
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் அதிக தொழில்நுட்பத்துடன் அறிமுகமாகியுள்ள “ட்ரையோண்டா” பந்து குறித்த சிறப்பு அம்சங்கள் பற்றி இங்கே தெரிந்துக்கொள்ளலாம்.
2026 ஆம் ஆண்டுக்கான FIFA உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் அதிகாரப்பூர்வ பந்தான ட்ரையோண்டா – வை (Trionda) சர்வதேச கால்பந்து சம்மேளனம் ( FIFA) வெளியிட்டுள்ளது.
கனடா, மெக்ஸிகோ மற்றும் அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகள் இணைந்து 2026 உலகக்கோப்பையை நடத்துகின்றன. இதனை கொண்டாடும் வகையில் ஸ்பானிஷ் மொழியில் ”மூன்று அலைகள்” என்று பொருள்படும் Trionda என்ற பெயர் கொண்ட இந்த பந்தை பயன்படுத்த உள்ளனர்.
இந்த பந்தின் சிறப்பு அம்சங்கள் என்னென்ன?
இந்தப் பந்தின் வடிவமைப்பில் சிவப்பு, பச்சை மற்றும் நீலம் ஆகிய மூன்று வண்ணங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இவை போட்டியை நடத்தும் மூன்று நாடுகளின் பிரதிபலிப்பு வண்ணங்களாக உள்ளன. அது மட்டுமில்லாமல் கனடாவின் மேப்பிள் இலை, மெக்சிகோவின் கழுகு மற்றும் அமெரிக்காவின் நட்சத்திரம் ஆகிய மூன்று சின்னங்களும் அந்த பந்தில் இடம் பெற்றுள்ளன.
இதிலிருக்கும் முக்கிய அம்சமே பந்தில் பொருத்தப்பட்டுள்ள 500 HZ மோஷன் சென்சார் சிப் தான். இது குறித்து அடிடாஸ் தொழில்நுட்ப வல்லுநர் கூறுகையில் “நாங்கள் பந்திற்கு ஒரு இதயத்துடிப்பைக் கொடுத்துள்ளோம்” என்று கூறியிருக்கிறார்.
500 HZ மோஷன் சென்சார் சிப்பின் வேலை என்ன?
பந்துக்குள் இருக்கும் இந்த சென்சார்சிப் பந்தின் வேகம், சுழற்சி ஒவ்வொரு சிறிய அசைவுகளையும் நொடிக்கு 500 முறை பதிவு செய்து, மைதானத்தை சுற்றியுள்ள கணினிகளுக்கும் சிக்னல்களை அனுப்புகிறது. இந்த தொழில்நுட்பம் ஆட்டத்தை மேலும் நேர்மையானதாக மாற்ற உதவுகிறது..
வீரர்கள் கூட்டமாக இருக்கும்போது நடுவர்களின் பார்வையில் இருந்து மறைக்கப்படும் ஹேண்ட்பால் போன்ற தவறுகளைக் கூட இந்த சென்சார் துல்லியமாக கண்டறிந்துவிடுமாம்.
இந்த சிப், வீடியோ உதவி நடுவர் அமைப்புக்கு நிகழ் நேரத்திலேயே தரவுகளை அனுப்புகிறது. இதன் மூலம் ஆப்சைட் போன்ற முடிவுகளை மிகவும் வேகமாகவும் சரியாகவும் எடுக்க முடியுமாம்.
பந்தின் ஒரு பகுதியில் மட்டுமே இந்த சிப் பயன்படுத்தப்பட்டுள்ளது, மற்ற பகுதிகளில் கவுண்டர் பேலன்ஸ் அதன் சமநிலைக்காக பயன்படுத்தப்பட்டுள்ளன.
2022 ஆம் ஆண்டு கத்தார் உலகக் கோப்பையில் பயன்படுத்தப்பட்ட ‘அல் ரிஹ்லா’ பந்தில் இருந்த தொழில்நுட்பத்தின் மேம்பட்ட பதிப்பாக இந்த பந்து உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.