
ஒளி, உலகெங்கும் பரவுவதைப்போல, இந்தியர்களின் உள்ளமெங்கும் மகிழ்ச்சி பரவும் பண்டிகை… தீபாவளி!
புத்தாடைகள், இனிப்புகள், பட்டாசுகள் என தீபாவளிக்கே உரித்தான கொண்டாட்டங்கள் அனைத்தும் சேரும் மையச் சரடு… உறவுகளின் ஒன்றுகூடல். ஆம், பொருள் தேடலில் ஆளுக்கொரு பக்கமாகப் பாய்ந்துவிட்ட நம்மில் பலரையும்… சேர்க்கும் அச்சு, இதுபோன்ற திருநாள்கள்தான்.
தினசரி வேலைகளில் இருந்து நம்மை விடுவித்துக்கொண்டு, அலுவல் அழுத்தங்களை ஆஃப் செய்துவிட்டு, பர்சனல் பிரச்னைகளைத் தள்ளிவைத்துவிட்டு, எதிர்காலக் கவலைகளை தற்காலிகமாக மறந்து… சொந்த ஊர் நோக்கி, பூர்வீக வீடு நோக்கிச் செல்லும் மனங்களுக்கு, காத்திருக்கும் நிம்மதி தோய்ந்த ஓர் இளைப்பாறல்.
வீட்டுப் பெரியவர்கள், `நல்ல நாளும் அதுவுமா…’ என்று சொல்லி, அன்றைய தினம் நம் மனதில் துளி எதிர்மறை எண்ணமும் எழாமல் தடைபோட்டு, உற்சாகத்தை ஊட்டிக்கொண்டே இருப்பார்கள். அவர்களிடம் ஆசீர்வாதம் வாங்குகையில், வரும் காலத்துக்கான நம்பிக்கை, நமக்குள் இறங்கும் தருணம்… அற்புத கணம். மூத்தோர் இல்லாத தனிக்குடும்பங்களிலும், தம்பதிக்கு இடையே, பெற்றோர் – குழந்தைகளுக்கு இடையே நெருக்கத்தை நிரப்பும் தினம் இது.
கால ஓட்டத்தில், வாழ்க்கைச் சூழலில் சில உறவுகள், நட்புகளுடன் ஏற்பட்ட இடைவெளி, பிணக்கை நீக்கும் வாய்ப்பையும், இனிப்புத் தட்டோடு வைத்தே நீட்டுகின்றன இதுபோன்ற பண்டிகைகள். `தீபாவளி வாழ்த்துகள்…’ என்று `அலைபேசி’னாலோ; ‘வாட்ஸ்அப்’பினாலோ; ‘குறுஞ்செய்தி’னாலோ போதும்… பண்டிகை தித்திப்பில் இருக்கும் மனங்கள் இறுக்கம் விலகி, ‘ஒருவழியா இன்னிக்கு, நான் இருக்கிறது உனக்கு ஞாபகம் வந்துடுச்சா…’ என்றபடி சந்தோஷ சமரசம் ஆகும். பல மாதங்கள், ஆண்டுகளுக்கு முன் விட்ட அதே இடத்திலிருந்து அந்த உறவு தொடரும் மாயமெல்லாம்கூட நடக்கும்.
டிஜிட்டல் யுகத்தில் தீபாவளி 2025 போட்டோக்கள், போஸ்ட்கள், ரீல்கள், ஸ்டோரிகள், ஸ்டேட்டஸ் என அதகளப்படுத்தும் இளையப் பட்டாளத்துடன் நாமும் அப்டேட் ஆகி, சேர்ந்தே கொண்டாடுவோம்; நினைவுகளைச் சேகரிப்போம் மன கேலரியில். சந்தோஷமான, ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்கும் நினைவுகளை எல்லாம் கடத்துவோம்… அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும்!
தீபாவளிப் பண்டிகை கொண்டாட்டங்களுடன் பாதுகாப்பையும் உறுதி செய்வது மிக முக்கியம் தோழிகளே. பயணம், பட்டாசு, எண்ணெய்ச் சட்டி என… இவற்றில் எல்லாம் இருக்கட்டும் இரட்டிப்பு கவனம். அவசரம், பரபரப்பு, பதற்றமின்றி செய்வோம், காரியங்களை.
மிக முக்கியமாக பெண்களாகிய நாம், ‘என் கடன் பலகாரம் செய்து கிடப்பதே’ என்று அடுப்படியிலேயே பண்டிகை பொழுதைக் கரைக்காமல் இருப்போம். வேலைகளைச் சுருக்கிக்கொண்டு, உறவுகளுடன் இருக்கும் சந்தோஷத்தைப் பெருக்கிக் கொள்வோம் தோழிகளே!
அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள்!
உரிமையுடன்,
ஸ்ரீ
ஆசிரியர்