• October 4, 2025
  • NewsEditor
  • 0

அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த ஜுபீன் கார்க் தலைமையிலான இசைக்குழு கடந்த மாதம் இந்தியா மற்றும் சிங்கப்பூர் இடையிலான 60 ஆண்டு தூதரக உறவை கொண்டாட சிங்கப்பூர் சென்று இருந்தது. இப்பயணத்தின் போது ஜுபீன் கார்க் மற்றும் அவரது குழுவினர் புனித ஜான் தீவில் படகு ஒன்றில் பயணம் செய்தனர். இப்படகு பயணத்தின் போது ஜுபீன் கார்க் கடலில் நீச்சலடிக்க குதித்ததாக கூறப்படுகிறது. இதில் அவர் நீரில் மூழ்கினார். அவர் உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் உயிரிழந்துவிட்டார்.

அவர் எவ்வாறு உயிரிழந்தார் என்ற சர்ச்சை எழுந்துள்ளது. இந்த மரணம் தொடர்பாக ஜுபீன் கார்க் மேலாளர் சித்தார்த் சர்மா மற்றும் விழா ஏற்பாட்டாளர் ஷியாம்கனு மகந்தா ஆகியோர் டெல்லியில் கைது செய்யப்பட்டு கவுகாத்திக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அவர்கள் இப்போது போலீஸ் காவலில் இருக்கின்றனர்.

அவர்கள் இருவர் மீதும் கொலைக்கு நிகரான வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜுபின் கார்க் இசைக்குழுவில் இடம் பெற்று இருக்கும் சேகர் ஜோதி கோஸ்வாமி இம்மரணம் குறித்து தெரிவித்து இருக்கும் தகவல்கள் மேலும் இம்மரணத்தில் சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இது குறித்து கோஸ்வாமி போலீஸில் கொடுத்துள்ள வாக்குமூலத்தில்,”இசைக்குழுவின் மேலாளர் சித்தார்த் மற்றும் விழா ஏற்பாட்டாளர் மகந்தா ஆகியோர் ஜுபின் கார்கிற்கு விஷம் கொடுத்திருக்கலாம். அவ்வாறு விஷம் கொடுத்துவிட்டு அதனை விபத்து மரணம் போல் மாற்றி இருக்கலாம். ஜுபின் கார்க் இறந்த அன்று சித்தார்த் சர்மாவின் நடவடிக்கைகள் அனைத்தும் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் இருந்தது. சிங்கப்பூரில் உள்ள பான் பசிபிக் ஹோட்டலில் என்னுடன் தங்கியிருந்த சர்மா சந்தேகத்திற்கிடமான வகையில் நடந்து கொண்டார்.

படகு பயணத்தின் போது சித்தார்த் வலுக்கட்டாயமாக படகை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டார். இதனால் நடுக்கடலில் அனைத்து பயணிகளுக்கும் ஆபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டது. படகு பயணத்தின் போது சிங்கப்பூரில் உள்ள அஸ்ஸாம் சங்க நிர்வாகியிடம் மது வகைகளுக்கு நீங்கள் ஏற்பாடு செய்யவேண்டாம் என்றும், தான் மட்டுமே மது ஏற்பாடு செய்து கொள்வேன் என்று சித்தார்த் தெரிவித்தார். கார்க் மூச்சுத்திணறி மூழ்கும் நிலையில் இருந்தபோது சித்தார்த், அவரை விட்டுவிடுங்கள், அவரை நீச்சலடிக்க விடுங்கள் என்று சொன்னார்.

கார்க் பயிற்சி பெற்ற சிறந்த நீச்சல் வீரர். அவர் எனக்கும், சித்தார்த்திற்கும் நீச்சல் கற்றுக்கொடுத்தவர். அப்படி இருக்கும்போது அவர் நீச்சலடிக்க தெரியாமல் நீரில் மூழ்கி உயிரிழந்திருக்க வாய்ப்பு இல்லை. சித்தார்த்தும், மகந்தாவும்தான் விஷம் கொடுத்திருக்கவேண்டும். அவர்கள் தங்களது சதித்திட்டத்தை மறைக்க திட்டமிட்டு சிங்கப்பூரை தேர்ந்தெடுத்துள்ளனர். இரண்டு பேரும் படகில் நடக்கும் எந்த சம்பவம் குறித்தும் வீடியோவை யாருக்கும் பகிர வேண்டாம் என்று கேட்டுக்கொண்டனர்.

ஜுபின் கார்க்கின் வாய் மற்றும் மூக்கில் இருந்து நுரை வந்தபோது உடனே மருத்துவ உதவிக்கு ஏற்பாடு செய்யாமல் நுரை வருவதைப்பற்றி கவலைப்படவேண்டியதில்லை என்று சித்தார்த் தெரிவித்தார். சித்தார்த் செயல்பாடுகளால்தான் ஜுபின் கார்க் சீக்கிரமே இறந்துவிட்டார்”என்று தெரிவித்தார். ஆனால் இந்த குற்றச்சாட்டுக்களை சித்தார்த் மறுத்துள்ளார். ஆனால் சாட்சிகளின் வாக்குமூலம், பண பரிவர்த்தனை விபரம், ஆதாரங்கள், ஆவணங்களின் அடிப்படையில் சித்தார்த் குற்றவாளி என்று முடிவு செய்ததாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இவ்விவகாரத்தில் அமலாக்கப்பிரிவு மற்றும் வருமான வரித்துறையும் விசாரிக்க இருக்கிறது. மகந்தா பினாமி பெயரில் சொத்துக்கள் வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது. அஸ்ஸாம் அரசு இந்த மரணம் குறித்து விசாரிக்க 10 பேர் கொண்ட சிறப்பு விசாரணைக்குழுவை அமைத்து இருக்கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *