• October 6, 2025
  • NewsEditor
  • 0

துர்கா பூஜை ஊர்வலம்

24 ஆண்டுகளாக ஒடிசாவின் முதலமைச்சராக நவீன் பட்நாயக் இருந்து வந்த நிலையில், 2024-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெற்றது.

இதனையடுத்து மோகன் சரண் மாஜி தலைமையில், ஒடிசா மாநிலத்தில் பா.ஜ.க ஆட்சி செய்துவருகிறது. இந்த நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு துர்கா பூஜை சிலை கரைப்புக்காக காதஜோடி ஆற்றின் கரையை நோக்கி ஊர்வலம் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது.

அதிக இசை

அப்போது, இரவு தாமதமாக தர்கா பஜார் பகுதிக்கு வந்த ஊர்வலம், உரத்த இசையுடன், பெரும் ஆரவாரத்துடன் சென்றிருக்கிறது.

துர்கா பூஜை

அந்தப் பகுதியில் வசித்த சிலர் ஊர்வலத்தின் இசைச் சத்தத்தை குறைக்கும்படிக் கேட்டிருக்கிறார்கள். இதனால் ஏற்பட்ட வாய்த்தகராறு கடந்த சனிக்கிழமை இருதரப்புக்கும் மோதலாக மாறியது.

ஊர்வலத்தில் இருந்தவர்கள் கற்கள் மற்றும் கண்ணாடி பாட்டில்களை வீசியதாகக் கூறப்படுகிறது. கட்டாக்கின் துணை காவல் ஆணையர் உள்ளிட்ட பலர் காயமடைந்தனர்.

அதனால், கும்பலைக் கலைத்து அமைதியை நிலைநாட்ட காவல்துறையினர் லேசான தடியடி நடத்தினர்.

இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை குறைந்தது ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சம்பந்தப்பட்ட மற்றவர்களை அடையாளம் காண சிசிடிவி, ட்ரோன் மற்றும் மொபைல் காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

இது தொடர்பாக பேசிய காவல் ஆணையர் எஸ். தேவ் தத் சிங், “கைது செய்யப்பட்டவர்கள் கல் வீச்சில் ஈடுபட்டவர்கள், சிசிடிவி காட்சிகள் மூலம் அடையாளம் காணப்பட்டனர். மேலும் கைதுகள் தொடரும்” என்றார்.

விஎச்பி பேரணி பதட்டங்கள்

இதற்கிடையில், கட்டாக் நகரம் காவல்துறையின் கட்டுப்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டு இயல்புநிலைக்கு மெல்லத் திரும்பியது. அப்போது, மாவட்ட நிர்வாகத்தின் கட்டுப்பாடுகளை மீறி விஸ்வ இந்து பரிஷத் (விஎச்பி) நேற்று மோட்டார் சைக்கிள் பேரணி நடத்தியது.

பித்யாதர்பூரில் இருந்து தொடங்கிய பேரணி, மோதல்கள் நடந்த தர்கா பஜார் வழியாகச் சென்றது. அதனால் நேற்று மாலை மீண்டும் பதற்றமான சூழல் ஏற்பட்டது.

விஎச்பி பேரணி
விஎச்பி பேரணி

இது தொடர்பாக பேசிய காவல்துறை, “மாவட்டக் கட்டுப்பாட்டை மீறி விஎச்பி மோட்டார் பேரணி நடத்தியிருக்கிறது. அவர்கள் செல்லும் வழித்தடத்தில் இருந்த சிசிடிவி கேமராக்கள் சேதப்படுத்தப்பட்டிருக்கின்றன.

கௌரிசங்கர் பூங்கா பகுதியில் உள்ள பல கடைகள் சேதப்படுத்தப்பட்டு, தீ வைக்கப்பட்டிருக்கின்றன. இதனால் கட்டாக் பகுதியில் தற்போது கலவரச் சூழல் ஏற்பட்டிருக்கிறது.

இணைய முடக்கம்

அதிகரித்துவரும் பதற்றத்தைத் தொடர்ந்து, ஒடிசா அரசு ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணி முதல் திங்கள்கிழமை இரவு 7 மணி வரை கட்டாக் நகராட்சி, கட்டாக் மேம்பாட்டு ஆணையம் (CDA) மற்றும் அருகிலுள்ள 42 மௌசா பிராந்தியத்தின் கீழ் உள்ள பகுதிகளில் இணைய சேவைகளை நிறுத்தி வைத்திருக்கிறது.

தவறான தகவல்கள் பரவுவதைத் தடுப்பதற்கும், வெறுப்பைப் பரப்பும் சமூக ஊடகப் பதிவுகளைக் கட்டுப்படுத்துவதற்கும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் பிற தளங்கள் தடைசெய்யப்பட்டிருக்கும். பிரிவு 144 இன் கீழ் தடை உத்தரவுகள் விதிக்கப்பட்டுள்ளன.

ஒடிசா காவல்துறை
ஒடிசா காவல்துறை

தர்கா பஜார், கௌரிசங்கர் பூங்கா மற்றும் பித்யாதர்பூர் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் காவல்துறையினர் தீவிரப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய ஆயுதக் காவல் படையும் (CAPF) பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கிறது.

முதலமைச்சரின் வேண்டுகோள்

முதல்வரும், ஒடிசா உள்துறை அமைச்சருமான மோகன் சரண் மாஜி, “கட்டக் நகரம் அதன் ஒற்றுமை மற்றும் சமூக நல்லிணக்கத்திற்கு பெயர் பெற்ற ஆயிரம் ஆண்டுகள் பழமையான நகரம். சில குற்றவாளிகளின் செயல்களால், சமீபத்திய நாட்களில் அமைதி சீர்குலைந்துள்ளது.

அரசு நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. பொறுப்பானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை  எடுக்கப்படும். யாரும் தப்ப முடியாது. இந்த மோதல்களில் காயமடைந்தவர்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக், “ஒடிசா எப்போதும் அமைதியை விரும்பும் மாநிலமாக இருந்து வருகிறது. வன்முறை ஆழ்ந்த கவலைக்குரியது. சகோதரத்துவத்தின் நகரமான கட்டாக்கில் இதுபோன்ற விரும்பத்தகாத சூழ்நிலை கவலையளிக்கிறது.

மோகன் சரண் மாஜி
Mohan Charan Majhi – மோகன் சரண் மஜி

நிலைமையைக் கட்டுப்படுத்துவதில் காவல்துறையின் கரங்கள் கட்டப்பட்டிருப்பதாக தோன்றியது. பா.ஜ.க அரசின் கீழ் காவல்துறை மீதான அழுத்தம் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கிறது” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

காங்கிரஸ் எம்.எல்.ஏ சோபியா ஃபிர்தவுஸ், “எங்கள் நகரம் ஒற்றுமை மற்றும் பாரம்பரியத்தின் வாழும் எடுத்துக்காட்டு – துர்கா பூஜை 500 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு கொண்டாடப்படுகிறது. இந்த ஒற்றுமையை சீர்குலைக்க முயன்றவர்கள், சிசிடிவி மற்றும் ட்ரோன் காட்சிகள் மூலம் அடையாளம் காணப்பட்டவர்கள், சட்டத்தின்படி தண்டிக்கப்பட வேண்டும்”எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *