• October 7, 2025
  • NewsEditor
  • 0

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த 27-ம் தேதி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டபோது, கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானார்கள்.

இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழக முதல்வர் தொடங்கி பலரும் நிவாரணத் தொகை வழங்கி வருகின்றனர். இந்நிலையில், இன்று கரூர் வருகை தந்த மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், ராஜ்யசபா எம்.பி-யுமான கமல்ஹாசன் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்திற்கு ஒரு லட்சம் வீதம் மொத்தம் 41 லட்சம் ரூபாய் நிதி உதவியை நேரடியாக பாதிக்கப்பட்ட குடும்பத்தாருக்கு வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து சம்பவம் நடைபெற்ற வேலுசாமிபுரம், தமிழக வெற்றிக் கழகம் கூட்டம் நடத்தக் கேட்டு போலீஸ் மறுத்ததாக த.வெ.க-வினர் குற்றம்சாட்டிய லைட் ஹவுஸ் கார்னர், உழவர் சந்தை ஆகிய இரு இடங்களையும் செந்தில் பாலாஜி மற்றும் கமல்ஹாசன் ஆகிய இருவரும் நேரடியாக சென்று பார்வையிட்டனர்.தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன்,

உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு கமல்ஹாசன் நிதி உதவி, ஆறுதல்

கரூர் சம்பவத்தை ஆதாரங்களுடன் வெளியிட்டு மக்களுக்கு உண்மையை வெளிக் கொண்டு வந்த பங்கு, ஊடகங்களுக்கு உண்டு.

ஏன் செந்தில் பாலாஜி வந்தார் என்று கேள்வி கேட்பதற்கு பதிலாக, அவருடைய சொந்த ஊர், சொந்த மக்கள் அவருடைய இடத்தில் இதுபோன்ற அசம்பாவிதம் நடைபெற்ற போது ஓடி வந்து உதவினார் என்பதாகத்தான் பார்க்க வேண்டும்.

மொத்த உயிர்ப்பலி 41 என்பதை எண்ணிக்கையாகப் பார்க்க வேண்டாம். ஒரு குடும்பத்தில் இன்று அம்மா என உறவுகளை இழந்து தவித்து வரும் பாதிக்கப்பட்ட குடும்பத்தைப் பாருங்கள். நாம் அனைவரும் மனிதர்கள். அதை உணர்ந்து செயல்பட வேண்டும்.

`செந்தில் பாலாஜியை பாராட்ட வேண்டும்’

கூட்ட நெரிசல் பலி சம்பந்தமாக விசாரணை நடைபெற்று வருகிறது. சதி திட்டம் குறித்து நாம் பேச வேண்டியது இல்லை. சட்டமும் நீதியும் அதைப் பார்த்துக் கொள்ளும்.

விரைவாக மருத்துவமனைக்கு வந்து மருத்துவ சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்து உயிர் பலி குறைவுக்குக் காரணமான செந்தில் பாலாஜியைப் பாராட்ட வேண்டும்.

கட்சி பேதமை பார்க்காமல் சட்டத்தை மட்டுமே நடைமுறைப்படுத்தும் ஒரு முதலமைச்சராகச் செயல்பட்ட தி.மு.க தலைவரை இந்த நேரத்தில் எண்ணிப் பெருமை கொள்கிறேன். அதேபோல், தமிழக முதல்வருக்கு ஒரே ஒரு வேண்டுகோள்.

அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் கூட்டம் நடத்த, பொதுமக்களுக்குப் பாதிப்பில்லாமல் ஒதுக்குப்புறமாகத் தனி இடம் ஒன்றை ஒதுக்கித் தர வேண்டும்.

கமல்ஹாசன் ஆய்வு
கமல்ஹாசன் ஆய்வு

தமிழகம் எப்படி முன்னுதாரணமாக மற்ற மாநிலங்களுக்கு உள்ளதோ அதுபோல, அரசியல் கட்சி கூட்டங்கள் நடத்தத் தனியிடம் மேற்கொண்டால் அனைத்திலும் தமிழகம் முன்னுதாரணமாகத் திகழும்.

தமிழ்நாட்டில் உள்ள அனைவருக்கும் நாட்டு நடப்பு தெரியும். சட்டத்துக்கு உட்பட்டு அனைவரும் நடக்க வேண்டும் என்பது அனைத்து குடிமகனுக்கும் தெரிந்திருக்க வேண்டிய ஒன்று. இது, குடிமகன்களுக்கு எவ்வாறு புரிகிறதோ அதே போன்றுதான் அரசியல் தலைவர்களுக்கும் புரிய வேண்டும்.

`உண்மையில் உண்மை என்பது ஒன்றுதான்’

சட்டமும் நீதியும் அனைவருக்கும் சமமாகத்தான் இருக்க வேண்டும். ஊடகங்கள் கரூர் கூட்ட நெரிசல் வழி சம்பவத்திற்கு பல உண்மைகள் இருப்பதாக செய்திகள் வெளியிட்டு வருகின்றன. ஆனால், உண்மையில் உண்மை என்பது ஒன்றுதான் இருக்க வேண்டும்.

எம்.பி கமல் ஹாசன்
எம்.பி கமல் ஹாசன்

`இது அரசியல் பேசும் தருணம் அல்ல’

தமிழக வெற்றிக் கழகம் கூட்டம் நடத்தக் கோரிய இன்னொரு இடமான லைட் ஹவுஸ் கார்னர் அமராவதி ஆற்றுப்பாலம் அருகே உள்ளது. அந்த இடத்தில் வழங்கியிருந்தால் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாது எனக் கூற முடியாது.

இனிவரும் காலங்களில் இதுபோன்று எந்த அசம்பாவித சம்பவங்களும் நடைபெறக்கூடாது. கரூர் மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் சரியான நடவடிக்கை எடுத்திருந்தால் உயிரிழப்புகளை தடுத்திருக்க முடியுமே என்று எடப்பாடி கூறியது பற்றிக் கேட்கிறீர்கள்.

இது அரசியல் பேசும் தருணம் அல்ல. மனிதாபிமானம் குறித்துப் பேசும் நேரம். அ.தி.மு.க பேசுவது அரசியல். அனைத்துக் கட்சிகளும் அமர்ந்து இதில் ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டும். எவ்வளவு நிதி உதவி கொடுத்தாலும் இழந்த உயிரை மீட்டுத் தர முடியாது. அவர்களுக்கு நாம் பெற்றுத் தர வேண்டியது நீதி மட்டும்தான் என்றார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *