• October 6, 2025
  • NewsEditor
  • 0

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது வழக்கறிஞர் ஒருவர் காலணி வீசிய சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

கிட்டத்தட்ட அனைத்து மாநில மற்றும் தேசிய கட்சிகளும் தலைவர்களும் நீதிபதி மீதான தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

நீதிபதி கவாய்

அந்தவகையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், “உச்சநீதிமன்ற வளாகத்திலேயே இந்திய தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அவர்களை அவமதிக்கும் நோக்கில் அவரை நோக்கி செருப்பை வீசியுள்ள சனாதன வெறிபிடித்த வழக்கறிஞரை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மிகவன்மையாகக் கண்டிக்கிறோம்.

அந்த நபரின் வழக்கறிஞர் தகுதியை உடனடியாக ரத்து செய்யவேண்டும். அத்துடன், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (UAPA) கீழ் அவரைக் கைதுசெய்து சிறைப்படுத்த வேண்டும்.

செருப்பை வீசும்போது ‘சனாதன தருமத்தை அவமதிப்பதை இந்தியா பொறுத்துக் கொள்ளாது’ என அந்நபர் கூச்சலிட்டதாகத் தெரிகிறது. இதிலிருந்து அவர் ஒரு சனாதன சங்கி என்பது உறுதியாகிறது.

வழக்கறிஞர் Rakesh Kishore

புரட்சியாளர் அம்பேத்கரின் கொள்கைகளை உள்வாங்கியுள்ள சனநாயக சக்தியாக விளங்கும் தலைமை நீதிபதியின் மீது இங்ஙனம் வெறுப்பை உமிழ்வது இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரான நடவடிக்கையே ஆகும். மேலும், ஒட்டுமொத்த நீதித்துறைக்கே நேர்ந்த அவமானமாகும்.

நாடெங்கிலும் சனாதனவெறியர்களின் கொட்டம் தலைவிரித்தாடுகிறது என்பதற்கு இதுவும் ஒரு சான்றாகவுள்ளது. இந்நிலையில், சனாதனத்தை வேரறுக்க சனநாயக சக்திகள் ஓரணியில் திரளுவது காலத்தின் தேவையாக உள்ளது.” எனக் கூறியுள்ளார்.

நீதிமன்றத்தில் நடந்தது என்ன?

தலைமை நீதிபதியைத் தாக்க முயன்ற அந்த நபர், “சனாதன தர்மத்தை அவமதிப்பதை இந்தியா பொறுத்துக் கொள்ளாது” எனக் கூச்சலிட்டிருக்கிறார்.

இருந்தும் அவரைக் காவலர்கள் வெளியேற்றிய பின்னர் “கவனத்தை சிதறவிடாதீர்கள், இது என்னைப் பாதிக்காது. அனைத்து மதங்களையும் மதிப்பவன் நான்” எனக் கூறிவிட்டு, எந்த பரபரப்பும் இல்லாமல் வழக்கறிஞர்களிடம் வாதங்களைத் தொடருமாறு கேட்டுக்கொண்டிருக்கிறார் தலைமை நீதிபதி கவாய்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *