
தூங்கும்போது தலையணை எந்த அளவுக்கு இன்றியமையாததோ, அதேபோல் அதன் தூய்மையும் இன்றியமையாதது.
அமெரிக்காவின் நேஷனல் ஸ்லீப் ஃபவுண்டேஷன் என்ற அமைப்பு மேற்கொண்ட ஆய்வில், ஒரு வாரம் துவைக்காமல் பயன்படுத்தப்படும் தலையணை உறைகளில், கழிப்பறை சீட்டைவிட 17 ஆயிரம் மடங்கு அதிகமாக கிருமிகள் சேர்ந்துவிடுகின்றன என்பது தெரியவந்துள்ளது. எனவே, இவ்வளவு பாக்டீரியாக்கள் ஏன் சேர்கின்றன? இதனால் ஏதேனும் பிரச்சனை வருமா என சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் ராஜேஷ் அவர்களிடம் கேட்டோம்.
’’பெட் மற்றும் பெட்ஷீட்டிலும் பாக்டீரியாக்கள் இருக்கும் என்றாலும், தலையணையில் பாக்டீரியாக்கள் வளர்வதற்கு ஏதுவான ஆர்கானிக் மேட்டர் (Organic matter) அதிகமாக இருக்கும். பாக்டீரியாக்கள் வருவதற்கு இந்த ஆர்கானிக் மேட்டர்தான் அவசியம்.
மனிதர்கள் உறங்கும்போது தலையில் இருந்து வழியும் எண்ணெய் போன்ற (Sebaceous secretion) திரவங்களும், திரும்பிப் படுக்கும்போது வாயிலிருந்து வெளிவரும் எச்சிலும் இந்த பாக்டீரியாக்கள் வளர்வதற்குத் தேவையான ஆர்கானிக் மேட்டராக அமைகிறது.
மனித எச்சிலில் ஏற்கெனவே பாக்டீரியாக்கள் அதிகமாக இருக்கும். அது தலையணை உறைகளின் மீது தொடர்ந்து படும்போது, பாக்டீரியாக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகும்.

பாக்டீரியாக்களில் வெவ்வேறு இனங்கள் இருக்கின்றன. நீண்ட நாள் பாக்டீரியாக்கள் படியத் தொடங்கினால் பயோஃபிலிம் (biofilms) உருவாகத் தொடங்கும்.
பயோஃபிலிம் என்பது பாக்டீரியாக்கள் ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொண்டு காலனி போல வாழத் தொடங்கும்.
அதில் ஒரேவிதமான பாக்டீரியாக்களும் இருக்கலாம், பலவிதமான பாக்டீரியாக்களும் இருக்கலாம். பாக்டீரியாவைத் தவிர மற்ற மைக்ரோ ஆர்கானிசங்களும் அடுக்கடுக்காக வாழ்ந்துகொண்டிருக்கும்.
தினமும் தூய்மைப்படுத்தி அல்லது மாற்றிப் பயன்படுத்தலாம். அவ்வாறு செய்வது சிரமமாக இருக்கும்பட்சத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறையாவது தூய்மைப்படுத்திப் பயன்படுத்துவது பாக்டீரியாக்களிடமிருந்து நம்மைப் பாதுகாக்க உதவும்.
பயோஃபிலிம் படிந்துவிட்டால் அவற்றை நீக்குவது சிரமம். இந்த வகையான பாக்டீரியாக்கள் கடுமையான சூழ்நிலைகளையும் தாங்கி உயிர் வாழக்கூடியவை.
இரண்டு வாரங்கள் வரையில் தலையணை உறை துவைக்காமல் இருந்தால் இவ்வகை பாக்டீரியாக்கள் உருவாகத் தொடங்கிவிடும், கவனம்.
குழந்தைகளுக்கு மூக்கு மற்றும் வாயைச் சுற்றி சிவப்பு நிறப் புண்கள் ஏற்படும். தோல் ஒவ்வாமை, நுகர்தல் மூலமாக வரும் ஒவ்வாமை வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன.
ஏற்கெனவே இந்தப் பிரச்னைகள் இருந்தால், அதிகமாவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
தலையணை உறைகளையும் படுக்கைகளையும் முறையாகத் தூய்மைப்படுத்தி வெயிலில் நன்றாகக் காய வைத்துப் பயன்படுத்துங்கள்’’ என்கிறார் டாக்டர் ராஜேஷ்.