• October 7, 2025
  • NewsEditor
  • 0

அரசு கேபிளில் புதிய தலைமுறை சேனல் பிளாக் செய்யப்பட்டிருக்கிறது என்று ஊடக வட்டாரத்திலும், அரசியல் வட்டாரத்திலும் கடந்த மூன்று நாட்களாக பரபரப்பாகப் பேசப்படுகிறது. நான் விசாரித்தவரை, சென்னையைத் தவிர தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் இந்தப் பிரச்னை இருக்கிறது. இது தொடர்பாக, தமிழக அரசின் தரப்பிலோ, சம்பந்தப்பட்ட சேனல் நிர்வாகத்தின் தரப்பிலோ வெளிப்படையான கருத்துக்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

‘புதிய தலைமுறை சேனலில், த.வெ.க தலைவர் விஜய் தொடர்பான செய்திகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. கரூர் துயரச் சம்பவத்தில் அரசின் பக்கம் நிறைய தவறுகள் இருக்கின்றன என்ற ரீதியில் செய்திகள் வெளியிடப்பட்டன’ என்ற எண்ணம் தமிழக அரசுக்கு இருப்பது போலவும், அதனால்தான், அரசு கேபிளில் புதிய தலைமுறை சேனல் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது என்பது போலவும் ஒரு பேச்சு நிலவுகிறது. இதில் எவ்வளவு உண்மைகள் இருக்கின்றன என்பது தெரியவில்லை.

கரூர் மருத்துவமனை

‘சரியான அணுகுமுறை இல்லை’

எதுவாக இருந்தாலும், ஒரு செய்திச் சேனலை அரசு கேபிளிலிருந்து தூக்குவது சரியான அணுகுமுறை கிடையாது. ஒரு செய்திச் சேனலில் எல்லா விதமான செய்திகளையும் வெளியிடுவார்கள். கரூர் சம்பவம் தொடர்பான செய்திகளை எடுத்துக்கொண்டால், பல்வேறு தரப்பினரின் கருத்துகளும் வெளியிடப்படுகின்றன. தி.மு.க கூட்டணி கட்சிகளின் கருத்துக்கள், அ.தி.மு.க., பா.ஜ.க கட்சிகளின் கருத்துகள் என எல்லா கட்சிகளின் கருத்துகளையும் செய்தியாக வெளியிடுகிறார்கள். எனவே, இந்த விவகாரத்தில் முழுக்க முழுக்க அரசின் பக்கமே தவறு என்று செய்தி வெளியிட வாய்ப்பு இல்லை.

‘கருத்து சுதந்திரத்தை முடக்கும் செயல்’

இந்த நிலையில், ஒரு தரப்பு கருத்துக்களை மட்டுமே அந்த சேனலில் வெளியிடுகிறார்கள் என்று அரசுத் தரப்பு பார்ப்பதும், அதற்கான அந்த சேனலுக்கு இடையூறு செய்வதும் கருத்து சுதந்திரத்தை முடக்கும் செயலாகும். அரசைப் பொருத்தவரையில், சின்ன சின்ன விஷயங்களில் தலையிடாமல், கொஞ்சம் பெருந்தன்மையோடு இருப்பது நல்லது.

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்
தமிழக வெற்றிக் கழகம் விஜய்

‘இன்றைக்கு விஜய் பேசுபொருள்’

தெரிந்தோ, தெரியாமலோ இன்றைக்கு விஜய் ஒரு பேசுபொருளாக இருக்கிறார். கரூர் விவகாரத்தில் பல்வேறு விஷயங்கள் நிகழ்ந்துக்கொண்டிருக்கின்றன. நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறுகிறது, பல விவாதங்கள் நடைபெறுகின்றன. த.வெ.க மீதும், விஜய் மீது சிலர் குறை சொல்கிறார்கள். அரசு மீது சிலர் குற்றம்சாட்டுகிறார்கள். மக்களை மீது குறை சொல்லப்பவர்களும் இருக்கிறார்கள். இந்த செய்திகள் எல்லாவற்றையும் எல்லா சேனல்களும் ஒளிபரப்புகிறார்கள்.

சேனல்களுக்கு சில வர்த்தக நோக்கங்கள் இருக்கும். அவற்றையும் சேர்த்துப் பார்த்துதான் சேனல் நிர்வாகம் செயல்படும். புதிய தலைமுறை மட்டுமல்ல,.. பல சேனல்களும் விஜய்க்கு பப்ளிசிட்டி கொடுக்கின்றன. சொல்லப்போனால், தி.மு.க ஆதரவு சேனல்களும் அதைத்தான் செய்கின்றன.

`ஜெயலலிதா, எடப்பாடி ஆட்சியிலும் சிக்கல்’

இப்போது மட்டுமல்ல. இதற்கு முன்பு ஜெயலலிதா ஆட்சியிலும், எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலும் இதுபோன்ற சிக்கல்களை ஊடகங்கள் சந்தித்தன. தி.மு.க ஆட்சிக்கு வந்தால், அவர்களுக்கு ஆதரவான சேனல்களுக்கு அரசு கேபிளில் முக்கியத்துவம் கொடுத்து, எதிர்க்கட்சி சேனலை கடைசியில் தள்ளிவிடுவதும் நடக்கும். அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தால், அவர்களும் அதையே செய்வார்கள்.

அரசே கேபிள் நடத்தினால் இதுபோன்ற தவறுகள் நடக்கும். அரசே கேபிள் நடத்துவது தவறு. 2008-ல் தி.மு.க ஆட்சி நடைபெற்றபோது, அரசு கேபிள் எப்படி ஆரம்பிக்கப்பட்டது என்பது எல்லோருக்கும் தெரியும். ஒரு சேனல் நிர்வாகத்துடன் ஏற்பட்ட தகராறு காரணமாக தி.மு.க அரசு ஆரம்பித்தது.

அரசு கேபிளில் 'புதிய தலைமுறை' சேனல் நிறுத்தம்?
அரசு கேபிளில் ‘புதிய தலைமுறை’ சேனல் நிறுத்தம்?

சுதந்திரமாக செயல்படும் மீடியாக்கள் ஆட்சியாளர்களின் கோபத்துக்கு ஆளாவதும் நடக்கிறது. அத்தகைய சேனல்களுக்கு அரசு விளம்பரங்கள் நிறுத்தப்படுவதும் உண்டு.

நாட்டில் எது பேசுபொருளாக இருக்கிறதோ, அதற்கு ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுப்பது வழக்கமான ஒன்று. அது தவிர்க்க முடியாதது. அதற்காக அந்த சேனலை முடக்குவது என்பது சீப்பை ஒளித்துவைத்தால் திருமணம் நின்றுவிடும் என்ற கதையாகத்தான் இருக்கும். தற்போதைய விவகாரத்தைப் பொருத்தவரை, இதை நீண்ட நாள் நீடிக்க அரசும் விரும்பாது, சம்பந்தப்பட்ட சேனல் நிர்வாகமும் விரும்பாது. எனவே, இந்தப் பிரச்னை விரைவில் முடிவுக்கு வரும் என்று எதிர்பாக்கலாம்.!

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *