
விழுப்புரம்: பாமக இளைஞர் சங்கத் தலைவராக கவுரவத் தலைவர் ஜி.கே.மணியின் மகன் தமிழ்குமரனை நிறுவனர் ராமதாஸ் மீண்டும் நியமித்துள்ளார். பாமக தலைவர் பதவியில் இருந்து வெளியேற்றப்பட்ட ஜி.கே.மணியை ஆறுதல்படுத்தும் வகையில், அவரது மகன் தமிழ்குமரனுக்கு மாநில இளைஞர் சங்கத் தலைவர் பதவியை நிறுவனர் ராமதாஸ் வழங்கினார்.
ஆனால், அன்புமணியின் எதிர்ப்பு காரணமாக தமிழ்க்குமரன் பதவியிலிருந்து விலகினார். பின்னர், ராமதாஸின் மூத்த மகள் ஸ்ரீகாந்தியின் மகன் முகுந்தன் இளைஞர் சங்கத் தலைவராக நியமிக்கப்பட்டார். இதற்கும் அன்புமணி கடும் எதிர்ப்புத் தெரிவித்துவந்த நிலையில், 5 மாதங்களில் முகுந்தனும் பதவி விலகினார். இந்த விவகாரம் தொடர்பாக ராமதாஸ்-அன்புமணிக்கிடையே கடும் மோதல் ஏற்பட்டது.