
வாடிக்கையாளர்களை கவர்வதற்கு பல்வேறு யுத்திகள் ஹோட்டல் நிர்வாகம் கையாண்டு வருவதை கேள்விப்பட்டிருப்போம்.
ஆஸ்திரேலியாவில் ஹாலிடே இன் எக்ஸ்பிரஸ் ( Holiday inn Express) என்ற ஹோட்டல் நிறுவனம் தங்களது ஹோட்டலில் வந்து தங்கும் வாடிக்கையாளர்களை எழுப்ப உணவு வாசனைகளை வழங்கும் ஒரு முறையை அறிமுகப்படுத்தி உள்ளது.
அதாவது பிரேக்ஃபாஸ்ட் அலாரம் என்ற பெயரில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. வாடிக்கையாளர்கள் அலார சத்தம் மூலம் எழுந்துக்கொள்வதற்கு பதிலாக உணவின் வாசனை மூலம் அவர்களை எழுப்புவது தான் இந்த அசத்தல் திட்டத்தின் முயற்சி ஆகும்.
இந்த சேவை தற்போது ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் உள்ள அனைத்து ஹாலிடே இன் எக்ஸ்பிரஸ் ஹோட்டலிலும் வழங்கப்படுகிறது.
மேலும் சிங்கப்பூர், தாய்லாந்து, ஜப்பான் ஆகிய நாடுகளில் உள்ள ஹோட்டல்களிலும் தொடங்கப்பட உள்ளது. ஒவ்வொரு இடத்தை பொருத்து அதன் வாசனை மாறுபடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா நியூசிலாந்து போன்ற இடங்களில் காபி, பேக்கன், ப்ளூபெர்ரி போன்ற வாசனைகள் கொண்டு வாடிக்கையாளரை எழுப்புகின்றனர். சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து நாடுகளில் மாம்பழம் கொண்டு எழுப்பப்படுகிறது.
இந்த யோசனை எங்கிருந்து வந்தது என்று நிறுவனம் தெரிவிக்கையில் ஒரு ஆய்வின் அடிப்படையிலேயே இந்த திட்டம் தொடங்கப்பட்டதாக கூறுகின்றனர். அதாவது பயணம் செய்பவர்களில் 58 சதவீதம் பேர் ஒரு இனிமையான வாசனை தங்களது காலை பொழுதை மேம்படுத்துவதாக நம்புவதாக அந்த ஆய்வு கூறி இருக்கிறது. இதன் அடிப்படையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இந்த திட்டம் குறித்து அந்த ஹோட்டலின் டீன் ஜோன்ஸ் கூறுகையில்” பயணத்தின் போது மக்கள் சரியாக தூங்குவதில்லை, சிலர் நேரமின்மை அல்லது பணத்தை சேமிப்பதற்காக காலை உணவை தவிர்க்கிறார்கள்.
இந்த சூழலில் இந்த வாசனை அனுபவம் அவர்களை எழுப்புவதோடு காலை உணவையும் நினைவூட்டும்” என்கிறார். இந்த பிரேக்ஃபாஸ்ட் அலார அனுபவம் அக்டோபர் 20, 2025 முதல் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே கிடைக்கும் என்ற அந்த ஹோட்டல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.