• October 5, 2025
  • NewsEditor
  • 0

தமிழ்நாட்டுக்கு 2021-ல் ஆளுநராகப் பொறுப்பேற்ற நாள்முதல் ஆளும் தி.மு.க அரசுக்கு எதிராக தமிழ்நாட்டு கலாசாரத்துக்கு எதிராக நான்காண்டுகளாகப் பேசிவருகிறார் ஆளுநர் ஆர்.என். ரவி.

அதன்தொடர்ச்சியாக வள்ளலாரின் 202-வது பிறந்தநாளை முன்னிட்டு கிண்டி ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ஆர்.என். ரவி, முதலமைச்சர் ஸ்டாலினின் `தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும்’ முழக்கத்தைக் குறிப்பிட்டு, “தமிழ்நாடு யாருடன் போராடும்? தமிழ்நாட்டை எதிர்த்து யாரும் போராடவில்லை. இங்கு எந்த சண்டையும் இல்லை” என தி.மு.க அரசை விமர்சித்துப் பேசியிருக்கிறார்.

ஆளுநர் ஆர்.என். ரவி

இந்த நிலையில், ஆளுநரின் விமர்சனத்துக்கு முதல்வர் ஸ்டாலின் எதிர்வினையாற்றியிருக்கிறார்.

ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பதிவில், ” `தமிழ்நாடு யாருடன் போராடும்?’ என ஆளுநர் கேட்டுள்ளார்…

இந்தி மொழியை ஏற்றுக்கொண்டால்தான், கல்வி நிதியைக் கொடுப்போம் என இருக்கும் ஆணவத் திமிருக்கு எதிராகப் போராடும்!

அறிவியல் மனப்பான்மையை விதைக்கும் கல்வி நிலையங்களுக்குள் சென்று மூடநம்பிக்கைகளையும் – புரட்டுக் கதைகளையும் சொல்லி, இளம் தலைமுறையை நூறாண்டு பின்னோக்கி இழுக்கும் சதிக்கு எதிராகப் போராடும்!

உச்சி மண்டை வரை மதவெறியை ஏற்றிக்கொண்டு, எதற்கெடுத்தாலும் மதத்தைப் பிடித்துக் கொண்டு நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கும் தந்திரக் கும்பல்கள் தலையெடுக்காமல் போராடும்!

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை, மக்களின் விருப்பத்திற்கு மாறாக நெருக்கும் ஜனநாயக விரோதிகளுக்கு எதிராகப் போராடும்!

ஸ்டாலின்
ஸ்டாலின்

ஆளுநரின் அதிகார அத்துமீறல்களுக்கு எதிராக ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்துக்குச் சென்று மாநில உரிமைகளை நிலைநாட்டுகிறோம். அரசியல்சட்டத்தின் மாண்பை சிறுமைப்படுத்தும் எண்ணம் கொண்டவர்களுக்கு எதிராகத் தொடர்ந்து போராடும்!

தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய தொழிற்சாலைகளை – தொழில் வளர்ச்சியை – வேலைவாய்ப்புகளை, அடுத்த மாநிலத்துக்கு மிரட்டி அழைத்துச் செல்லும் சதிகாரர்களுக்கு எதிராகப் போராடும்!

ஆர்.எஸ்.எஸ். ஆசியுடன் இந்திய மக்களின் ஒற்றுமையைச் சீர்குலைத்து மீண்டும் மனுதர்மத்தை நிலைநாட்டத் துடிக்கும் ஆதிக்க வெறியர்களுக்கு எதிராகப் போராடும்!

உலகத்துக்கே பொதுவான வள்ளுவருக்குக் காவிக்கறை பூசுவது முதல் கீழடியின் உண்மைகள் நிலத்துக்கடியிலேயே புதைந்துபோக வேண்டும் என்று நினைப்பது வரையிலான வன்மம் இருக்கிறதே, அதற்கு எதிராகப் போராடும்!

#Delimitation (தொகுதி மறுவரையறை) மூலம் தமிழ்நாட்டின் வலிமையைக் குறைக்கும் சதிக்கு எதிராகப் போராடும்!

ஏகலைவனின் கட்டை விரலைக் கேட்டதுபோல் திணித்திருக்கும் #நீட் எனும் பலிபீடத்துக்கு எதிராகப் போராடும்!

நாட்டையே நாசப்படுத்தினாலும், தமிழ்நாடு மட்டும் 11.19% வளர்ச்சி பெற்று, பிற மாநிலங்களுக்கு ஒளிகாட்டுகிறதே என்று நாள்தோறும் அவதூறுகளைப் பரப்பி, கலவரம் நடக்காதா என ஏங்கிக்கிடக்கும் நரிகளுக்கு எதிராகப் போராடும்!

நாகாலாந்து மக்கள் புறக்கணித்து அனுப்பிய பின்னும் திருந்தாமல், தமிழ்நாட்டு மக்களிடையே குழப்பத்தை உண்டாக்க மட்டுமே பணியாற்றும் ஆளுநருக்கு எதிராகவும் போராடும்!

இறுதியில் தமிழ்நாடே வெல்லும்! ஒட்டுமொத்த இந்தியாவையும் காக்கும்!” என்று பதில் விமர்சனத்தை முன்வைத்திருக்கிறார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *