
“என் தந்தை அறிவுஜீவி, முதல்வர் பதவியேற்றதும் நீட் தேர்வை ரத்து செய்துவிடுவார் என இப்போதைய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அப்போது பேசினார், ஆனால் ஒன்றுமே செய்யவில்லை.” என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியுள்ளார்.
மதுரை மத்திய தொகுதியில் அதிமுக சார்பில் நடந்த திண்ணைப் பிரசாரத்தில் கலந்துகொண்ட அமைச்சர் செல்லூர் ராஜூ, அப்பகுதி பெண்களிடம், ‘நீட் தேர்வு விலக்கு, கல்வி கடன் ரத்து, மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டதா’ என கொடுத்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றியதா? எனக் கேட்டு படிவங்களில் பதில்களை எழுதி வாங்கினார்.
பின்பு செய்தியாளர்களிடம் பேசியவர், “ஆட்சி நிறைவுபெறவுள்ள நிலையில் திமுக கொடுத்த 525 வாக்குறுதிகளில் எதையுமே நிறைவேற்றவில்லை. திமுக ஆட்சியால் மக்கள் துன்பத்திலும் துயரத்திலும் உள்ளார்கள் என்பதை அவர்களிடம் பேசியதில் அறிய முடிகிறது.
சினிமாவில் கதை ஒரு பக்கம், கவர்ச்சி ஒரு பக்கம் இருக்கும். அதுபோல மக்களை ஏமாற்ற திமுக கவர்ச்சிகரமாக வாக்குறுதிகளை கொடுத்து வருகிறது. இப்போதும் வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறார்கள், இதுபோன்ற திறமை திமுகவிற்கு மட்டுமே கைவந்த கலை.”

நீட் விவகாரத்தில் தமிழகத்திற்கு அநீதி இழைத்ததே காங்கிரஸ்தான். ப.சிதம்பரத்தின் மனைவிதான் நீட் தேர்விற்கு ஆதரவாக உச்சநீதிமன்றத்தில் வாதாடினார். என் தந்தை அறிவு ஜீவி, முதல்வர் பதவியேற்றதும் நீட் தேர்வை ரத்து செய்துவிடுவார் என இப்போதைய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அப்போது பேசினார், ஆனால் ஒன்றுமே செய்யவில்லை.
அதிமுக ஆட்சியில் தமிழகம் முன்னேறவில்லை என முதல்வர் பெரிய நகைச்சுவை செய்து வருகிறார்.” என்றவரிடம் தொடர்ந்து ‘டிடிவி தினகரன், கரூர் சம்பவம் குறித்து’ கேள்வி எழுப்பியபோது பதில் கூறாமல் புறப்பட்டார்.