
போட்டியாளர்கள்தான் பெருமளவு சுவாரசியமில்லை என்று பார்த்தால், வீட்டில் நடக்கும் சண்டைகளிலும் பெரிய சுவாரசியம் எதுவுமில்லை. குறட்டை பிரச்னை, கக்கா பிரச்னை என்று சாதாரணவற்றிற்குக்கூட அடித்துக் கொள்கிறார்கள். போதாக்குறைக்கு திவாகர் ‘டாக்டரா, வெறும் பிஸியோவா?’ என்கிற மருத்துவ ஆராய்ச்சி உரையாடல் வேறு. அதுவும் அதிகாலை 3 மணிக்கு.
கலையரசன் அருள்வாக்கு சொல்லும் சாமியாராக இருந்தார் என்கிறார்கள். ஆனால் அவரையே ஏதாவது ஒரு சாமியாரிடம் அழைத்து மந்திரித்துவிட வேண்டும்போல. சூன்யம் வைத்தது போல் உட்கார்ந்திருக்கிறார். இந்த வரிசையில் அப்சரா, ஆதிரை, வியன்னா என்று ஒரு பெரிய லிஸ்ட்டே செட் பிராப்பர்ட்டிகள் மாதிரி வெறுமனே உலவுகிறார்கள்.
இவர்களை உசுப்பி விடுவதற்காக பிக் பாஸ் சில பட்டாசுகளை கொளுத்திப் போட்டிருக்கிறார். அது வெடிக்குமா?
விவேக் நடித்த ஒரு காமெடி காட்சியில் நடுராத்திரியில் டாக்டரை அழைத்து ‘நீங்க வெறும் தாஸா?’ என்று விசாரிப்பதைப் போல, பிக் பாஸ் வீட்டின் அதிகாலையில் ‘நீங்க டாக்டரா அல்லது பிஸியோவா?’ என்கிற கேள்வியை திவாகரை நோக்கி பற்ற வைத்தார் பிரவீன்ராஜ்.
கொளுத்திவிட்டு அவர் கிளம்பி விட “அதெல்லாம் மெடிக்கல் டெர்ம்ஸ். உங்களுக்கு படிச்சாகூட புரியாது” என்று திவாகர் கெத்தாக சொல்ல, “தெரியாதுன்னு சொன்னா கூட ஓகே. அது என்ன படிச்சா கூட புரியாது. நாங்க என்ன முட்டாளா?” என்கிற மாதிரி கெமி சண்டைக்கு வர ரகளை ஆரம்பம். விசாரித்தவரையில் பிஸியோதெரபிஸ்ட்டுகள், ‘டாக்டர்’ என்கிற அடைமொழியை போட்டுக் கொள்ளக்கூடாது என்கிறார்கள். திவாகர் ஸ்பெஷலாக படித்தவர் போல. இவர் டாக்டரா அல்லது ஆக்டரா என்கிற குழப்பம் வேறு.
அதிகாலை ஆறு மணி இருக்கும். `கோழி கொக்கரக்கோ’ என்று கூவும் வேளையில் பிரவீன் காந்தி தனது பிரசங்க மோடில் உரையாட ஆரம்பித்தார். ‘பொதுவாக பெண்கள் பேராசையும் பொறாமையும் கொண்டவர்கள்’ என்று அவர் சொற்பொழிவாற்ற, கூட நின்று கேட்டுக் கொண்டிருந்த நந்தினி “அது எப்படி பெண்களை பொதுவாக இப்படிச் சொல்லலாம்? ஆண்கள்ல கூடத்தான் பேராசை பிடிச்சவங்க இருக்காங்க” என்று எதிர் தாக்குதல் நடத்த, ‘இது என்னடா வம்பா போச்சு’ என்று ஜெர்க் ஆன பிரவீன்காந்தி “இல்லம்மா.. நான் என்ன சொல்ல வர்றேன்னா.. பெண்கள்தான் இயக்குகின்ற சக்தி” என்று ரிவர்ஸ் கியர் போட்டு எஸ்கேப் ஆனார். (தப்பிச்சோம்டா சாமி!).

அடுத்த பிரச்சினை குறட்டை சத்தமாக வெடித்தது. “தூங்கும் போது நீங்க குறட்டை விடறீங்க?” என்று திவாகரை நோக்கி பிரவீன்ராஜ் சொல்ல, “முழிச்சிட்டு இருக்கும் போது குறட்டை வராது.. இதுக்குத்தான் மெடிக்கல் டெர்ம் தெரியணும்ன்றது” என்று எடக்கு மடக்காக திவாகர் சொல்லி விடுவாரோ என்று பார்த்தால் இல்லை. ‘நீதான் குறட்டை விடறே.. இல்ல நீதான்’ என்று ‘உன் குறட்டைக்கும். என் குறட்டைக்கும் பந்தயம் வெச்சுக்குவமா?’என்கிற மாதிரி இருவரும் சண்டை போட்டுக் கொண்டார்கள்.
இந்தச் சண்டைக்கு நடுவில் ‘கைய நீட்டிப் பேசாதீங்க” என்று பிரவீன்ராஜ் திவாகரிடம் எகிறினார். வாட்டர்மெலனை கடித்துக் கொண்டே கையை ஆட்டி ரீல்ஸ் போட்டு பழகி விட்ட திவாகரிடம் ‘கைய நீட்டாதே’ என்று சொன்னால் ஆகுமா? ரயில் வண்டி ஓடுவதைக் காட்டுவது போல இரு கைகளையும் வைத்துக் கொள்ளும் திவாகர் “இதோ பாரும்மா.. டீசன்ட்டா பேசணும்” என்று மல்லுக்கட்டுக் கொண்டிருந்தார்கள்.

திவாகர் டாக்டருக்குப் படித்தாரா, இல்லையா என்கிற சந்தேகம் பலமாக உலவிக் கொண்டிருக்கும் நேரத்தில் ‘படிச்ச நாயே.. கிட்ட வராதே’ என்கிற பாடலை வேக்-அக் சாங்-ஆக பிக் பாஸ் போட்டது தற்செயலாகத்தான் இருக்க வேண்டும். பெரும்பான்மையோர் நடனம் என்கிற பெயரில் குதித்து தீர்க்க, கலையரசனோ படுக்கையில் ஏகாந்தமாக ஆன்மிக உறக்கத்தில் இருந்தார்.
சபரிநாதன் கையை ஆவேசமாகத் தூக்கி இறக்கி மூச்சுப் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்க ‘டேய்.. எதுவா இருந்தாலும் சொல்லிட்டு செய்டா.. பயமா இருக்கு’ என்கிற மாதிரி எதிரே உட்கார்ந்து வேடிக்கை பார்த்தார் எஃப்ஜே.
‘இவங்களை இப்படியே விட்டா சரிப்பட்டு வராது’ என்று நினைத்துக்கொண்ட பிக் பாஸ், “எல்லோரும் லிவ்விங் ஏரியாவிற்கு வாங்க. உங்களுக்கு தண்ணில கண்டம் இருக்கு” என்று அழைத்தார். பாத்ரூமில் ஃபிளஷ் ஆவதைத் தவிர, வீட்டிற்குள் எந்தக் குழாயிலும் தண்ணீர் வராது. வெளியே இருக்கும் டாங்க் தண்ணீர் மட்டும்தான் ஒட்டுமொத்த வீட்டின் நீர் ஆதாரம் என்பதை விளக்க,..
தண்ணீருக்கு ரேஷன் என்பதால் ‘நீர் நிர்வாகம்’ செய்ய இரண்டு பேர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். சூப்பர் டீலக்ஸ் வீட்டில் இருந்து சூப்பர் வைசர் ஒருவர் மற்றும் பிக் பாஸ் வீட்டில் இருந்து உதவியாளர் ஒருவர். மக்கள் கூடிப் பேசி கம்ருதீனையும் சபரிநாதனையும் தோ்ந்தெடுத்தார்கள்.
வெளியே இருக்கும் சிவப்பு விளக்கு எப்போது ஆன் ஆகும் என்று தெரியாது. அது எரிய ஆரம்பித்த பத்து விநாடிக்குள் டிரம்மை கொண்டு போய் வைத்துவிட வேண்டுமாம். தவற விட்டால் கக்கா போக, சுக்கா செய்ய என்று எதற்குமே தண்ணீர் கிடைக்காது என்று எச்சரித்தார் பிக் பாஸ்.

‘தண்ணீர்.. கண்ணீர்.. என்கிற வீக்லி டாஸ்க் இப்படியாக ஆரம்பித்தது. எப்போது லைட் எரியும் என்று குத்த வைத்து காத்திருந்தார் சபரி. பிரசார பீரங்கியான பிரவீன்காந்தி “டிரம்மை தள்ளிச் செல்ல பெண்களால் முடியாது. எனவே ஆண்கள் வரட்டும்” என்று வில்லங்கமான கருத்தை சொல்ல “அது எப்படி எங்களால முடியாதுன்னு சொல்லலாம்” என்று பெண்கள் சண்டைக்கு வந்தார்கள். கம்ரூதீன், சபரி ஆகிய இரு நபர்கள் மட்டுமே வாட்டர் மேனேஜ்மென்ட் செய்ய முடியும் என்று குறுக்கே வந்தார் பிக் பாஸ்.
உடல் முழுக்க பெயின்ட் அடித்துக் கொண்டு சிலை போல நிற்பார்கள் அல்லவா,? அந்த மாதிரியான லுக்கில் உடல் முழுக்க சோப்பு நுரையுடன் வந்து காட்சியளித்து பீதியை ஏற்படுத்தினார். பாத்ரூமில் தண்ணீர் வரவில்லை போல. அந்தச் சமயத்திலும் அவருக்குள் இருந்த நடிப்புத் தாகத்தை அவரால் அடக்க முடியாமல் முகத்தைச் சுளித்து வெறித்து ஃபெர்பாமன்ஸ் செய்ததெல்லாம் கோவம் வரவைக்கும் காமெடி ரகம்.
கழுவுகிற நீரில்தான் ரேஷன் என்று பார்த்தால் குடிக்கிற நீரிலும் ட்விஸ்ட் வைத்தார் பிக் பாஸ். ஸ்டோர் ரூமில் இருந்து ‘டக்.. டக். டக்’ என்று சத்தம் வருமாம். குறிப்பிட்ட நேரத்திற்குள் கதவைத் திறந்தால் மட்டுமே மூன்று பாட்டில் குடிநீர் கிடைக்கும். இல்லையென்றால் அம்போ!. எனில் அங்கேயும் ஒருவர் குத்த வைத்து காத்திருக்க வேண்டும். ‘தண்ணில கண்டம்’ விளையாட்டை எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் ஆடி மகிழ்ந்தார் பிக் பாஸ்.
திவாகர் செய்யும் அலப்பறை பற்றி ஆங்காங்கே புறணி பேசிக் கொண்டிருந்தார்கள். இதற்கு தலைமை ஏற்றவர் பிரவீன்ராஜ். கர்ணன் படக்காட்சியை பத்தாயிரத்து ஓராவது முறையாக திவாகர் மீண்டும் ரீப்ளே செய்ய ‘நடிப்புல நீங்க வேற லெவல் பாஸ்’ என்று சுற்றியுள்ளவர்கள் பாராட்டினார்கள். இவர்கள் உண்மையிலேயே பாராட்டுகிறார்களா அல்லது அவரை வைத்து டைம்பாஸ் செய்கிறார்களா என்று தெரியவில்லை. ‘சிவாஜி பார்த்தார்னா செருப்பால அடிச்சிருப்பாரு’ என்று வில்லங்கமான கமெண்ட்டை உதிர்த்தார் கானா வினோத்.

சூப்பர் டீலக்ஸ் வீட்டில் உள்ளவர்களை சிறப்பு அந்தஸ்து பெற்றவர்களாகவும் பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்களை சாதாரணமானவர்களாகவும் ஹாண்டில் செய்து அவர்களுக்குள் பிரிவினை மோதலை ஏற்படுத்த பிக் பாஸ் முயற்சி செய்கிறார். அதற்கான காய்கள் நகர்த்தப்பட்டன.
இந்த சீசனின் முதல் நாமினேஷன். சூப்பர் டீலக்ஸ் வீட்டில் இருக்கும் ஏழு நபர்களில் மூன்று நபர்களுக்கு நாமினேஷனில் இருந்து விலக்கு அளிக்கப்படும். அவர்கள் யார் என்பதே ஏழு பேரும் கூடிப் பேசி தேர்வு செய்ய வேண்டும் என்று அவர்களுக்குள் சண்டையை ஏற்படுத்த முயற்சித்தார் பிக் பாஸ்.
தங்களுக்கு இந்த வாய்ப்பு மிக முக்கியம் என்று துஷார், சுபிக்ஷா, ரம்யா ஆகிய மூவரும் சொல்ல, ‘இளைஞர்களுக்கு வழி விடுவிட்டு தியாகம் செய்வதில் எனக்கு தயக்கமில்லை’ என்று வாயை விட்டு மாட்டிக் கொண்டார் பிரவீன்காந்தி. பிக் பாஸ் வீட்டைப் பொறுத்தவரை இந்த தியாக பிசினஸ் எல்லாம் செல்லுபடியாகாது. கடைசி வரைக்கும் மோதிப் பார்க்கும் சர்வைவல் ஆட்டம் இது. பிரவீன்காந்தியின் இந்த ‘தியாக’ ஸ்டேட்மெண்ட் அவருக்கே பூமராங்க் ஆக மாறியது. நாமினேஷன் சமயத்தில் இதையே காரணமாக சொல்லி பலரும் அவரைக் குத்தினார்கள்.
பிரவீன்காந்தியோடு அரோரா மற்றும் கம்ரூதின் ஆகியோர் விட்டுக் கொடுத்ததால் இந்த வார நாமினேஷனில் இருந்து சுபிக்ஷா, ரம்யா, துஷார் ஆகிய மூவரும் தப்பித்தார்கள். அவர்களை யாரும் நாமினேட் செய்ய முடியாது.
நாமினேஷன் பிராசஸ் ஆரம்பித்தது. நடிப்பு அரக்கன் திவாகரின் அலப்பறை காரணமாக அவர் மீது நிறைய வாக்குகளை குத்தித் தீர்த்தார்கள். ஆனால் அவரையும் மிஞ்சி அதிகமான வாக்குகளைப் பெற்றார் கலையரசன். யாருடனும் பேசாமல், வேலையும் செய்யாமல் ஜென் நிலையிலேயே இருப்பது காரணம். இதே வரிசையில் வியன்னா, அப்சரா, ஆதிரைக்கும் சில வாக்குகள் வந்தன. கனியக்காவின் பெயரைச் சொல்லி பழிதீர்த்துக் கொண்டார் பார்வதி.
இறுதியில் இந்த வாரம் நாமினேட் ஆகியிருப்பவர்கள் வியன்னா (3), ஆதிரை (3), அப்சரா (3) பிரவீன்ராஜ் (3) பிரவீன்காந்தி (4) திவாகர் (7) கலையரசன் (12). ‘என்னது என் பேர் இல்லையா?” என்று ஆச்சரியப்பட்டார் பார்வதி.

சூப்பர் டீலக்ஸ் வீட்டில் இருப்பவர்களை முதலாளிகள் போலவும் பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்களை தொழிலாளிகள் போலவும் கையாண்டு சண்டைக்கான விதையை பலமாக நட்டு வைத்தார் பிக் பாஸ். சூப்பர் வீட்டில் உள்ளவர்களுக்கு பல வசதிகள் மற்றும் அதிகாரங்கள். ஆனால் பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்கள்தான் அனைத்து வேலைகளையும் செய்தாக வேண்டும். ஆறுதலாக ஒரே ஒரு நல்ல விஷயம். கேப்டன் பதவிக்கு பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்கள் மட்டுமே போட்டி போட முடியும்.
சூப்பர் டீலக்ஸ் வீட்டில் உள்ளவர்களுக்கு வேக் அப் சாங் கிடையாது. அவர்கள் எப்போது வேண்டுமானாலும் எழுந்து கொள்ளலாம். அவர்கள் அனைவரும் எழுந்த பிறகுதான் பிக் பாஸ் வீட்டார் அடுப்பைப் பற்ற வைக்க முடியும். சூப்பர் வீட்டார் கேட்கும் அனைத்து உணவுகளையும் செய்து தர வேண்டும். இப்படி கோக்கு மாக்கான விதிகளை உருவாக்கி பிரிவினை உணர்வை ஆழமாக ஏற்படுத்தினார் பிக் பாஸ்.

“நீங்க ஒரு நாள் இருந்த லட்சணமே போதும். இதுக்கு மேல உங்க கிட்ட சரக்கு கிடையாது. கௌம்புங்க” என்கிற மாதிரி ‘ஒருநாள் கூத்து’ என்னும் டாஸ்க்கை அடுத்ததாக ஆரம்பித்தார் பிக் பாஸ். இதில் கலையரசன், வியன்னா, திவாகர், துஷார், பிரவீன்காந்தி போன்றவர்களுக்கு அதிகபட்சமாக மூன்று ஸ்டிக்கர்கள் கிடைத்தன. “யாரையும் தப்பா சொல்ல மாட்டேன். எனக்கு சங்கடமா இருக்கு” என்கிற பில்டப்புடன் திவாகர் பேச ஆரம்பிக்க “நீங்க பண்றது எனக்கு கூடத்தான் சங்கடமா இருக்கு. என்ன பண்றது?” என்று குறுக்கிட்டு காமெடி செய்தார் பிக் பாஸ்.
ஆக.. தண்ணீர்ப் பிரச்சினை, இரு பிரிவு வீடுகளாக இருக்கும் முதலாளி x தொழிலாளி பிரச்சினை, நடிப்பு அரக்கனின் பிரச்சினை உள்ளிட்டவைகளை போட்டியாளர்கள் எப்படி சமாளிக்கப் போகிறார்கள் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.