
‘சினிமா என்பது கலைக்கும் வாழ்க்கைக்கும் இடையிலான ஒன்று’ என்கிறார் பிரெஞ்சு புதிய அலை திரைப்பட இயக்கத்தின் முன்னோடி, கோதார்த். அவர் சொல்வது போல கலைக்கும் வாழ்க்கைக்கும் இடையில் ஏராளம் உண்டு. இந்த ‘ஏராள’த்தில் உருவாகும் சினிமா கதைகள், கற்பனைக்கு உட்பட்டதும் அதற்கு அப்பாற்பட்டதுமாக இருக்கின்றன. அப்படி உருவான திரைப்படங்களில் 1930-ல் இருந்து 1960-க்குள் வெளியான ‘எட்ஜ் ஆஃப் தி சீட்’ என்றழைக்கப்படும் கிளாசிக் குற்றப் படங்கள் பற்றி இங்கு எழுதுகிறார், திரைப்பட இயக்குநர் ராம்குமார் சுப்பாராமன்.
சினிமா ரசிகர்களுக்கு எப்போதும் அலுக்காத திரைப்படங்கள் ‘எவர்க்ரீன் சப்ஜெக்ட்ஸ்’ எனப்படும் காதல் படங்கள். ஆனால் காதலுக்கு
இணையாக ரசிகர்கள் சளைக்காமல் விரும்புவது சஸ்பென்ஸ், த்ரில், மர்மங்களைக் கொண்ட குற்றத் திரைப்படங்கள். தமிழில், திகம்பர சாமியார், அந்தநாள், புதிய பறவை, அதே கண்கள் போன்ற பல படங்கள் கலைத் தன்மையோடு ரசிகர்களைப் புதுவித அனுபவத்தில் ஆழ்த்தின. அதுபோன்ற படங்கள் இன்றும் வேகத்தையும் விறுவிறுப்பையும் இழக்கவில்லை.