• October 6, 2025
  • NewsEditor
  • 0

Doctor Vikatan: இருமல் மருந்து குடித்த பல குழந்தைகள் மரணமடைந்தது குறித்து சமீபத்தில் செய்தியில் பார்த்தோம். குழந்தைகளுக்கு இருமல் வந்தால் அதை எப்படி அணுக வேண்டும். ஆயுர்வேத இருமல் மருந்து கொடுக்கலாமா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த நீரிழிவு சிகிச்சை மற்றும் குழந்தைகள் நல மருத்துவர் சஃபி

நீரிழிவு சிறப்பு மருத்துவர் சஃபி

ஒருவருக்கு என்ன நோய் வந்தாலும், முதலில் அறிகுறிகளைக் காட்டும். அந்த வகையில், குழந்தைகளுக்கு வரும் பிரச்னைகளுக்கு இருமல் என்பது மிக முக்கியமான அறிகுறி.

குழந்தைகளுக்கு இருமல் வரும்போது, அது சுவாசக்குழாயில் உள்ள அடைப்பின் காரணமாக வருகிறதா அல்லது நெஞ்சில் சளி கட்டியிருப்பதால் இருமல் வருகிறதா அல்லது நிமோனியா அல்லது பிராங்கோ நிமோனியா அல்லது பிராங்கோலைட்டிஸ் போன்ற பிரச்னைகளின் காரணமாக சளி கட்டியதால் இருமல் வருகிறதா, சாதாரண வைரஸ் தொற்றின் காரணமாக, பருவகால தொற்றின் காரணமாக இருமல் வருகிறதா அல்லது அலர்ஜி எனப்படும் தொடர் ஒவ்வாமையால் இருமல் வருகிறதா, ஆஸ்துமாவின் அறிகுறிகள் தென்படுவதால் இருமல் வருகிறதா என்ற விஷயங்களை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும்.

குழந்தைக்கு ஏற்பட்டது எந்த வகையான இருமல் என்பதை குழந்தைகள் நல மருத்துவர்தான் தீர்மானிப்பார். அதற்கு எந்த வகையான மருந்து கொடுக்க வேண்டும் என்பதையும் அவரே முடிவு செய்வார்.

இருமலை உடனடியாக நிறுத்தும் சிரப்பை ‘ஆன்டி டிஸ்ஸிவ்’ சிரப் என்று சொல்வோம். இருமலை அப்படி உடனடியாக நிறுத்தக்கூடாது. அது எந்தவகையான இருமல் என்று கண்டறிந்து, அதற்கான மூல காரணமான நோயைத்தான் நாம் சரிசெய்ய வேண்டும்.

எந்தவகையான இருமல் என்று கண்டறிந்து, அதற்கான மூல காரணமான நோயைத்தான் நாம் சரிசெய்ய வேண்டும்.

உதாரணத்துக்கு, பொதுவான தொற்று, தூசு அலர்ஜி, வைரஸ் தொற்று என எந்தக் காரணத்தால் ஏற்பட்டதோ அதைக் குணப்படுத்த வேண்டும். பச்சிளம் குழந்தைகளுக்கு இருமல் சிரப் கொடுக்காமல், டிராப்ஸ் தருவோம். அதுவும் அனுபவம் வாய்ந்த மருத்துவரால் மட்டுமே பரிந்துரைக்கப்பட வேண்டும்.

ஆயுர்வேத இருமல் மருந்து என்பவை எந்த அளவுக்குத் தரமாக, முறையாகத் தயாரிக்கப்படுகின்றன என்ற விவரங்கள் தெரிய வேண்டும். எனவே, அதெல்லாம் தெரியாமல் ஆயுர்வேத மருந்துகள் என்றாலே பாதுகாப்பானவை என்ற நம்பிக்கையில் அவற்றைக் கொடுக்க வேண்டாம்.

மற்றபடி குழந்தைகளுக்கு தினமும் காலையில் சிறிதளவு சுத்தமான தேன் கொடுத்தாலே போதுமானது.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.  

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *