
ஜெய்ப்பூர்: ஜெய்ப்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் சிக்கி 6 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் சவாய்மான் சிங் (எஸ்எம்எஸ்) அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் உள்நோயாளிகளாக ஏராளமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் மருத்துவமனையின் 2-வது மாடியில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் நேற்று முன்தினம் இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென மருத்துவமனையின் பிறபகுதிகளுக்கும் பரவியது. இதனால் அங்கு சிகிச்சைப் பெற்று வந்த நோயாளிகள், அவர்களது குடும்பத்தினர் உடனடியாக அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடிவந்தனர்.