
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் பைசன்’ திரைப்படம் இந்தாண்டு தீபாவளி ரிலீஸாக திரைக்கு வரவிருக்கிறது.
நிவாஸ் கே பிரசன்னா இசையில் உருவாகியிருக்கும் பைசன்’ படத்தின் துடிப்பான பாடல்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன.
கடைசியாக வந்திருந்த `தென்னாட்டு’ பாடலை பின்னணி பாடகர் சத்யன் பாடியிருக்கிறார்.
சமீபத்தில், சோசியல் மீடியாவில் பெரும் வைரல் அலையாய் வலம் வந்தவர் இந்தப் பாடல் மூலமாக தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியிருக்கிறார். இந்தப் பாடலுக்கு வாழ்த்துகள் சொல்லி அவரிடம் பேசினோம்.
உற்சாகத்தோடு பேசிய சத்யன், “மக்கள் என்னை ஆனந்த வெள்ளத்தில் மூழ்கடித்திருக்காங்க. இப்படியான அளவற்ற அன்பை நான் எதிர்பார்க்கவே இல்ல.
இப்படியெல்லாம் எனக்கு லவ் கொடுப்பாங்கனு நான் நினைச்சுப் பார்த்ததும் கிடையாது. `பைசன்’ படத்துல வர்ற `தென்னாட்டு’ பாடலுக்கும் நல்ல விமர்சனங்களைக் கொடுத்து வர்றாங்க.
அந்த அன்பு இதுபோல இன்னும் ஹிட் பாடல்களைத் தரணும்னு தெம்பைத் தருது.” எனத் தொடர்ந்தவர், இந்தப் பாடலுக்கான ரெக்கார்டிங் போன வாரம்தான் நடந்தது.
நான் என்னுடைய சுயாதீன பாடலை வெளியிடுறதுக்காக திங்க் மியூசிக்’ நிறுவனத்தைச் சேர்ந்த சந்தோஷுக்கு மெசேஜ் செய்திருந்தேன்.
அந்த நேரத்துலதான் பைசன்’ படத்தின் இந்தப் பாடலைப் பத்தி என்கிட்ட அவர் சொன்னார். பிறகு நிவாஸ் கே. பிரசன்னா எனக்கு கால் பண்ணி இந்தப் பாடல் தொடர்பாக சொன்னார்.

பாடலின் டிராக்கையும் எனக்கு அனுப்பியிருந்தாரு. நானும் என்னுடைய ஸ்டுடியோவிலேயே அந்தப் பாடலை ஓரிரு வரிகள் பாடி அனுப்பினேன். மாரி செல்வராஜ் நான்தான் பாடலை பாடணும்னு முடிவாக சொல்லிட்டாரு.
நிவாஸ் பிரசன்னாவும் எனக்கு சப்போர்ட்டிவாக இருந்து, பாடல் நல்ல வரணும்னு உழைப்பைக் கொடுத்தார். இந்தப் பாடலுக்கு தேவையானக் குரலை இந்தப் பாடலே கொண்டு வந்திடுச்சுனு நிவாஸ் ஹாப்பியா சொன்னார்.
நிவாஸ் இசையமைப்பாளர் ஆகுறதுக்கு முன்னாடி இருந்தே அவரை எனக்குத் தெரியும். அவர் இசை மீது அதிகமாக நாலேஜ் இருக்கு.
இதுக்கு முன்னாடியே அவருக்கு மெசேஜ் செய்திருக்கேன். கால் பண்ணி அவருடைய பாடல் தொடர்பாகவும் பேசியிருக்கேன். `கட்டாயமா ஒரு காலம் வரும். அன்னைக்கும் நாம சேர்ந்து வொர்க் பண்ணுவோம்’னு அவர் சொல்லியிருக்காரு.
அது இப்போ நடந்திருக்கு! இனியும் எங்க பயணம் தொடரும். இந்த மாதிரியான பாடல் பாடணும்னுங்கிறது என்னுடைய ரொம்ப நாள் ஏக்கம்னுதான் சொல்வேன். என்னை ஹீரோ என்ட்ரி பாடலுக்கு கூப்பிடுவாங்க, ஸ்டைலான பாடலுக்கு கூப்பிடுவாங்க.

ஆனால், இப்படியான விஷயங்களோட எமோஷன் வரிகள், டிராக்ல ஏற்ற இறங்கங்கள் இருக்கிற மாதிரியான பாடல்ல பாடணும்னு ரொம்ப ஆசை. என்னுடைய பசிக்கும் இந்தப் பாடல் தீனிப் போட்டிருக்குனு சொல்லலாம்.” என்றார்.
“நான் இந்த இடத்துலதான் இருந்தேன். ஆனா, யாருக்குமே தெரியாம இருந்தேன். இப்போ வெளிச்சம் என்மேல பட்டதும் நான் எல்லோருடைய கண்ணுக்கு தெரியுறேன்னு சொல்லலாம். யாரும் என்னை ஒதுக்கல. அந்த சூழல்ல நான் யாருடைய கண்ணுக்கும் தெரியாமல் இருந்துட்டேன்.
நான் இந்த சான்ஸைப் பயன்படுத்தி மேல ஏறி வரணுங்கிறதுதான் என்னுடைய நோக்கமாக இருக்கு.
இனிமேல், எந்த வாய்ப்புகளையும் தவறவிடக்கூடாதுனு எண்ணத்தோட இருக்கேன். இனியும் சில பாடல்கள் சர்ப்ரைஸாக வரவிருக்கு. ஒண்ணு ஒண்ணா தகவல்கள் தர்றேன்.” என சிரித்தப்படி முடித்துக் கொண்டார்.