
Doctor Vikatan: என் வயது 44. இரவில் சோறு, வாழைக்காய், உருளைக்கிழங்கு போன்றவற்றைச் சாப்பிட்டுப் படுத்தால், மறுநாள் காலை எனக்கு கடுமையான உடல்வலி ஏற்படுகிறது. நெஞ்சுப்பகுதி, தோள்பட்டையில் வலி அதிகமிருக்கிறது. அது குணமாக, இரண்டு, மூன்று நாள்கள் ஆகின்றன. இந்த உணவுகள் வாய்வை ஏற்படுத்தும், அதனால் உடல் வலி வரும் என்கிறார்களே, அது உண்மையா அல்லது எனக்கு வேறு ஏதேனும் பிரச்னைகள் இருக்குமா?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த குடும்ப மருத்துவர் அருணாசலம்.
வாழைக்காய், உருளைக்கிழங்கு உள்பட, இப்படிப் பலரும் குறிப்பிடும் வாய்வுக் காய்கறிகள் எல்லாமே கார்போஹைட்ரேட் நிறைந்தவை. இரவில் சோறு சாப்பிடும்போது, கூடவே, உருளைக்கிழங்கு, வாழைக்காய் போன்று கார்போஹைட்ரேட் நிறைந்த காய்கறிகளை சைடிஷ்ஷாக வைத்துச் சாப்பிடும்போது, உடலில் சேரும் கார்போஹைட்ரேட்டின் அளவு மேலும் அதிகரிக்கும்.
அளவுக்கதிகமாக கார்போஹைட்ரேட் சாப்பிடும்போது அடித்துப் போட்டதுபோல ஆழ்ந்த உறக்கம் வரும். ஆழ்ந்த உறக்கத்திலிருந்து எழுந்திருக்கும்போது உடலின் பல இடங்களிலும் தசை வலி வரும். ஆழ்ந்த உறக்கத்தின்போது புரண்டு படுக்காமல், பெரும்பாலும் ஒரே பக்கமாகப் படுத்துத் தூங்குவோம். அந்த நிலையில் உடலை ஒரு பக்கமாக அழுத்திக் கொண்டு படுப்பதன் விளைவாக, நடு நெஞ்சுப் பகுதி, தோள்பட்டை போன்ற இடங்களில் வலி வர வாய்ப்புகள் அதிகம்.
நீரிழிவு உள்ளோருக்கு, ரத்தச் சர்க்கரை அளவு அதிகரித்தாலும் தோள்பட்டை வலி வரும். ரத்தச் சர்க்கரை அளவையே டெஸ்ட் செய்யாமல், மருத்துவரிடம் உடல்வலியை மட்டுமே சொல்வார்கள். அனுபவம் இல்லாத மருத்துவர்கள், வலி நிவாரணிகளைக் கொடுத்துக் கொண்டிருப்பார்கள்.

மற்றபடி, நீரிழிவு இல்லாதவர்களுக்கு, இப்படி தூக்கத்துக்குப் பிறகு உடல் வலி வருவதற்கு போதுமான தூக்கம் இல்லாதது, அப்படியே தூங்கினாலும் புரண்டு படுக்காமல் ஒரே பொசிஷனில் படுத்துத் தூங்குவது, ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள் செய்யாதது போன்றவையே முக்கிய காரணங்கள்.
காலையில் தூங்கி எழுந்ததும், கை, கால்களை நீட்டி மடக்குவது, உட்கார்ந்து எழுந்திருப்பது போன்ற பயிற்சிகளை கட்டாயம் செய்ய வேண்டும். அதன் பிறகு சிறிது நேரம் நடைப்பயிற்சியோ, சைக்கிளிங்கோ செய்யலாம். இப்படிச் செய்தாலே, தூக்கத்துக்குப் பிறகான உடல் வலி வராமல் தடுக்கலாம். மற்றபடி, உணவுகள் வாய்வை ஏற்படுத்தும், அதனால் வலி வரும் என்பதெல்லாம் விஞ்ஞான ரீதியாக உண்மையல்ல.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.