• October 7, 2025
  • NewsEditor
  • 0

அரசு கேபிளிலிருந்து முன்னணி செய்தி சேனலான புதிய தலைமுறை பல பகுதிகளில் நீக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன.

கரூர் சம்பவத்தில் அரசை விமர்சிக்கும் தொனியில் வெளியிடப்பட்ட செய்திகளால்தான் புதிய தலைமுறை சேனல் நீக்கப்பட்டிருக்கிறது என தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

ஊடக சுதந்திரத்துக்கு எதிரான இந்த நடவடிக்கையை கண்டித்து அரசியல் கட்சியினர் பலரும் தங்களின் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம்

இது தொடர்பாக சென்னை பத்திரிகையாளர் மன்றம் வெளியிட்டிருக்கும் எக்ஸ் பதிவில், “அரசு கேபிள் நிறுவனத்திலிருந்து புதிய தலைமுறை தொலைக்காட்சி நீக்கப்பட்டுள்ள நடவடிக்கையை சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டிக்கிறது.தனியார் மற்றும் அரசு கேபிள் நிறுவனங்கள் மற்றும் டிடிஎச் சேவை வழங்கும் நிறுவனங்கள் மூலம், செய்தி தொலைக்காட்சிகள் உட்பட அனைத்து தொலைக்காட்சிகளும் மக்களின் பார்வைக்கு சென்றடைகின்றன. 

தகுதி இருந்தும் செய்தி தொலைக்காட்சிகளுக்கு இந்த சேவையை வழங்க மறுப்பது அல்லது முன்னறிப்பின்றி ஒளிபரப்பை நிறுத்துவது கருத்து சுதந்திர ஒடுக்குமுறையாகும்.புதிய தலைமுறை தொலைக்காட்சி கடந்த இரண்டு தினங்களுக்கு முன், எந்தவித முன்னறிவிப்பும் இன்றி அரசு கேபிள் சேவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இது உண்மை எனும் பட்சத்தில், அப்பட்டமான கருத்து சுதந்திர ஒடுக்குமுறையாகும். இந்த நடவடிக்கையை வன்மையாக கண்டிப்பதுடன், நிறுத்தப்பட்ட ஒளிபரப்பை உடனே தொடங்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.” எனக் குறிப்பிட்டிருக்கிறது.

எடப்பாடி பழனிசாமி கண்டனம்

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தன் எக்ஸ் பக்கத்தில், “அரசு கேபிள் டிவி-யில் இருந்து புதிய தலைமுறை செய்தி சேனல் ஸ்டாலின் மாடல் திமுக அரசால் முடக்கப்படுவதாக செய்திகள் வருகின்றன.கடந்த சில நாட்களாக முற்றிலுமாக தடை செய்யப்பட்டிருந்ததாக தகவல் வரும் நிலையில், இதுகுறித்து பல்வேறு தரப்பில் இருந்து கண்டனம் எழுந்ததும், தற்போது சில இடங்களில் மட்டும் வருவது போல் செய்து, பல இடங்களில் தடையைத் தொடர்ந்து வருகிறது விஞ்ஞான தகிடுதத்தங்களுக்குப் பெயர் போன விடியா திமுக அரசு.

பாசிசப் போக்கின் மொத்த உருவமாக மாறிவிட்ட ஸ்டாலின் அரசு, ஊடகங்களில் தப்பித் தவறிக் கூட தங்களுக்கு எதிரான செய்திகள் வந்துவிடக் கூடாது என்பதில் குறியாக இருக்கிறது. அரசின் தவறுகளைச் சுட்டிக்காட்டுவதில் மக்களாட்சியின் நான்காம் தூணான ஊடகங்களுக்கு முக்கியப் பங்குண்டு.

அவற்றை திருத்துவதற்கான வாய்ப்பாகக் கருதாமல், பழி வாங்கும் நோக்கில் இருட்டடிப்பு செய்து முடக்க நினைப்பது கடும் கண்டனத்திற்குரியது. உடனடியாக அரசு கேபிளில் புதிய தலைமுறை சேனலின் ஒளிபரப்பு தொடரப்படுவதை உறுதி செய்ய வேண்டுமென ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

புதிய தலைமுறை சொல்வது என்ன?

இந்த விவகாரம் தொடர்பாக புதிய தலைமுறை செய்தி சேனலின் செய்தி ஆசிரியர் சமஸிடம் பேசினோம்.

அவர், “புதிய தலைமுறை செய்தி சேனல் சில பகுதிகளில் அரசு கேபிளில் தெரியவில்லை என கடந்த வெள்ளிக்கிழமை முதல் புகார்கள் வரத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து சோதித்ததில், சில பகுதிகளில் சேனல் தெரியவில்லை என்பதை கண்டறிந்தோம். அதே நேரம் எங்கள் சேனல் முழுமையாக முடக்கப்படவில்லை. அரசு தரப்பிலும் அரசு கேபிள் நிறுவனத்திலும் பேசியபோது, சேனலை முடக்கவில்லை என்று தெரிவிக்கின்றனர். 

எனினும் இன்னும் எதுவும் சரியாகவில்லை. உரிய விளக்கமும் அவர்கள் தரவில்லை. தொடர்ந்து பேசிவருகிறோம்.” என்றார்.இதற்கு முன்பாக 2016-21 அதிமுக ஆட்சி காலத்திலும் ஒரு முறை புதிய தலைமுறை சேனலை அரசு கேபிளில் இருந்து நீக்கியிருந்தார்கள்.

சமூகத்தின் பல மட்டங்களிலிருந்தும் கண்டனங்கள் எழுந்த பிறகே மீண்டும் புதிய தலைமுறை சேனல் அரசு கேபிளில் இணைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *