• October 5, 2025
  • NewsEditor
  • 0

மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங் பகுதியில் நேற்று இரவில் இருந்து கனமழை பெய்து வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வரக்கூடிய சுகியா போரியா, மிரியா போன்ற பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி 17 பேர் உயிரிழந்தனர். நிலச்சரிவு பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் மம்தா பானர்ஜி நாளை நேரில் பார்வையிடுகிறார். நிலச்சரிவு காரணமாக மேற்கு வங்கம் மற்றும் சிக்கிம் இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டு சிக்கிம் நாட்டின் இதர பகுதியில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளது. டார்ஜிலிங் மற்றும் சிலிகுரி இடையேயும் நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

டார்ஜிலிங்கில் சுற்றுலா மையங்களை இணைக்கக்கூடிய வகையில் கட்டப்பட்டு இருந்த இரும்பு பாலம் ஒன்று இடிந்து விழுந்தது. துர்கா பூஜைக்கு பிறகு அதிகமான சுற்றுலா பயணிகள் டார்ஜிலிங் சுற்றுலா சென்றுள்ளனர். நிலச்சரிவு காரணமாக அவர்கள் அனைவரும் சொந்த ஊர் திரும்ப முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து நிர்வாகம் தற்காலிகமாக சுற்றுலா பயணிகள் டார்ஜிலிங் வர தடை விதிக்க முடிவு செய்துள்ளது.

மினி ரயில் சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தின் வடக்குப்பகுதியில் உள்ள ஜல்பைகுரி, சிலிகுரி போன்ற இடங்களில் மழையால் வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வரும் 7ம் தேதி வரை கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. டார்ஜிலிங்கில் ஆறுகள் அனைத்தும் அபாய கட்டத்தை தாண்டி ஓடிக்கொண்டிருக்கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *