• October 3, 2025
  • NewsEditor
  • 0

தமிழகக் காவல்துறையில் சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி பதவிக்காகக் கடும் போட்டி நிலவும். ஆளுங்கட்சிக்கு வேண்டப்பட்ட சீனியர் டி.ஜி.பி-க்களில் ஒருவருக்கு அந்த வாய்ப்பு கிடைக்கும். தி.மு.க ஆட்சிக்கு வேண்டப்பட்ட சங்கர் ஜிவால், சட்டம் ஒழுங்கு டி.ஜி.பியாகப் பணியாற்றி வந்தார்.

இவரின் பதவிக்காலம் ஆகஸ்ட் 31-ம் தேதியோடு நிறைவடைந்ததையடுத்து அடுத்த டி.ஜி.பி யார் என்ற கேள்வி எழுந்தது. வழக்கமாக சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி ஒருவர் ஓய்வு பெறுவதற்கு முன்பே அடுத்த டி.ஜி.பி-யாக வரத் தகுதியானவர்களின் பட்டியலை தமிழக அரசு டெல்லியில் உள்ள யுபிஎஸ்சி-க்கு அனுப்பி வைக்கும்.

அதில் மூன்று அல்லது 5 பேரின் பெயர்களை தமிழக அரசுக்கு யுபிஎஸ்சி பரிந்துரைக்கும். அந்தப் பரிந்துரையில் ஆளுங்கட்சிக்கு வேண்டப்பட்ட ஒருவரை தமிழக அரசு டிக் செய்து, அவரை சட்டம் ஒழுங்கு டி.ஜி-பியாகப் பணியமர்த்தும். இதுதான் நடைமுறை.

ஆனால் காலதாமதமாகவே யுபிஎஸ்சிக்கு சீனியர் டி.ஜி.பி-க்களின் பட்டியலை தமிழக அரசு அனுப்பி வைத்தது. அதனால் யுபிஎஸ்சி-யிலிருந்து பட்டியல் வரக் காலதாமதமானதையடுத்து தற்காலிகமாகப் பொறுப்பு டி.ஜி.பி-யாக வெங்கட்ராமன் என்பவரை தமிழக அரசு நியமித்தது.

தற்காலிகமாக பொறுப்பு டி.ஜி.பி வெங்கட்ராமன்

இந்தப் பொறுப்பு டி.ஜி.பி நியமனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சிலர் நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்தனர். உச்ச நீதிமன்றத்தில் மக்கள் கண்காணிப்பகம் தொடர்ந்த வழக்கில், தமிழக அரசு அனுப்பியுள்ள சீனியர் டி.ஜி.பி-க்களின் பட்டியலை விரைந்து பரிசீலிக்க நீதிபதி உத்தரவிட்டார்.

அதைத் தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதத்தில் யுபிஎஸ்சி டெல்லியில் டி.ஜி.பி நியமனம் தொடர்பான மீட்டிங்கை நடத்தியது. இதில் தமிழக தலைமைச் செயலாளர் ,உள்துறைச் செயலாளர், பொறுப்பு டி.ஜி.பி ஆகியோர் பங்கேற்றனர். கூட்டத்தில் தமிழக அரசு அனுப்பிய பட்டியலில் இடம் பிடித்த இரண்டு சீனியர் டி.ஜி.பி-க்கள் மீது குற்றச்சாட்டுக்கள் உள்ளதால் அவர்களின் பெயர்களை பட்டியலிருந்து நீக்க வேண்டும் எனத் தமிழக அரசு அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டிருக்கிறது.

அதற்கு யுபிஎஸ்சி அதிகாரிகள், பெயர்களை பட்டியலிருந்து நீக்க வேண்டும் என்றால் ஆதாரங்களைக் கொடுங்கள் என்று தெரிவித்தாகச் சொல்லப்படுகிறது. இதையடுத்து அடுத்த மீட்டிங் அக்டோபர் இரண்டாவது வாரத்தில் நடைபெறும். அன்றைய தினம் தமிழக சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாக டி.ஜி.பி அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து டி.ஜி.பி அலுவலக சீனியர் ஐ.பி.எஸ் அதிகாரிகளிடம் பேசினோம்.

“தமிழக சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி நியமன விவகாரத்தை நேரடியாக உச்ச நீதிமன்றம் கண்காணித்து வருவதால் யுபிஎஸ்சியும் கூட்டத்தை நடத்தி தீர்வு காண நடவடிக்கை எடுத்தது. ஆனால் முதல் கூட்டத்தில் தமிழக அரசு அதிகாரிகள் கூறிய சில காரணங்களை யுபிஎஸ்சி ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால்தான் அடுத்த மீட்டிங் அக்டோபரில் நடத்தப்படவுள்ளது.

அந்தக் கூட்டத்தில் நிச்சயம் நல்ல முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கிறோம். பட்டியலிருந்து திடீரென இரண்டு சீனியர் டி.ஜி.பி-க்களை நீக்க வேண்டும் எனத் தமிழக அரசு கூறிய தகவலால் சம்பந்தப்பட்ட இரண்டு பேரும் ஷாக்காகியிருக்கிறார்கள். யுபிஎஸ்சியிடம் ஆதாரங்களைக் கொடுத்தால் மட்டுமே பட்டியலிருந்து பெயர்களை நீக்க முடியும்.

இது எல்லாம் காலதாமதப்படுத்துவதற்கான வேலை. தற்போதுள்ள சூழலில் டி.ஜி.பி சந்தீப்ராய் ரத்தோர், ஆளுங்கட்சிக்கு வேண்டப்பட்டவர் என்பதால் அவருக்கே வாய்ப்பு அதிகம். ஆனால் அவரை சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி நாற்காலியில் அமர விடாமல் ஒரு தரப்பு தடுத்து வருகிறது” என்றனர்.

ஐ.பி.எஸ். அதிகாரி
ஐ.பி.எஸ். அதிகாரி

யுபிஎஸ்சி அதிகாரிகள் வட்டாரத்தில் விசாரித்தபோது, “டி.ஜி.பி பேனல் மீட்டிங்கின் போது தமிழக அரசு சார்பில் தெரிவித்த காரணங்களுக்கு ஆதாரங்களைக் கேட்டிருக்கிறோம். அதில் சீனியர் டி.ஜி.பி ஒருவர் மீது ஏடிஜிபி ஒருவர் குற்றம் சாட்டியிருக்கிறார். அதுதொடர்பான விசாரணை இருப்பதாகக் கூறினார்கள்.

அதைப் போல இன்னொரு சீனியர் டி.ஜி.பி ஒருவர் மீது ஊழல் குற்றச்சாட்டுக்கள் இருப்பதாகத் தெரிவித்தனர். இந்த இரண்டு காரணங்களுக்கும் ஆதாரங்களைக் கேட்டிருக்கிறோம். அடுத்த கூட்டத்தில் நிச்சயம் பட்டியல் ஒப்புதல் பெறப்பட்டு விரைவில் தமிழக அரசுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *