
தாதா சாகேப் பால்கே விருதுபெற்ற நடிகர் மோகன்லாலுக்கு கேரள அரசு சார்பில் பாராட்டுவிழா திருவனந்தபுரம் செண்ட்ரல் ஸ்டேடியத்தில் லால் சலாம் என்ற தலைப்பில் நடைபெற்றது. இந்த விழாவுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமை வகித்தார். இதில் அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர். இதில் கேரள முதல்வர் பினராயி விஜயன் பேசுகையில், “மலையாளத்தின் மகா நடிகர் மோகன்லால். கடந்த மாதம் 23-ம் தேதி ஜனாதிபதியிடமிருந்து தாதாசாகேப் பால்கே விருது பெற்றுள்ளார். மோகன்லாலுக்கு கிடைத்த அங்கீகாரம் மலையாள சினிமாவுக்கு கிடைத்த அங்கீகாரமாகும். இது ஒவ்வொரு மலையாளிக்கும் பெருமை சேர்ப்பதாகும். மலையாள சினிமாவுக்கு விரைவில் நூறு ஆண்டு ஆகப்போகிறது. அதில் 50 ஆண்டுகளாக மலையாள சினிமாவில் மோகன்லால் நிறைந்து நிற்கிறார். தினசரி வாழ்க்கையில் பலருக்கும் மோகன்லாலின் காதபாத்திரம் வந்துசெல்வது வழக்கமாகும்.
லாலேட்டன் என அழைப்பதன் மூலம் தங்கள் வீட்டில் ஒருவரைப்போல, பக்கத்துவீட்டு சகோதரனைப்போல மோகன்லாலை கேரள மக்கள் பார்க்கிறார்கள். 65-வது வயதிலும் அவரது நடிப்பு தொடருகிறது. 1986-ம் ஆண்டில் மட்டும் 34 சினிமாக்களில் நடித்துள்ளார். ஓரு வருடத்தில் இரண்டு மூன்று சினிமாக்களில் நடிப்பதே புதிய தலைமுறை நடிகர்களுக்கு அபூர்வமான ஒன்று. ஒரே ஆண்டில் 34 சினிமாக்களில் நடித்த மோகன்லாலை நினைத்து நாம் பெருமைப்படுகிறோம். நடுத்தர மக்களின் வாழ்க்கை பிரச்னைகளை கூறும் பல சினிமாக்களில் மோகன்லால் நடித்துள்ளார். நடிப்புக் கலையின் பாடப்புத்தகம் என அவரை புகழ்கிறார்கள். கேரளா எல்லையை கடந்து தமிழ், ஹிந்தி, என பல மொழிகளில் நடித்துள்ளார். நடிகர் மோகன்லாலுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்” என்றார்.
இந்த நிகழ்ச்சியில் ஏற்புரையில் மோகன்லால் பேசுகையில், “டெல்லியில் வைத்து தாதா சாகேப் பால்கே விதுதுபெற்றதைவிட அதிக உணர்ச்சிப்புர்வமாக திருவனந்தபுரத்தில் உங்கள் முன் நிற்கிறேன். அதற்கு பல காரணங்கள் உண்டு. நான் பிறந்து வளர்ந்து, வாலிபத்தையும், இளமைக் காலத்தை கழித்த மண் இது. என் அப்பா, அம்மா, சகோதரர் ஆகியோருடன் வாழ்க்கையின் பிரச்னைகளை தெரியாமல் நான் வாழ்ந்த மண். இங்குள்ள காற்று, மரங்கள், சாலைகள், பழைய பல கட்டடங்களும் என் நினைவுகளுடன் ஆத்மாவின் அங்கமாகும்.

என்னை நானாக மாற்றிய கேரளாவும், மலையாள மக்களும், அவர்கள் தேர்ந்தெடுத்த அரசும் எனக்கு பாராட்டுவிழா நடத்துகிறது. அதற்கு நன்றிகூற கடமைப்பட்டுள்ளேன். என் வாழ்கையிலும், கேரியரிலும் ஏற்றத்தையும், இறக்கத்தையும் பார்த்திருக்கிறேன். வானளாவிய புகழ்ச்சியும், பாதாளத்தைப்போன்ற பழிச்சொற்களும், விமர்சனங்களையும் நான் அனுபவித்திருக்கிறேன். இரண்டையும் நான் சமமாகத்தான் பார்க்கிறேன். நான் பெற்ற அனைத்து விருதுகளையும் கேரளாவுக்கும், கேரள மக்களுக்கும் சமர்ப்பிக்கின்றேன்” என்றார்.