• October 3, 2025
  • NewsEditor
  • 0

சென்னையைச் சேர்ந்த அஜீஸ் என்ற 25 வயது இளைஞர், பெங்களூருவில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

ஆயுத பூஜைக்காக விடப்பட்ட தொடர் விடுமுறையில் கேரளாவுக்குச் செல்ல முடிவெடுத்த அஜீஸ், சென்னையில் இருக்கும் தன்னுடைய நண்பர்கள் சம்சுதீன், தீபக், ரிஷி, மோகன்ராஜ் உள்ளிட்டவர்களையும் அழைத்திருக்கிறார்.

அதன்படி அக்டோபர் 3-ம் தேதி 5 பேரும் அதிகாலை 4.30 மணிக்கு காரில் சென்னையில் இருந்து மூணாறு நோக்கிப் புறப்பட்டனர். காரை அஜீஸ் ஓட்டிக் கொண்டிருந்தார்.

விழுப்புரம் விபத்தில் தீப்பிடித்து எரிந்த கார்

சுமார் 6.40 மணிக்கு சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விக்கிரவாண்டி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் இருந்த தடுப்புக்கட்டையில் மோதியது.

அதையடுத்து சுமார் 50 மீட்டர் தூரம் வரை சாலையில் தறிகெட்டு ஓடிய கார், எதிரில் சென்றுகொண்டிருந்த லாரியின் பின்னால் மோதி அப்பளமாக நொறுங்கியது.

அதே நேரத்தில் காரின் பின்பக்கத்தில் திடீரென தீப்பபற்றி எரிய ஆரம்பித்தது. அந்த சத்தத்தைக் கேட்டு ஓடிய அப்பகுதி மக்கள், காருக்குள் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அஜீஸ், தீபக் இருவரையும் மீட்டனர்.

தொடர்ந்து தங்கள் உயிரைப் பொருட்படுத்தாத அப்பகுதி மக்கள், கார் எரிந்து கொண்டிருந்தபோதும் சம்சுதீன், ரிஷி, மோகன்ராஜ் உள்ளிட்ட மூன்று பேரையும் மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

ஆனால் அவர்கள் மூவரும் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டிருந்தனர். தொடர்ந்து அஜீஸ், தீபக் இருவரையும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.தகவலறிந்து அங்கு வந்த தீயணைப்புப் படையினர் தீயை அணைத்தனர்.

அதேபோல சம்சுதீன், ரிஷி, மோகன்ராஜ் மூவரின் சடலங்களை மீட்ட போலீஸார், உடற்கூராய்வு சோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்தில் உயிரிழந்தவர்கள்

இந்த சம்பவம் குறித்து நம்மிடம் பேசிய விக்கிரவாண்டி போலீஸார், “எங்கள் முதல் கட்ட விசாரணையில், காரின் இடதுபுறத்தில் இருந்த பின்புற டயர் வெடித்ததால் விபத்து ஏற்பட்டிருக்கிறது. அதில் நிலை தடுமாறிய கார் சாலையில் தறிகெட்டு ஓடியிருக்கிறது.

அப்போது பெட்ரோல் இருந்த பகுதியும் சேதமானதால், டயரில் பிடித்த தீ காருக்குள்ளும் மளமளவெனெ பரவியது. அதையடுத்து சில நிமிடங்களில் கார் முழுவதுமான எரிந்துவிட்டது. ஆனால் உயிரிழந்த மூவரும் தீயில் கருகியதால் இறக்கவில்லை.

அதற்கு முன்பே ஏற்பட்ட விபத்திலேயே உயிரிழந்திருக்கின்றனர். தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அஜீஸ், தீபக் இருவரிடமும் விசாரணை செய்தபிறகே, விபத்துக்கான முழு காரணமும் தெரிய வரும்” என்றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *