயும் பாடியிருக்கார். சாண்டி மாஸ்டர் அண்ணனுடைய நண்பர்தான். அதனால விஜய் டிவியின் பல நிகழ்ச்சிகள்ல ஒர்க் பண்ணியிருக்கார். ஏன் இதே பிக்பாஸ் நிகழ்ச்சியின் முந்தைய சீசன்களைக் கலாய்ச்சுக்கூட பாடியிருக்கார்.

அப்படிப்பட்டவர் இப்ப நிகழ்ச்சிக்குள் போயிருக்கார். கேமை எப்படி ஆடுறார்னு பார்க்க நான் மட்டுமல்ல எங்க மொத்த ஏரியா மக்களுமே வெயிட் பண்ணிட்டிருக்குது’ என்கிறார் இவர்.

வினோத்தின் மனைவி பாக்யா, சர்மா நகரில் பியூட்டி பார்லர் வைத்துள்ளாராம். மகன், மகள் என வினோத்துக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *