• October 4, 2025
  • NewsEditor
  • 0

இயக்குநர் தங்கமணியின் `பேராண்டி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று (அக்டோபர் 3) நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் வி.சி.க தலைவரும், எம்.பி-யுமான டாக்டர் தொல். திருமாவளவன் கலந்து கொண்டார்.

தொடர்ந்து மேடையில் பேசிய திருமாவளவன், “படத்தில் இந்தக் காலத்திற்கேற்ற கதை இருக்கு என்று நினைக்கிறேன். விரும்பிய பெண்ணைத் திருமணம் செய்து வைக்கிற கதை பேராண்டி.

`பேராண்டி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா

திருமணம் என்றாலே இங்கு சாதி குறுக்கிடும். அகமணமுறைதான் இங்கு சமூகத்தில் இருக்கின்ற நடைமுறை. சட்டத்துக்குப் புறம்பான நடைமுறைதான். ஆனால், அதுதான் சமூக நடைமுறையாக இருக்கிறது.

ஒரே சாதிக்குள்தான் திருமணம் செய்ய வேண்டும் என்று நீண்ட காலமாக இருக்கிறது. சட்டம் அதைத் தடை செய்யவில்லை. ஆனால், பல்வேறு பிரச்னைகளுக்கு அது இடம் கொடுக்கிறது, ஆணவக்கொலைகள் நடக்கிறது.

அண்மைக்காலமாக திரைத்துறையைச் சார்ந்த நண்பர்கள், திரைப்பட இசைவெளியீட்டு விழாவுக்கு அழைக்கிறார்கள்.

படத்துலயாவது முதலமைச்சரா நடிப்போம்-னு ஒத்துக்கிட்டேன்!

அன்புத்தோழி என்ற திரைப்படத்தில் தம்பி ஒருவர் 6 மாதங்கள் போராடி என்னை நடிக்க வைத்தார்.

அப்புறம் தமிழரசன் என்ற படத்தில் 10 நாள் ஷூட்டிங் போனோம் அப்படியே நின்றுவிட்டது.

அதுக்கு முன்னாடி `கலகம்-னு’ ஒரு படம் அது கலகத்துலேயே முடிந்துவிட்டது. இயக்குநர் களஞ்சியம் போட்டி ஷூட் பண்ணாரு, அதோட முடிந்து விட்டது.

அப்புறம் மின்சாரம்-னு ஒரு படம். இதுல தமிழ்நாடு முதலமைச்சரா நடிச்சே ஆகணும்னு தயாரிப்பாளர் சொல்லிட்டாரு.

திருமாவளவன்
திருமாவளவன்

சரி படத்துலயாவது முதலமைச்சரா நடிப்போம்-னு ஒத்துக்கிட்டேன். கதைல தலையும் தெரியாது, வாலும் தெரியாது. என்னமோ அதுல பெருசா எனக்கு ஆர்வம் எட்டல.

சின்ன வயசுல இருந்தே திரைப்படங்களைப் பற்றி தவறான மதிப்பீடு உருவாகிடுச்சு.

அப்படி இருந்த என்னை இதுபோன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்கச் செய்வது, இந்தத் திரை உலகத்தின் வலிமை என்ன என்பதைப் புரிந்துகொள்ள பயன்படுகிறது.

தமிழக அரசியலில் திரைக் கவர்ச்சி இன்னும் குறையவில்லை!

தமிழ்நாடு அரசியலே தொடர்ந்து திரைக் கவர்ச்சியின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதைப் பார்க்க முடிகிறது.

எம்.ஜி.ஆருக்குப் பிறகு சிவாஜி, பாக்யராஜ், டி. ராஜேந்தர், விஜயகாந்த், சரத்குமார் எனப் பலபேர் கட்சி தொடங்கினார்கள்.

கலைஞரும் திரைத்துறையில் ஈடுபாடு உள்ளவர்தான். ஜெயலலிதாவும் திரைத்துறையிலிருந்து வந்தவர்தான். இன்றைய முதல்வரும் ஓரிரு திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

இப்போது விஜய் வரைக்கும் தமிழக அரசியலில் திரை உலகம் எந்த அளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது, திரைக் கவர்ச்சி இன்னும் குறையவில்லை எனும் நிலையை நாம் பார்க்கிறோம்.

திருமாவளவன்
திருமாவளவன்

இந்தியா முழுக்க திரைப்படங்கள் எடுக்கப்படுகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் சூப்பர் ஸ்டார்ஸ் இருக்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டுலதான் நிறைய ஸ்டார்ஸ் இருக்கிறாங்க.

வேறு எந்த மாநிலத்திலும் திரைத்துறை அரசியலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

சோஷியல் மீடியாவில் ஆழமாகச் சிந்திப்பவர்கள் இருக்கிறார்கள். அதில் ஒருவர், `ராணுவத்துறையில் வேலை செஞ்சிட்டு ரிட்டயர்டு ஆகிட்டு வாட்ச்மேன் வேலைக்குப் போறாங்க. திரைத்துறையில ரிட்டயர்டு ஆகுறவங்க சி.எம் ஆகுறாங்க. இப்படித்தான் இருக்கு தமிழ்நாட்டு அரசியல்’ என்று எழுதியிருந்தார்.

இன்னும் 200, 300 கோடி சம்பாதிக்க முடியும் என்றாலும் வி.ஆர்.எஸ் கொடுத்துவிட்டு வருகிறார்கள்.

ஏதோவொரு வகையில் திரைத்துறை தமிழர்களை ஆளுமை செய்கிறது, ஆதிக்கம் செய்கிறது.

ஒரு நல்ல படத்தைக் கொடுத்துவிட்டால்போதும் அடுத்து முதலமைச்சர் நாற்காலிதான் என்கிற எண்ணம்…!

இயக்குநர் முற்போக்காளராக இருந்தால் திரைப்படங்கள் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய சக்தியாக விளங்கும்.

ஓரிரு படங்களை வெற்றிப் படங்களாகக் கொடுத்துவிட்டால் அடுத்தது அரசியல்தான் என்ற நிலைக்குப் போகிறவர்களை நாம் பார்க்கிறோம்.

திரைத்துறை அந்த மாதிரியான உளவியலைக் கட்டமைத்திருக்கிறது. ஒரு நல்ல படத்தைக் கொடுத்துவிட்டால்போதும் அடுத்து முதலமைச்சர் நாற்காலிதான் என்கிற எண்ணத்தை அது உருவாக்குகிறது.

நாட்டில் முதலமைச்சர் பதவியும், பிரதமர் பதவியும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டிய தேவை இருக்கிறது.

கொள்கை ரீதியாக முன்னெடுப்பு செய்தாலும், சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதாக இருந்தாலும் பிரதமர் பொறுப்பில்தான் இருக்கிறது. அதற்குப் பெரிதாக ஆசைப்படுவதில்லை.

திருமாவளவன்
திருமாவளவன்

எல்லோருமே சி.எம் ஆக வேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறோம். கலெக்டர் கீழ இருக்கிற தாசில்தார் மாதிரிதான் இது.

பெரிதாகக் கொள்கை முடிவெல்லாம் இதில் எடுக்க முடியாது. அரசியலமைப்பின்படி உண்மையான ஆட்சி அதிகாரம் டெல்லியில்தான் இருக்கிறது.

தமிழர்களிடத்தில் யாரிடமும் பிரதமர் ஆகவேண்டும் என்கிற எண்ணமே வருவதில்லை.

பிரதமர் ஆகிவிட்டால் ஈழத்தமிழர் பிரச்னைக்கு நாம் தீர்வுகாண முடியும். முதலமைச்சரானால் அது செய்ய முடியாது.

முதலமைச்சர் ஆகிவிட்டால் ஈழத்தமிழர் பிரச்னையைத் தீர்த்துவிடலாம் என்று நினைக்கிறாங்க. அது முடியவே முடியாது. 30 முதல்மைச்சர்ல ஒரு ஆள் அவ்வளவுதான்.

545 எம்.பி – க்களில் 40 எம்.பி – க்கள்தான் இங்க இருந்து போறோம். மீத 500 பேர் இந்தியா முழுக்க இருக்கிறார்கள் அவர்களெல்லாம் சேர்ந்துதான் கொள்கை முடிவை உருவாக்க முடியும்.

ஜனநாயகம்தான் 20-ம் நூற்றாண்டின் மிகச்சிறந்த கண்டுபிடிப்பு!

ஜனநாயகம்தான் 20-ம் நூற்றாண்டின் மிகச்சிறந்த கண்டுபிடிப்பு. அதுதான் இன்றைக்கு நம்மைப் பேச வைக்கிறது, உரிமையைக் கோர வைக்கிறது.

இப்படி ஒரு படத்தை எடுக்க முடியும் என்கிற சுதந்திரத்தைக் கொடுக்கிறது. அந்த ஜனநாயக சிந்தனையை இன்னும் ஆழமாக மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.

பாகுபாடு கூடாது, பிறப்பின் அடிப்படையில் உயர்ந்தவன் தாழ்ந்தவன் கிடையாது, ஆண் பெண் சமம், பாலின பாகுபாடு கூடாது. இதையெல்லாம் ஒரு வசனத்தில் போறபோக்கில் சொல்லும்போது குழந்தை உள்ளத்தில் ஆழமாகப் பதியும்.

திருமாவளவன்
திருமாவளவன்

சாதிப்பெருமை பேசுவது பழமைவாதம். சாதியெல்லாம் வேண்டாம் ஜனநாயகமாக, சமத்துவமாக வாழ்வோம் என்று சொல்வது இடதுசாரி அரசியல், முற்போக்கு சிந்தனை.

கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தால்தான் இடதுசாரி, முற்போக்கு என்று அர்த்தமில்லை. ஜனநாயகத்தை நம்பினாலே அது இடதுசாரி, முற்போக்கு சிந்தனைதான்.

சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்தான் ஜனநாயகம். சுதந்திரமும், சகோதரத்துவமும் இருந்தால்தான் சமத்துவம் நிகழும். இதற்குத்தான் உலகம் முழுவதும் புரட்சி” என்று கூறினார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *