
சுற்றுலாவின் பெயரால் நீலகிரியில் வனவிலங்குகள் பாதிக்கப்படுவதைத் தடுக்க சூழல் சுற்றுலா என்கிற பெயரில் வனத்துறையால் சுற்றுலா நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில்,
கூடலூர் அருகில் உள்ள ஊசிமலை சூழல் சுற்றுலா தலம் பகுதியில் அவலத்தின் உச்சமாக தாய் யானை ஒன்று தன்னுடைய குட்டியுடன் குப்பைத் தொட்டியில் உணவு தேடி அலையும் நிலை காண்போரை கண்கலங்கச் செய்திருக்கிறது.
இது குறித்து தெரிவிக்கும் கூடலூரைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், ” யானைகளின் வாழிடங்கள் மற்றும் வழித்தடங்களின் சிதைவு, தனியார் பெருந்தோட்டங்களின் ஆக்கிரமிப்பு, சட்டவிரோத தடுப்பு வேலிகள் போன்றவை யானைகளை நிலைகுலையச் செய்திருக்கின்றன. தடம் மாறும் யானைகளால் ஏதுமறியா அப்பாவி கூலித் தொழிலாளர்கள் உயிரிழந்து வருகின்றனர்.

மேலும், இறைச்சி கழிவுகள், காய்கறி, பழக் கழிவுகள் போன்ற உணவுக் கழிவுகள் முறையாக மேலாண்மை செய்யப்படாத காரணத்தால் கவரப்படும் கரடி, காட்டு மாடு, காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் குப்பைத் தொட்டிகளில் உணவு தேடி அலைகின்றன.
இந்த நிலையில், ஊட்டி – கூடலூர் சாலையில் அமைந்துள்ள ஊசி மலை பகுதியில் வனத்துறையினர் தான் சூழல் சுற்றுலாவை நடத்தி வருகின்றனர். அந்த பகுதியில் முறையாக கழிவுகளை மேலாண்மை செய்யாத காரணத்தால் பாவப்பட்ட யானைகள் குப்பைத் தொட்டியில் உணவு தேடி அலைகின்றன.

அவற்றிற்கு கடுமையான உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தும் அபாயம் இருக்கிறது. மேலும், யானைகள் சாலைக்கு வருவதால் பயணிகளின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி வருகிறது. முன்மாதிரியாக இருக்க வேண்டிய சூழல் சுற்றுலாவை கேலிக்கூத்தாக்கும் வனத்துறையின் செயல் அதிர்ச்சி தருகிறது. இது குறித்து முறையாக ஆய்வு செய்து உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் ” என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.