
கடலில் மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குவதும், மீன்பிடி உபகரணங்கள் உள்ளிட்ட பொருள்களை கொள்ளையடித்து செல்வதும் அடிக்கடி நடக்கிறது. குறிப்பாக நாகப்பட்டினம் மீனவர்கள் கடற்கொள்ளையர்களால் அடிக்கபடி பாதிக்கப்படுகின்றனர். இதனை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்தநிலையில் கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த நாகை, நம்பியார் நகர் மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தியிருப்பது மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து பாதிக்கப்பட்ட மீனவர்கள் சிலர் கூறுகையில், “நாகப்பட்டினம் நம்பியார் நகர் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று மதியம் சுமார் 2 மணியளவில் சந்திரபாபு என்பவருக்கு சொந்தமான பைபர் படகிலும், சசிக்குமார் என்பவருக்கு சொந்தமான பைபர் படகிலும் 11 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றோம். இன்று காலை கோடியக்கரை மற்றும் தோப்புத்துறைக்கு கிழக்கே 26 நாட்டில்கல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தோம். அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் எங்கள் படகுகள் மீது வெடிகளை வீசினர். இதனால் நாங்கள் அச்சத்துக்கு ஆளாகினோம். நிலைமையை உணர்ந்த நாங்கள் அந்த பகுதியில் இருந்து செல்ல முயன்றோம். ஆனால், அதற்குள் இலங்கை கடற்கொள்ளையர்கள் எங்கள் படகை சுற்றி வளைத்தனர்.
பின்னர், படகில் இருந்த 11 மீனவர்களையும் தாக்கினர். அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டினர். இந்த தாக்குதலால் நாங்கள் நிலை குலைந்தோம். மீனவர் அணிந்திருந்த நகை, படகு இன்ஜின், வலை, ஜி.பி.எஸ் கருவி, வாக்கி டாக்கி உள்ளிட்ட உபகரணங்களை கொள்ளையடித்தனர். படகு இன்ஜினை கொள்ளையடித்ததால் நாங்கள் கரைக்கு திரும்ப முடியாமல் நடுக்கடலில் தத்தளித்தோம். இதில், நம்பியார்நகர் மீனவ கிராமத்தை சேர்ந்த சசிகுமார், உதயசங்கர், சிவசங்கர், கிருபா, கமலேஷ், விக்னேஷ், விமல், சுகுமார், திருமுருகன், முருகன், அருண் ஆகிய 11 மீனவர்கள் காயமடைந்தனர். இந்த நிலையில், மீன்பிடிக்க வந்த சக மீனவர்கள் உதவியுடன் கரை வந்து சேர்ந்தோம். காயம்பட்ட மீனவர்கள் நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தாக்கியதில் கடுமையாக பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் இருந்த மீனவர் சிவசங்கர், மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். இது போன்ற சம்பவம் அடிக்கடி நடப்பதால் மீனவர்கள் அச்சத்துக்கு ஆளாகியுள்ளனர். கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தும் போது, இலங்கை அரசு இதை செய்ய சொல்வதாக சொல்லி தான் அடித்தனர். இது போன்ற தாக்குதல்களால் நாங்கள் உடல் ரீதியாகவும், உடமைகளை இழந்து பாதிக்கப்படுகிறோம். வாழ்வாதாரத்தையும் இழக்கிறோம். அரசு எங்கள் உடமைகளை மீட்டுத்தரவேண்டும். இதற்கு தீர்வு கண்டு இனி இது போல் நடக்காமல் தடுத்து தகுந்த நடவடிக்கை எடுத்தால் மட்டுமே நாங்கள் கடலில் நிம்மதியாக மீன்பிடிக்க முடியும்” என்றனர்.