
சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் துவார பாலகர் சிலைகளில் பொருத்தப்பட்டுள்ள தங்கம் பூசப்பட்ட கவசங்கள் பராமரிப்பு பணிக்காக கடந்த மாதம் ஏழாம் தேதி சென்னைக்கு எடுத்து செல்லப்பட்டது. இதுகுறித்து கேரளா ஐகோர்ட் தலையிட்டு விசாரணை நடத்தி உத்தரவு பிறப்பித்ததை தொடர்ந்து மீண்டும் அந்த கவசங்கள் சபரிமலைக்கு கொண்டுவரப்பட்டன. விலைமதிப்பு மிக்க பொருட்களை கோயில் வளாகத்தில் வைத்து பராமரிப்பு பணிகள் செய்ய வேண்டும் என கோர்ட் ஏற்கனவே உத்தரவிட்டிருந்ததை கோர்ட் சுட்டிக்காட்டி இருந்தது. இதற்கிடையே 1999-ம் ஆண்டு விஜய் மல்லையா சுமார் 30 கிலோ தங்கம் உபயமாக வழங்கியிருந்தார். அதை பயன்படுத்தி சபரிமலையில் கோயில் துவாரபாலர்கள் உள்ளிட்ட அனைத்திலும் தங்கம் பதிக்கப்பட்டது. ஆனால் 2019-ல் மீண்டும் அதில் தங்கம் பதிக்கும்பணி நடைபெற்றுள்ளது. அப்படியானால் பழைய தங்கம் எங்கே என்ற கேள்வி எழுந்துள்ளது. இது பற்றி தேவசம்போர்டு விஜிலென்ஸ் விசாரணை நடத்தி வருகிறது. அதில் 25 ஆண்டுகளுக்கு முன்பு இருந்து இப்போது வரைக்கும் பல மோசடிகள் நடந்திருப்பதற்கான ஆதாரங்கள் சிக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கிடையே சபரிமலையில் தங்கம் காணாமல் போன விஷயத்தில் எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க கடுமையான விமர்சனங்களும் முன்வைத்து வருகின்றன. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கேரளா சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “சபரிமலையில் விஜய் மல்லையா 1998ல் வழங்கிய தங்கத்தில் 30 கிலோ தங்கத்தில் இப்போது எவ்வளவு மீதம் உள்ளது என்று தேவசம்போர்டும் அரசும் தெளிவுபடுத்தவேண்டும்.
உன்னிகிருஷ்ணன் போற்றி என்பவர் யார் என்று பலமுறை நாங்கள் கேள்வி கேட்டும் எந்த பதிலும் இல்லை. அவரை உபயதாரர் என்ன சொல்லுகிறார்கள். ஆனால் உன்னி கிருஷ்ணன் போற்றி மூலம் திருடப்பட்ட தங்கத்தில் அன்றைய தேவசம் போர்டு நிர்வாகிகளுக்கும், ஆட்சியிலும் இருந்தவர்களுக்கும் பங்கு கொடுத்திருக்கிறார்கள். அதனால்தான் தங்கத்தில் குறைவு ஏற்பட்டிருக்கிறது என்று தெரிந்தும் அதை வெளியே சொல்லாமல் மறைத்து வைத்தார்கள். இந்த விவகாரத்தில் தேவசம்போர்டு அமைச்சரும் தேவசம் போர்டு தலைவரும் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். இன்றைய தேவசம்போர்டு அமைச்சர் வாசவன் முன்னாள் தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் ஆகியோருக்கு எதிராக சி.பி.ஐ விசாரணை நடத்தப்பட வேண்டும்

தங்கம் பூசும் பணிகள் மற்றொரு மாநிலத்திற்கு கொண்டு போய் செய்யப்பட்டதால் கேரள போலீஸ் எல்லைக்குள் அது வராது. எனவேதான் சி.பி.ஐ விசாரணை வேண்டும் எனக்கேட்கிறோம். இல்லை என்றால் காங்கிரஸ் கூட்டணி மிக தீவிரமான போராட்டங்களை முன்னெடுக்கும். ஐயப்ப சுவாமி சிலையை திருடாமல் இருந்ததற்காக அரசுக்கும், தேவசம்போர்டுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இன்னும் சிறிதுகாலம் கிடைத்திருந்தால் ஐயப்பன் சிலையையும் திருடிக்கொண்டுபோயிருப்பார்கள். கோடிக்கணக்கான பக்தர்களின் மனதை புண்படுத்தி விட்டார்கள். இந்த விவகாரத்தில் முதல்வர் பினராயி விஜயன் இதுவரை ஒரு சின்ன கருத்து கூட தெரிவிக்காமல் உள்ளார். ஐயப்ப சங்கமம் நடத்தி கபட பக்தியை வெளிப்படுத்திய முதல்வர் பினராயி விஜயன் சபரிமலை கோயிலில் நடைபெற்ற மோசடிகள் குறித்து பதில்கூற வேண்டும்” என்றார்.