• October 5, 2025
  • NewsEditor
  • 0

சளி, இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற பிரச்சினைகளுக்கு மருந்தாக கோல்ட்ரிஃப் (Coldrif) மருந்துகளை சாப்பிட்ட 11 குழந்தைகள் உயிரிழந்திருப்பதாக அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியாகியிருக்கிறது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த காஞ்சிபுரத்தில் இயங்கி வரும் ‘Sresan Pharmaceuticals’ என்ற மருந்து உற்பத்தி நிறுவனத்தின் இருமல் மருந்துதான் இந்த கோல்ட்ரிஃப் (Coldrif). இந்த நிறுவனம் இந்தியாவின் பல மாநிலங்களில் மருந்துகளை விநியோகம் செய்து வருகிறது.

கோல்ட்ரிஃப் (Coldrif)

இந்நிலையில் மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானின் 11 குழந்தைகளின் உயிரிழப்பிற்குக் காரணம் இந்த கோல்ட்ரிஃப் (Coldrif) மருந்துதான் என்று மருத்துவ ஆய்வில் தெரியவந்திருப்பதாகக் கூறுகிறார்கள். இந்த மருந்தை உட்கொண்ட குழந்தைகள் சில நாட்களியே சிறுநீரகம் செயலிழந்து அடுத்தடுத்து உயிரிழந்திருப்தாகக் கூறப்படுகிறது.

வண்ணப்பூச்சுகள், பிரேக் திரவங்கள் மற்றும் பிளாஸ்டிக்குகளில் பயன்படுத்தப்படும் ‘Diethylene Glycol (DEG)’, ‘Ethylene Glycol (EG)’ நச்சுகள் கோல்ட்ரிஃப் மருந்தில் கலந்திருப்பதாகவும் அதிர்ச்சியான தகவல்கள் ஆய்வில் வெளியாகியிருக்கின்றன.

இதனால் மத்தியப் பிரதேச அரசு கோல்ட்ரிஃப் விற்பனையையும் அந்த நிறுவனம் தயாரிக்கும் அனைத்து மருந்துகளையும் தடை செய்திருக்கிறது. மேலும் அக்டோபர் 1 முதல் இதன் விற்பனையைத் தடுக்கவும், ஏற்கனவே இருக்கும் இருப்புக்களை முடக்கவும் நடவடிக்கை எடுத்திருக்கிறது. இது வடமாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “வடமாநிலங்களில் இது நடந்திருக்கிறது. இந்தியா முழுவதும் அந்த நிறுவனத்தின் மருந்துகள் விற்பனையாகி வருகிறது. ஆனால் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் என ஒருசில இடங்களில்தான் இந்த உயிரிழப்பு நடந்திருக்கிறது.

ஒருவேளை காலாவதியான மருந்தை உட்கொண்டதாலும் குழந்தைகள் உயிரிழந்திருக்கலாம் என்கிற ரீதியிலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

மா.சுப்பிரமணியன்

தமிழ்நாட்டில் அந்த வகை இருமல் மருந்து விற்பனையாகி வருகிறதா? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம். குழந்தைகளுக்கு கோல்ட்ரிஃப் (Coldrif) இருமல் மருந்தை கொடுக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம். இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.” என்று பேசியிருக்கிறார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *