
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசன், கரூர் த.வெ.க பிரசாரக் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “முதல்வர் தரமான பண்புள்ள தலைமை எப்படி செயல்பட வேண்டுமோ அதற்கான எல்லா குணாதிசயங்களையும் காட்டியிருக்கிறார். அது எனக்குப் பெருமையாகவும் இருக்கிறது, அதற்கு நன்றியும் சொல்ல வேண்டும்.
எந்த அரசாங்கமும் பொறுப்பை ஏற்கும். ஆனால் இங்கு என்ன நடந்தது என்பது சட்டத்தின் கையில் உள்ளதால் அதைப்பற்றி அதிகம் பேச வேண்டாம். அதைக் கமென்ட் அடிக்கவும் வேண்டாம். ஏனென்றால் எல்லோருமே கஷ்டத்தில் இருக்கிறோம். எல்லோருக்கும் மனவருத்தம் உள்ளது.
சொல்ல வேண்டியவர்களுக்கு நன்றி சொல்வோம். பத்திரிகையாளர்கள் வெளிச்சம்போட்டுக் காட்டியதால்தான் உண்மைகள் கொஞ்சம் கொஞ்சமாக வெளிவருகிறது.
ஆனால் இந்த காலகட்டத்தில் உண்மைக்கு ஒரு பொருள் இல்லை. யார் உண்மை எனக் கேட்க வேண்டியதாக இருக்கிறது. உண்மை பல பார்வைகளில் பல பொருள்களில் தெரியும் சூழலில் அதைக் கண்டுபிடிக்க வேண்டிய நிர்பந்தத்தில் கோர்ட்டும் இருக்கிறது போலீசும் இருக்கின்றனர்.
போலீசுக்கு நன்றி சொல்ல வேண்டிய சூழலில் அவர்களைக் குற்றம் சொல்லாதீர்கள். நானும் இதுபோல வந்திருக்கிறேன்.
போலீஸ் அவர்கள் கடமையைச் செய்துள்ளனர். உயிர் சேதம் இத்துடன் நின்றதுக்கு நன்றி சொல்ல வேண்டியவர்களுக்கு சொல்லிக்கொள்கிறேன்.” என்றார்.
எதிர்க்கட்சிகள் பாதுகாப்பு குறைபாடுதான் காரணம் எனக் கூறுவது பற்றிக் கேள்வி எழுப்பியபோது, “தமிழ்நாட்டின் குடிமகனாக எனக்கு என்ன நடந்தது எனத் தெரியும். இதில் சைடு எடுக்காதீர்கள், எடுப்பதாக இருந்தால் மக்கள் சைடு எடுங்க.” என்றார்.
மேலும் விஜய்க்கு நீங்கள் சொல்ல விரும்பும் அட்வைஸ் எனக் கேட்டபோது, “அதைக் கோர்ட்ல சொல்லுவாங்க” என பதிலளித்துப் புறப்பட்டார்.