• October 4, 2025
  • NewsEditor
  • 0

இந்திய அணி கடந்த 2024-ல் டி20 உலகக் கோப்பை வென்ற கையோடு கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, ஜடேஜா ஆகியோர் சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றனர்.

அதைத்தொடர்ந்து, ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடிவந்த இந்த மூவரில் ரோஹித்தும், விராட் கோலியும், இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடரின் பாதியிலேயே டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தனர்.

சுப்மன் கில் (கேப்டன்) – ரோஹித் சர்மா

சர்வதேச கிரிக்கெட்டைப் பொறுத்தவரையில் கடைசியாக ரோஹித்தும், கோலியும் ஐ.பி.எல் தொடருக்கு முன்பாக மார்ச்சில் சாம்பியன்ஸ் டிராபியில் ஆடியிருந்தனர்.

அதில் ரோஹித் தலைமையில் ஆடிய இந்திய அணி 12 ஆண்டுகளுக்குப் பிறகு சாம்பியன்ஸ் டிராபியைக் கைப்பற்றியது.

இப்போது, ஒருநாள் போட்டியில் மட்டும் இன்னும் ஓய்வை அறிவிக்காமல் இருக்கும் ரோஹித்தும், கோலியும் 2027 ஒருநாள் உலகக் கோப்பையை வெல்லத் திட்டமிட்டிருக்கின்றனர்.

அவர்களின் கடைசி சர்வதேச தொடர் அதுவாகக் கூட இருக்கலாம்.

இருப்பினும், இப்போது கேள்வியென்னவென்றால் ரோஹித்தின் திடீர் டெஸ்ட் ஓய்வுக்குப் பின்னர் டெஸ்ட் கேப்டன்சி பொறுப்பை ஏற்ற சுப்மன் கில் இங்கிலாந்துக்கெதிரான டெஸ்ட் தொடரைச் சமன் செய்து கேப்டனாக தன் மீதான முதல் பார்வையை பாஸிட்டிவாக்கியிருக்கிறார்.

சுப்மன் கில் (கேப்டன்) - ரோஹித் சர்மா
சுப்மன் கில் (கேப்டன்) – ரோஹித் சர்மா

இதனால், ஐ.பி.எல்லுக்குப் பிறகு கிரிக்கெட் ஆடாத ரோஹித்தைக் காட்டிலும், ஐ.பி.எல்லுக்குப் பிறகு இங்கிலாந்து டெஸ்ட் தொடர், ஆசியக் கோப்பை, நடப்பு வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடர் எனப் பிஸியாக ஆடிக் கொண்டிருக்கும் சுப்மன் கில்லை, அணியின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு ஒருநாள் அணிக்கும் கேப்டனாக அறிவிக்க வாய்ப்பிருப்பதாகப் பேச்சு அடிபட்டன.

இத்தகைய சூழலில்தான், ஆஸ்திரேலியாவுக்கெதிராக அக்டோபர் 19-ம் தேதி தொடங்கும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ (BCCI) வெளியிட்டிருக்கிறது.

அதில், ஒருநாள் அணியில் சுப்மன் கில்லுக்கு கேப்டன் பதவியும், ஸ்ரேயஸ் ஐயருக்கு துணைக் கேப்டன் பதவியும் வழங்கப்பட்டிருக்கிறது.

ஒருநாள் தொடருக்கான அணி:

சுப்மன் கில் (கேப்டன்), ஸ்ரேயஸ் ஐயர் (துணைக் கேப்டன்), ரோஹித் சர்மா, விராட் கோலி, அக்சர் படேல், கே.எல்.ராகுல், நிதிஷ்குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, முஹமது சிராஜ், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, துருவ் ஜூரெல், ஜெய்ஸ்வால்.

டி20 தொடருக்கான அணி:

சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சுப்மன் கில் (துணைக் கேப்டன்), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, நிதிஷ்குமார் ரெட்டி, ஷிவம் துபே, அக்சர் படேல், ஜித்தேஷ் சர்மா, வருண் சக்ரவர்த்தி, பும்ரா, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, சஞ்சு சாம்சன், ரின்கு சிங், வாஷிங்டன் சுந்தர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *