
வெட்டி வீழ்த்தப்பட்ட மரங்கள்
இந்த நிலையில்தான், ஆரோவில்லில் `பசுமைத் தொழில்நுட்ப ஆராய்ச்சி மேம்பாட்டு மையம்’ அமைக்க, ஆரோவில் அறக்கட்டளைத் தலைவரும், தமிழக ஆளுநருமான ஆர்.என்.ரவி மற்றும் செயலாளர் ஜெயந்தி ரவி முன்னிலையில், கடந்த 2025 ஜூலை மாதம் சென்னை ஐ.ஐ.டி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது.
அந்த ஒப்பந்தத்தின்படி, வானூர் பகுதியில் 130 ஏக்கரில் செயல்பட்டு வரும் அன்னபூர்ணா விவசாயப் பண்ணையில், 100 ஏக்கர் நிலத்தை சென்னை ஐ.ஐ.டி-க்கு வழங்க ஆயத்தமாகி வருகிறது ஆரோவில் நிர்வாகம். இதுதான் தற்போது சூழலியலாளர்களைக் கொந்தளிக்க வைத்திருக்கிறது.
இயற்கை வேளாண்மையின் சின்னமாக திகழ்ந்துவரும் இந்தப் பண்ணையை சிதைக்கும் ஆரோவில் நிர்வாகத்தின் இந்தச் செயல் பைத்தியக்காரத்தனமானது. அதனால் தயவுசெய்து மக்கள் இதற்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும்” என்றார் கிருஷ்ணா மெக்கன்சி.
அதேபோல இவ்விவகாரம் குறித்து நம்மிடம் பேசிய ஆரோவில் வாசிகள் சிலர், “தற்போதிருக்கும் அன்னபூர்ணா பண்ணையில், முதல் 15 ஆண்டுகள் நிலத்தைப் பண்படுத்தும் பணிதான் நடைபெற்றது. இத்தனை ஆண்டுகள் உழைப்பின் பலனாகத்தான் தற்போது முழு இயற்கை விவசாயப் பண்ணையாக மாறியிருக்கிறது.
மீறப்பட்டஆரோவில் விதிகள்
ஆரோவில்லுக்கு வெளியில் இருக்கும் நிலங்கள் தேவையற்றது என்று சொல்லி, மொரட்டாண்டி டோல்கேட்டுக்கு அருகில் இருந்த 30 ஏக்கர் நிலத்தை, ஏற்கெனவே தனியாருக்கு விற்றார்கள்.
அந்த இடத்தை சென்னை ஐ.ஐ.டி-க்கு கொடுத்திருக்கலாமே? பயன்பாடின்றி இருக்கிறது என்று கூறி அந்த இடத்தை ரியல் எஸ்டேட்காரர்களுக்கு விற்றுவிட்டு, செழிப்புடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் விவசாயப் பண்ணையை ஐ.ஐ.டி-க்குக் கொடுப்பது சரியா? ஆரோவில் விதிகளின்படி, ஆரோவில்லியன் ஆகாத ஒருவர் ஆரோவில்லில் தொழில் தொடங்க முடியாது.

அப்படி இருக்கும்போது, ஆரோவில்லியன் அல்லாத ஒரு நிறுவனம் முதன்முறையாக தொழில் தொடங்க அனுமதிக்கப்பட்டிருக்கிறது.
இது தனியார் நிறுனவங்களைப் பின்வாசல் வழியாக ஆரோவில்லில் அனுமதிப்பதற்கான வழி. அன்னையின் கனவை நினைவாக்குகிறோம் என்று சொல்கிறார்கள். விவசாயப் பண்ணையில் ஐ.ஐ.டி வளாகம் கட்ட வேண்டும் என்று அன்னை நினைத்தாரா?” என்றும் கேள்வி எழுப்புகின்றனர்.
சென்னை ஐ.ஐ.டி-க்கு இலவசமாக தாரை வார்க்கப்படும் நிலம்
ஆரோவில் ஃபவுண்டேஷன் – சென்னை ஐ.ஐ.டி ஓப்பந்தம் சொல்வதென்ன?
ஆரோவில் ஃபவுண்டேஷன் – சென்னை ஐ.ஐ.டி-க்கு இடையேயான ஒப்பந்தத்தை `ரகசிய ஒப்பந்தம்’ (confidentiality clause) என்று கூறி, தற்போது வரை அது வெளியிடப்படவில்லை. ஆனால், நமக்கு எக்ஸ்க்ளூசிவாகக் கிடைத்துள்ள, சென்னை ஐ.ஐ.டி-யின் இயக்குநர் வீழிநாதன் காமகோடியும், ஆரோவில் ஃபவுண்டேஷன் செயலாளர் ஜெயந்தி ரவியும் கையெழுத்து போட்ட அந்த ஒப்பந்தத்தின் ஒருசில முக்கியப் பகுதிகளை மட்டுமே இங்கே கொடுக்கிறோம்.

# அன்னபூர்ணா விவசாயப் பண்ணையின் 100 ஏக்கர் நிலம், சென்னை ஐ.ஐ.டி-க்கு 33 ஆண்டுகளுக்கு எந்தவிதத் தொகையும் இன்றி லீசுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.
# ஆரோவில் நிலத்தில் தொழில் தொடங்கும் ஆரோவில்லியன் ஒருவர், அவரின் வருவாயில் ஆரோவில் நிர்வாகத்துக்கு 33% சதவிகிதம் கொடுக்க வேண்டும். ஆனால் சென்னை ஐ.ஐ.டி நிறுவனம் வெறும் 0.5% கொடுத்தால் போதும் என்கிறது இந்த ஒப்பந்தம்.
பின் வாசல் வழியாக நுழையும் தனியார் நிறுவனங்கள்
# பசுமை ஹைட்ரஜன் (Green Hydrogen) திட்டத்தைச் செயல்படுத்த அனுமதி. இதன்மூலம் வாகனங்களுக்கான பெட்ரோல், டீசலுக்கு மாற்றான எரிபொருள் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியை மேற்கொள்ளலாம்.
# இந்த ஒப்பந்தம் `சென்னை ஐ.ஐ.டி இன்குபேஷன்’ என்ற நிறுவனத்துடனும் போடப்பட்டிருக்கிறது. இந்த நிறுவனம் தனியார் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை தன்னுடன் இணைத்துக் கொள்ளும். இதன்மூலம் சென்னை ஐ.ஐ.டி நிழலில் ஆரோவில்லில் தொழில் தொடங்கும் தனியார் நிறுவனங்கள், தங்கள் வருவாயில் வெறும் 0.5% சதவிகிதத்தை மட்டும் கொடுத்துவிட்டு கோடிகளை குவிக்கும்.
“ஆரோவில் நிர்வாகமும், சென்னை ஐ.ஐ.டி-யும் பொது நிர்வாக முறையில்தான் இயங்குகின்றன.அப்படி இருக்கும்போது, ஒப்பந்தம் ரகசியம் காக்கப்படுவதன் நோக்கம் என்ன?” என்றும் கேள்வி எழுப்புகின்றனர் சமூக ஆர்வலர்கள்!
இதையடுத்து ஆரோவில் திட்டமிடல் மற்றும் திட்டம் மேம்பாட்டு ஒருங்கிணைப்பாளர் சிந்துஜாவிடம் விளக்கம் கேட்டபோது, “முதலில் அன்னை அவர்கள் அந்த 135 ஏக்கர் நிலத்தை விவசாய பயன்பாட்டிற்காக வாங்கவில்லை.
`அன்னபூர்ணா பண்ணையில் விவசாயம் நடைபெறவில்லை…’
`எதிர்காலத்தில் ஆரோவில்லின் வளர்ச்சிக்காக, இடமாற்றம் செய்வதற்கு பயன்படும்’ என்ற நோக்கத்திற்காகவே வாங்கினார். அந்த நிலத்தைத்தான் தற்போது விவசாயம் என்ற பெயரில் வெறும் மூன்று பேர் ஆக்கிரமித்து வைத்திருக்கிறார்கள்.
உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், ஆரோவில்வாசிகளின் உணவு தேவையில் ஒரு சதவிகிதம்கூட அந்த அன்னபூர்ணா பண்ணையில் இருந்து வரவில்லை.
அரிசி உள்ளிட்ட தானியங்களை வெளிச் சந்தையிலிருந்து வாங்கி, அன்னபூர்ணா பண்ணையின் பெயரில் விற்று வருகிறார்கள் என்பதுதான் ஆதாரபூர்வமான உண்மை.

ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி என்பதுதான் ஆரோவில்லின் நோக்கம். அன்னையின் கனவும் அதுதான். அதற்காகத்தான் சென்னை ஐ.ஐ.டி-க்கு அந்த நிலத்தை நிர்வாகக் குழு வழங்கியிருக்கிறது” என்றார்.
தொடர்ந்து, ‘இதுகுறித்தான ஒப்பந்தத்தை ரகசியமாக வைத்திருப்பது ஏன்?’ என்ற நமது கேள்விக்கு, “அந்த ஒப்பந்தம் இன்னும் இறுதியாகவில்லை” என்றார்.
உடனே, `எங்களுக்கு கிடைத்த அந்த ஒப்பந்தத்தின் நகலில் செயலாளர் ஜெயந்தி ரவியும், ஐ.ஐ.டி இயக்குனர் காமகோடியும் கையெழுத்து போட்டிருக்கிறார்களே?’ என்று நாம் அடுத்த கேள்வியை எழுப்பினோம்.
`ஆரோவில் ஃபவுண்டேஷன் புள்ளி விபரங்களை நேர்மையாக வெளியிடுமா ?’
அதற்கு பதிலளித்த ஆரோவில் ஒழுங்கமைப்பு, நீக்குதல் மற்றும் ஆய்வுக் குழு பொறுப்பாளர் அந்திம்,“கேட்பவர்களுக்கு எல்லாம் அந்த ஒப்பந்தத்தைக் காட்ட வேண்டும் என்று அவசியம் இல்லை. ஆரோவில் ஆட்சிமன்றக் குழு அதைப் பார்த்துக்கொள்ளும். தேவைப்படும்போது, தேவைப்படுபவர்களுக்கு அந்த தகவல் தெரியவரும்.
இறைவனுக்கு சேவை செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் இங்கு இருக்கலாம். இல்லையென்றால் அவரவர்கள் நாட்டிற்கு திரும்பச் செல்லலாம். 130 ஏக்கர் நிலத்தில் ஆண்டுக்கணக்கில் கஞ்சா அடித்துக் கொண்டிருப்பதுதான் விவசாயமா ?” என்றார்.
இதுகுறித்து அன்னபூர்ணா விவசாயப் பண்ணை தரப்பில் கேட்டபோது, “ஆரோவில்லின் உணவுத் தேவைகளைகளை அன்னபூர்ணா பண்ணை பூர்த்தி செய்யவில்லை என்பதும், அங்கு கஞ்சா புகைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் முழுக்க முழுக்க பொய்.
அது உண்மை என்றால், ஆரோவில்லின் உணவுத் தேவை எவ்வளவு… அதில் அன்னபூர்ணா பண்ணை எவ்வளவு பூர்த்தி செய்கிறது…. என்ற புள்ளி விவரத்தை ஆதராபூர்வமாக வெளியிடுவார்களா ?
அவர்கள் அப்படி செய்ய மாட்டார்கள். ஏனென்றால் ஆரம்பத்தில் இருந்து வெறும் பொய்களை மட்டுமே சொல்லி, அன்னையின் கனவு என்ற பெயரில் ஆரோவில்லை சிதைத்து வருகிறார் ஜெயந்தி ரவி” என்றனர்.