
இன்றைய காலக்கட்டத்தில் வீடு வாங்குவதும், கட்டுவதும் அவ்வளவு எளிதான விஷயம் அல்ல.
ஆசைக்கு வீடு வாங்கிவிட்டு… கட்டிவிட்டு கடனிலும், பணச்சிக்கலிலும் பலர் சிக்கித் தவிக்கிறார்கள். அதைத் தவிர்க்க என்னென்ன செய்யலாம் என்பதைப் பார்க்கலாம் வாங்க…
வீட்டுக் கடன்
1. உங்களது வீடு வாங்கும் அல்லது கட்டும் பட்ஜெட் உங்களுடைய ஆண்டு வருமானத்தின் ஐந்து மடங்கைத் தாண்டக்கூடாது.
உதாரணத்திற்கு, பிடித்தங்கள் போக, உங்களது கைகளுக்கு மாதம் ரூ.75,000 வருமானம் வருகிறது என்று வைத்துக்கொள்வோம். அப்போது உங்களுடைய மொத்த ஆண்டு வருமானம் ரூ.9 லட்சம். இதன் ஐந்து மடங்கு ரூ.45 லட்சம். ஆக, உங்களுடைய வீட்டின் பட்ஜெட் இதற்குள் இருப்பது நல்லது.
2. வீட்டைக் கடன் வாங்கி தான் வாங்குகிறீர்கள், கட்டுகிறீர்கள் என்றால்… குறைந்தது 20 சதவிகித டவுன் பேமென்ட்டையாவது கையில் வைத்துகொள்வது. இதையும் கடன் வாங்கினால் மிகவும் சிரமம்.
3. உங்களது வீட்டுக் கடனின் மாத இ.எம்.ஐ உங்களது குடும்பத்தின் மொத்த வருமானத்தின் 35 சதவிகிதத்தைத் தாண்டக்கூடாது. இதற்கு மேல் இ.எம்.ஐ தாண்டினால், நீங்கள் மாத செலவுகளைக் குறைக்க வேண்டியதாக இருக்கும். அதனால், கவனம்.
சரியாக…
4. வீடு சம்பந்தமான பத்திரப்பதிவுகள், ஆவணங்களுக்கான கட்டணம் ஆகியவற்றை உங்களுடைய கையில் இருந்து செலவு செய்வதுபோல பார்த்துகொள்ளுங்கள். இது பின்னாள்களில் ஏற்படும் தேவையில்லாத சுமைகளைக் குறைக்கும்.
5. ஒவ்வொரு மாதமும் சரியாக இ.எம்.ஐ கட்டுவது, குறித்த நேரத்திற்குள் கடனைக் கட்டுவது என அவற்றில் அதிகம் கவனம் செலுத்துங்கள்.
6. முடிந்தளவுக்கு உங்களது பட்ஜெட்டிற்குள்ளேயே வீட்டை வாங்கவோ அல்லது கட்டவோ பாருங்கள். இதற்கு சரியான திட்டமிடல் இருந்தாலே போதும்.

10 மாதத்திற்கான பிளான்
7. வீட்டிற்கான அலங்கர மற்றும் ஆடம்பரப் பொருள்களை உடனே வாங்கிக் குவித்துவிடாதீர்கள். வீட்டிற்கு குடிபோய் சில நாள்களுக்குப் பிறகு, தேவை அறிந்து அவற்றை செய்யுங்கள்.
8. வீட்டுக் கடனுக்கான ஆண்டுகாலத்தை முடிந்தளவிற்கு குறைவாகவே பாருங்கள். இதன் மூலம் சீக்கிரமே கடனில் இருந்து மீளலாம்.
9. உங்களுடைய பட்ஜெட்டிற்குள், உங்களுடைய தேவைகளுக்கு ஏற்ப ஒரு வீடு அமைய நன்கு தேடிப்பார்த்து வாங்கவும். உங்களுடைய கனவு இல்லத்திற்காக கொஞ்சம் அலைந்தாலும் தவறில்லை.
10. எதிர்பாராத சூழல்களைத் தவிர்க்க, முன்னரே 10 மாதத்திற்கான தேவை செலவுகளுக்கான பணத்தை எமர்ஜென்சி ஃபண்டில் சேர்த்துக்கொள்ளுங்கள். இதில் இ.எம்.ஐ, வீட்டு மளிகை செலவு, மருத்துவ செலவு, குழந்தைகளின் படிப்பு செலவு என அனைத்தையும் அடக்கியிருக்க வேண்டும்.