• October 5, 2025
  • NewsEditor
  • 0

கடந்த 27 -ம் தேதி கரூர் வேலுசாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பேசிக்கொண்டிருந்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானார்கள். இந்த சம்பவம், இந்தியாவையே கலங்கடித்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், இந்த விசாரணையை கரூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பிரேம் ஆனந்த் விசாரிப்பார் என விசாரணை அதிகாரியை மாற்றி கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார்.

investigation

அதற்கு முன்பு இந்த வழக்கை கரூர் டி.எஸ்.பி செல்வராஜ் விசாரித்து வந்தார். இந்நிலையில், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வருகை தந்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஓய்வுபெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி திருமதி அருணா ஜெகதீசன் தலைமையில், ஒரு நபர் விசாரணை ஆணையத்தை அறிவித்தார். இதனைத் தொடர்ந்து, செப்டம்பர் 28 மற்றும் 29 ஆகிய இரண்டு நாட்கள் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் கரூரில் விசாரணை நடத்தினார்.

இந்நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு பா.ஜ.க சார்பில் தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி-கள் தலைமையிலான குழு விசாரணை நடத்திச் சென்றனர். இதற்கிடையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில், சிறப்பு புலனாய்வு குழு ஐ.ஜி அஸ்ரா கார்க் தலைமையில் கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த நீதிமன்றம் பரிந்துரை செய்தது. இதனையடுத்து, இதுவரை விசாரணை மேற்கொண்டு வந்த ஏ.டி.எஸ்.பி பிரேம் ஆனந்த், விசாரணை கோப்புகளை சிறப்பு புலனாய்வு குழு அதிகாரி ஐஜி.அஸ்ரா கார்கிடம் நேற்று சென்னையில் ஒப்படைத்ததாகச் சொல்லப்படுகிறது.

investigation

இதையடுத்து, இன்று கரூர் வந்த சிறப்பு புலனாய்வுக்குழு ஐ.ஜி அஸ்ரா கார்க் தனது விசாரணையைத் தொடங்கியுள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழக்க காரணமாக இருந்த வேலுசாமிபுரம் பகுதியில் அவர் தலைமையிலான குழுவினர் முக்கால் மணி நேரத்துக்கு அதிகமாக விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, கரூர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் உதவி ஆய்வாளர் சுதர்சன், கரூர் நகர காவல் நிலையத்தில் பணியாற்றும் தனி பிரிவு ஏட்டு மோகன்ராஜ் ஆகியோர் சம்பவம் நடைபெற்ற இடத்தில், கூட்ட நெரிசல் எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து, சிறப்பு புலனாய்வு குழுவிடம் விளக்கி கூறினர். அதனைத்தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த விசாரணை குழு அதிகாரி ஐ.ஜி அஸ்ரா கார்க்,

investigation

“நீதிமன்ற உத்தரவுப்படி, இன்று முதல் கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளோம். மற்றபடி, விசாரணை தொடர்பாக வேறு எந்தத் தகவலும் கூறமுடியாது. மேலும், சம்பவம் தொடர்பாக விசாரணையைத் தொடர்கிறோம். இன்னும் எத்தனை நாட்கள் விசாரணை நடைபெற உள்ளது என்று கேட்கிறீர்கள். ஆனால், வேறு எதைவும் தற்போதய நிலையில் கூற இயலாது” என்றார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *