
ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதால், இந்தியா மீது மட்டுமல்ல, பிரேசில் மீதும் கூடுதல் 25 சதவிகித வரியை விதித்திருக்கிறது அமெரிக்கா.
இந்த வரி விதிப்பிற்கு ஆரம்பத்தில் இருந்தே கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகிறார் பிரேசில் அதிபர் லூலா.
சமீபத்தில், பிரிக்ஸ் அமைப்பின் தலைவர்களை ஒன்றுசேர்த்து ஆன்லைன் கூட்டம் ஒன்றை நடத்தியிருந்தார் லூலா. அதில், ‘வரி பிளாக்மெயில் கருவியாகப் பயன்படுத்தப்படுகிறது’ என்று கடுமையாக வரி விதிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், நேற்று லூலாவிற்கு போன் செய்திருக்கிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.
அதுகுறித்து லூலா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது,
“இன்று காலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்பிடம் இருந்து போன்கால் வந்தது. நாங்கள் 30 நிமிடம் உரையாடினோம். மேலும், ஐ.நா பொதுச்சபையின் போது நியூயார்க்கில் இருவரும் பகிர்ந்துகொண்ட நல்ல தருணங்கள் குறித்து பேசினோம்.
இந்த நேரடி உரையாடல் என்பது மேற்கில் உள்ள இரண்டு பெரிய ஜனநாயக நாடுகளின் 201 ஆண்டுகால நட்பை வலுவாக்குவதற்கான வாய்ப்பாக நான் பார்க்கிறேன்.
வரிகளை நீக்க சொல்லி
இந்தப் போன்காலின்போது, ஜி-20 நாடுகளில் அமெரிக்கா வர்த்தக உபரி வைத்திருக்கும் மூன்று நாடுகளில் பிரேசிலும் ஒன்று என்று கூறினேன்.
மேலும், பிரேசில் பொருள்கள் மீது விதிக்கப்பட்டுள்ள 40 சதவிகித கூடுதல் வரியையும், பிரேசில் அதிகாரிகள் மீது விதித்துள்ள தடைகளையும் நீக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன்.
அதிபர் ட்ரம்ப் பிரேசில் துணை ஜனாதிபதி ஜெரால்டோ அல்க்மின், வெளியுறவு அமைச்சர் மௌரோ வியேரா மற்றும் நிதி அமைச்சர் பெர்னாண்டோ ஹடாட் உடனான அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு வெளியுறவுத் துறை செயலர் மார்க் ரூபியோவை நியமித்துள்ளார்.

அமெரிக்கா செல்லவும்
நாங்கள் இருவரும் விரைவில் சந்தித்துக்கொள்ளவும் முடிவு செய்துள்ளோம். மலேசியாவில் நடக்கும் ஆசியான் கூட்டத்தில் சந்தித்துக்கொள்ளலாம் என்று நான் பரிந்துரைத்தேன்.
பெலெமில் நடைபெறும் COP30-ல் பங்கேற்க ட்ரம்பை வலியுறுத்தினேன். நான் அமெரிக்கா செல்லவும் சம்மதித்துள்ளேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
Recebi, nesta manhã (6/10), telefonema do presidente Trump. Conversamos por 30 minutos e relembramos a boa química que tivemos no encontro em Nova York por ocasião da Assembleia Geral da ONU.
Considero nosso contato direto como uma oportunidade para a restauração das relações…
— Lula (@LulaOficial) October 6, 2025