• October 6, 2025
  • NewsEditor
  • 0

பல வருடங்களாக மாநில அந்தஸ்து கோரிக்கையை முன்வைத்து வரும் சட்டமன்றமில்லாத யூனியன் பிரதேசமான லடாக்கில் செப்டம்பர் 25-ல் அமைதிப் போராட்டம் வன்முறையாக வெடித்தது.

காவல்துறைக்கும் போராட்டக்காரர்களுக்கும் ஏற்பட்ட மோதலில் 4 பேர் உயிரிழந்தனர்.

இதில், மாநில அந்தஸ்து உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சுற்றுச்சூழல் மற்றும் கல்வியியல் ஆர்வலர் சோனம் வாங்சுக் தான் போராட்டக்காரர்களைத் தூண்டிவிட்டதாக தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் காவல்துறை கைதுசெய்து ஜோத்பூர் சிறையிலடைத்தது.

சோனம் வாங்சுக்

அவரின் கைதுக்கு அரசியல் தலைவர்கள் தரப்பிலிருந்து பா.ஜ.க அரசுக்கு எதிராக கண்டனங்கள் குவிந்தன. சோனம் வாங்சுக்கின் மனைவி தாஞ்சலி ஜே அங்மோ தனது கணவர் மீதான கைது நடவடிக்கையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார்.

இந்த வழக்கை நீதிபதிகள் அரவிந்த் குமார், என்.வி. அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று (அக்டோபர் 6) விசாரிக்கின்றனர்.

மறுபக்கம், சோனம் வாங்சுக்கின் மூத்த சகோதரர் கா சேடன் டோர்ஜி லே மற்றும் அவரது வழக்கறிஞர் முஸ்தபா ஹாஜி ஆகியோர் ஜோத்பூர் சிறையில் நேரில் சந்தித்தனர்.

இந்த நிலையில் சோனம் வாங்சுக் தனது வழக்கறிஞர் மூலம் மக்களுக்கு ஒரு செய்தி அனுப்பியிருக்கிறார்.

அந்த செய்தியில் சோனம் வாங்சுக், “உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் நான் நலமாக இருக்கிறேன். என்மீதான அக்கறைக்கு அனைவருக்கும் நன்றி.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்.

மேலும், காயமடைந்தவர்கள் மற்றும் கைதுசெய்யப்பட்டவர்களுக்காகப் பிரார்த்திக்கிறேன்.

Sonam Wangchuk - சோனம் வாங்சுக்
Sonam Wangchuk – சோனம் வாங்சுக்

நான்கு பேர் கொல்லப்பட்டது தொடர்பாக சுதந்திரமான நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும். அது நடக்கும் வரை நான் சிறையில் இருக்கத் தயாராக இருக்கிறேன்.

அரசியலமைப்பு பிரிவு 244-ன் கீழ் ஆறாவது அட்டவணை நீட்டிப்பு மற்றும் மாநில அந்தஸ்து கோரிக்கையில் Apex Body, கார்கில் ஜனநாயக கூட்டணி (KDA) லடாக் மக்களுடன் நான் உறுதியாக நிற்கிறேன்.

லடாக்கின் நலனுக்காக Apex Body என்ன நடவடிக்கைகள் எடுத்தாலும் அவர்களுடன் நான் முழு மனதுடன் இருக்கிறேன்.

அமைதி மற்றும் ஒற்றுமையைப் பின்பற்றி உண்மையான காந்திய அகிம்சையின் வழியில் போராட்டத்தைத் தொடருமாறு மக்களிடம் வேண்டுகோள் விடுக்கிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *