• October 5, 2025
  • NewsEditor
  • 0

தூத்துக்குடி மாவட்டம் கொங்கராயகுறிச்சி என்ற கிராமத்தில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் இதே மாவட்டத்தைச் சேர்ந்த 33 வயதான மணிகண்டன் என்பவர், கணித ஆசிரியராக பணிபுரிகிறார். இதே பள்ளியில் படித்துவரும் பிளஸ் 2 மாணவியை இவர் ஆசை வார்த்தைகளால் பேசி பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். இதனால் இவர் பள்ளி நிர்வாகத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் உடல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் பாதிக்கப்பட்ட அந்த மாணவியை அவரது பெற்றோர்கள் மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அழைத்துச் சென்றபோது மாணவி கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது.

ஏழு மாதம் கர்ப்பம் – மருத்துவமனையில் சிகிச்சை:

மாணவியின் கர்ப்பத்திற்கு காரணமாக இருந்த மணிகண்டனை ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் போலீசார் அந்த மாணவியின் பெற்றோர் அளித்த புகாரை வைத்து தீவிர விசாரணைக்கு பின் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இது குறித்து இன்ஸ்பெக்டரிடம் (ஸ்ரீவைகுண்டம் மகளிர் காவல் நிலையம்) நாம் விசாரித்த பொழுது,” மணிகண்டனை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து இருக்கிறோம். இது போன்ற வழக்குகளில் கைது செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சமே ஆயுள் தண்டனை தான்” என்று கூறினார். இந்நிலையில் 7 மாதம் கர்ப்பமாக இருக்கும் அந்த மாணவியை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

அதிகரித்து வரும் பாலியல் குற்றங்கள்:

கிராமப்புறங்களில் மட்டுமல்ல தமிழ்நாடு முழுவதுமே குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டுதான் வருகிறது. இதைப்பற்றி குழந்தை உரிமைகள் செயற்பாட்டாளர், தேவநேயனிடம் நாம் பேசிய போது, “ஆசிரியர் பணி என்பது புனிதமான பணி ; அதை எவ்வளவு தவறாக பயன்படுத்த முடியுமோ அவ்வளவு தவறாக பயன்படுத்தி வருகின்றனர் சிலர். இவர் போன்ற அயோக்கியர்கள், எது சரி எது தவறு என்ற தெளிவே இல்லாத குழந்தைகளை குறிவைத்து இவ்வாறு செய்கின்றனர். அந்த குழந்தைகளுக்கு என்று இருக்கும் பலவீனத்தை தெரிந்து கொண்டு அதை வைத்து மிரட்டி அவர்களின் வலையில் திட்டமிட்டு சிக்க வைக்கின்றனர். இது போன்ற குற்றங்கள் ஒரே நாளில் நடப்பதல்ல; முதலில் சிரிப்பது.. பிறகு ஆசை வார்த்தைகளால் பேசி மயக்குவது..

பின்பு தொடுவது என்று கொஞ்சம் கொஞ்சமாக காய் நகர்த்துகிறார்கள்.

தேவநேயன்

தடுப்பு நடவடிக்கைகள்:

பள்ளிகளில் வைக்கும் மாணவர் மனசு பெட்டி வர வர குப்பை தொட்டியாக மாறி கொண்டு வருகிறது. சிசிடிவி இல்லாத இடங்களில் மாணவர் மனசு பெட்டியை வைக்க வேண்டும். சைல்ட் ப்ரொடக்ஷன் கமிட்டி (Child Protection Committe)அல்லது பேரனட்ஸ் டீச்சர் அசோசியேசன் (PTA) போன்றவர்களின் முன்னால் வைத்து இந்தப் பெட்டியை திறக்க வேண்டும். ஆசிரியர்களை பள்ளியில் சேர்ப்பதற்கு முன்பு அவர்களின் பின்னணியை நன்றாக வெரிஃபை பண்ண வேண்டும். குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்றங்களை தடுக்க இதுவே நாம் எடுக்கும் சிறந்த நடவடிக்கைகளாக இருக்கும்.

சட்ட நடவடிக்கைகள்:

இது போன்ற குற்றங்களால் பாதிக்கப்பட்டு கர்ப்பமாகும் பெண் குழந்தைகளுக்கு மாஸ்டர் ஹெல்த் செக்கப் செய்து அதற்கான சிகிச்சைகளை மருத்துவர்கள் அளிக்க வேண்டும். கட்டாயமாக அந்த குழந்தைக்கும் அவரின் பெற்றோர்களுக்கும் உளவியல் ஆலோசனை கொடுக்க வேண்டும். அந்த பெண் குழந்தை எக்காரணத்தைக் கொண்டும் படிப்பை நிறுத்தாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதேபோன்று அரசாணை 121 (2012 ) படி பள்ளியில் நடக்கும் பாலியல் வன்முறைகளில் வன்முறை செய்த ஆசிரியர்களை உடனே டிஸ்மிஸ் செய்ய வேண்டும். இதுபோன்ற குற்றங்களில் கைது செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்படும்.

அரசாங்கம் நிதி ஒதுக்கவில்லை:

மிக முக்கியமாக, மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் என்று ஒன்று இருக்கிறது. அதற்கு அரசாங்கம், நிதியே ஒதுக்குவதில்லை. குழந்தைகளுக்கு வாக்கு வங்கி இல்லை என்பதற்காக இப்படி செய்கின்றார்களா என்பது தெரியவில்லை. குழந்தைகள்தான் நம்முடைய நிகழ்காலமும் எதிர்காலமும் ஆவார்கள். நேஷனல் கிரைம் ரெக்கார்ட் பீரோவின்( National Crime Record Bereau – NCRB)படி 2023 க்கு பிறகு குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் 200% அதிகரித்து வருகிறது என்பதால் இதை அரசாங்கம் நினைவில் வைத்து தகுந்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்” என்று கடுமையாக கூறுகிறார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *