
செங்கல்பட்டு: ‘கொள்கையற்ற அதிமுகவினால் பத்தாண்டுகள் பாழான தமிழ்நாட்டை மக்களின் ஆதரவுடன் மீட்டெடுத்து, இந்த நான்கு ஆண்டுகளில் வளப்படுத்தியிருக்கிறோம். வரலாறு காணாத வகையில், வளர்ச்சிப் பாதையில் நடைபோட்டுக் கொண்டிருக்கிறோம். இதை திராவிடத்துக்கு எதிரான பாஜகவும், "திராவிடம் என்றால் என்னவென்றே தெரியாது" என்று சொன்ன பழனிசாமியின் அதிமுகவும், மீண்டும் கபளீகரம் செய்யலாம் என்று பார்க்கிறார்கள்’ என தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகரில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், “ சுயமரியாதை இயக்கத்தின் தொடர்ச்சி திராவிடர் கழகம் என்றால், திராவிடர் கழகத்தின் நீட்சிதான் திராவிட முன்னேற்றக் கழகம். கருத்தியல் உறுதியோடு போராட்ட வாழ்வை வாழும் திராவிடர் கழகத் தோழர்கள் அனைவருக்கும் எனது ‘சல்யூட்!’ அதிலும், 92 வயது இளைஞராக, ஓய்வின்றி, தமிழ்ச் சமுதாயத்துக்கு வழிகாட்டிக் கொண்டிருக்கும் கி.வீரமணிக்கு என்னுடைய வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.